Play and watch event

இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சி

-மு.நித்தியானந்தன்-

ஜரோப்பாவின் புலம்பெயர்ந்த தமிழர்களின் கலாச்சாரத் தளத்தில் இலக்கியச் சந்திப்பு தீர்க்கமான பங்கினை வகித்திருக்கிறது. ஜெர்மனியில் வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகைகளின் ஆக்கங்கள் குறித்த விமர்சனக் களமாகவே இலக்கியச்சந்திப்பு தோற்றம் கண்டது. விமர்சன சுதந்திரமும் திறந்த விவாதப்போக்கும் இலக்கியச் சந்திப்பின் அடிநாதமாக அமைந்தன. அரசியலின், இலக்கியத்தின், ஏக போக கருத்தாடல்களின் சட்டாம்பித்தனங்களுக்கு இலக்கியச் சந்திப்பு பெரும் சவாலாகவே விளங்கியது. அதிகரா தர்பார்களின் அகங்காரங்களும் ஆணவ முனைப்புகளும் இலக்கியச் சந்திப்பினை வெற்றி கொள்ள முடிந்ததில்லை. மாற்றுக் கருத்துக்களை திறந்த மனதோடு கௌரவித்து விவாதிக்கும் உயர் பண்பின் தளமாக இலக்கியச் சந்திப்பு செயற்பட்டு வந்துள்ளது. ஜனநாயக மரபுகளைப் பேணியும் தனிமனித சுதந்திரங்களைக் கௌரவித்தும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலக்கியச் சந்திப்பு அதன் சகல நிகழ்வுகளிலும் செயல்பட்டுள்ளது.

புகலிட இலக்கியம் குறித்த காத்திரமான கருத்துப் பரிமாறல்களின் பட்டறையாக இலக்கியச் சந்திப்புகள் கோலம் கொண்டிருந்தன. பெண்ணியம், எதிர்ப்பு இலக்கியம், மலையக மக்கள், முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினை போன்ற அம்சங்களிலும் இலக்கியச் சந்திப்பு தனது கவனத்தை விஸ்தரித்து வந்திருக்கிறது. புகலிடங்களில் வெளியாகும் நூல்களும் ஆக்கங்களும் இலக்கியச் சந்திப்பின் முதன்மை அக்கறைக்குரியனவாக திகழ்ந்திருக்கின்றன.
அரசியலிலும் இலக்கியத்திலும் முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட செயற்பாட்டாளர்களின் பியிலரங்காக இலக்கியச் சந்திப்பு தன்னை வரித்துக்கொண்டது.
விசாக் கெடுபிடிகளும் பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலும்கூட எல்லை கடந்து இந்த இலக்கியச் சந்திப்புக்களில் ஆர்வலர்கள் துணிச்சலோடு வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இலக்கியச் சந்திப்பு இறுக கட்டமைக்கப்பட்ட அமைப்பு அல்ல. மத்திய குழுக்களும் கிளைகளும் கொண்ட ஸ்தாபனமும் அல்ல. யாப்பின் பாதையில் சென்ற பயணமும் இல்லை.
இலக்கியச் சந்திப்பினை வெறும் பேச்சுக் கடையாக விமர்சித்தவர்கள் உண்டு. இதனை பூரண அரசியல் இயக்கமாக மாற்றிவிட வேண்டும் என்று அவசரப்பட்டவர்கள் உண்டு. ஓரு அரசியல் கட்சியின் செயற்பாடுகளை பட்டியல் இட்டு அதனை ஏன் இலக்கியச் சந்திப்பு செயற்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பி சந்தோசப்பட்டுக் கொண்டவர்கள் உண்டு. கூடிச் சந்தித்து பேசிக்கதைத்து சாதித்தது என்ன என்ற தராசுப் படிக்கல்லோடு வந்தவர்கள் உண்டு. இலக்கியச் சந்திப்பின்மீது விஷமத்தனமான பரப்புரை மேற் கொண்டு தங்களின் காழ்ப்புணர்வுகளை கக்கியவர்கள் உண்டு. ஏக போக அதிகார மையங்களின் எதர்ப்புக் கணைகளை இலக்கியச் சந்திப்பு தொடர்ச்சியாகச் சந்தித்திருக்கிறது.
பல்வேறு விமர்சனங்கள,; எதிர்ப்புகள், பழிப்புரைகள், பரப்புரைகள் அனைத்தையும் மேவி ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, கனடா ஆகிய நாடுகளில் இதுவரை 32 இலக்கியச் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமை புகலிட இலக்கியப் போக்கில் குறிப்பிடத்தக்கதாகும். 1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஹேர்ண நகரில் ஆரம்பமான இலக்கியச் சந்திப்பு 18 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. இலக்கியச் சந்திபபின் இந்த நீண்ட பயணத்தில் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், சி.புஸ்பராஜா போன்ற இலக்கிய ஆளுமைகளின் கம்பீரமான பணியினை இலக்கியச் சந்திப்பு நினைவு கூர்கிறது. கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் மனிதாபிமானிகளின் சங்கமமாக இலக்கியச் சந்திப்பு செயற்பட்டு வந்திருப்பதே அதன் மிகப்பெரும் பலமாகும்.
(இலக்கியச் சந்திப்பின் 33வத தொடர் பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பல்கலைகழகத்தில் செப்டடம்பர் மாதம் 23-24 திகதிகளில் "ஈழத்தமிழ் இலக்கியத்தில் மனித உரிமை" என்ற தலைப்பின் கீழ் நடந்தேறியுள்ளது. அதனையொட்டிய சிறு விவரண தொகுப்பிலிருந்து.)


நன்றி - இனி (டென்மார்க்)

0 comments:

கருத்துரையிடுக