Play and watch event

33வது இலக்கியச்சந்திப்பு

ராஜேஸ் பாலா (லண்டன்)
(நன்றி -ஊடறு)
மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் சேர்ந்து நடத்தும் இலக்கியச்சந்திப்பின் 33வது தொடர் செப்டம்பர் 23,24ம் திகதிகளில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள், ஓவியர்கள், பெண்ணியவாதிகள் என்று பலதரப்பட்ட படைப்பாளிகள் எட்டு நாடுகளிலிருந்து வந்து பங்குபற்றினார்கள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தலைமையில் இச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் நடக்கும் வன்முறைகளால் இறந்த மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது.

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேசிய செல்வி ஜாஸ்பிர் பனசார், பொது ஸ்தாபனங்களின் சேவைகளுக்கு உதவி செய்யத் தாங்கள் எப்போதும் தயாராயிருப்பதாகச் சொன்னார். நியுஹாம் கவுன்சிலின் அங்கத்தவரான இலங்கைத் தமிழர் பால் சத்தியநேசன் தனது வாழ்த்துரையை வழங்கினார்.
கடந்த வருடம் பிரான்சில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றிய மறைந்த சி.புஸ்பராஜா பற்றி லக்ஷ்மியும், டென்மார்க்கைச் சேர்ந்த முல்லையூரான் பற்றி தாஸ் உம் நினைவுகூர்ந்து படைப்பாளிகளான அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கையின் இன்றைய சூழ்நிலையில், விளிம்பு நிலை மக்கள் என்று அடையாளம் காணப்படுவோரில் பெண்கள், குழந்தைகள், அகதிகள், இன ஒடுக்கலுக்கு உள்ளாகும் முஸ்லிம் மக்கள், சாதியின் பெயரால் அடக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் (தலித்), இன்னும் சரியாகச் சம உரிமையற்று வாழும் மலையகத் தமிழர் என்று பலர் அடங்குவர்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் தளமாக இந்த இலக்கியச்சந்திப்பு இருந்து வருகிறது கடந்த 32 சந்திப்புக்களிலும், உலகின் பல பாகங்களிலுமிருந்து பல ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பெண்ணியவாதிகள், மனித உரிமைவாதிகள் என பலர் பங்குபற்றியிருக்கிறார்கள். தற்போது நடந்து முடிந்த 33வது சந்திப்பில் "ஈழத்துப் படைப்புக்களும் மனித உரிமையும்“ என்ற விடயம் மையக் கருத்தாக இருந்தது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் மனித உரிமைக் குரலுக்கு வித்திட்ட இச் சந்திப்பின் ஆரம்பமும் இன்றைய வளர்ச்சியும் பற்றி ஜேர்மனியிலிருந்து வந்த சந்தூஸ்குமார் பேசினார். அடக்கப்படும் சக்திகளுக்கெதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் தளமாக இலக்கியச் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் ஆயுதம் ஏந்தாதவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை 85ம் ஆண்டுக்குப் பின் வந்த புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள் முன்வைத்தன.
அப்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் புகலிட இலக்கியமும் பற்றி சர்ச்சை நடந்தது.. இன்று இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் தொடரும் வன்முறைகளால் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் பல தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து 1991ம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டுப் புத்தளப் பகுதியில் அகதிகளாய் வாழும் முஸ்லிம் மக்களினதும் முஸ்லிம் மக்களைப் பற்றியதுமான படைப்புக்களும் புலம்பெயர்ந்த படைப்புக்கள்தான். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து இருப்போரின் துயரும் புத்தளத்தில் புலம்பெயர்ந்து இருப்போரின் துயரும் அடிப்படையில் ஒன்றுதான். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புதிய நாட்டு மொழிக்கும் கலாச்சாரத்திற்கும், இனவாதத்திற்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.
தங்கள் படைப்புக்களில் தங்களின் பழைய வாழ்க்கையை எண்ணி ஏங்கும் துயரத்தை பல புலம்பெயர்ந்தோர் படைப்புக்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும்; தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தையும் புரிந்து கொண்டு, இணைந்துகொண்டு படைக்கப்படும் புகலிட இலக்கியம் பற்றியும் உதாரணங்களுடன் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன
புகலிடத்தில் தலித் இலக்கியம் பற்றிப் பாரிசிலிருந்து வந்த தேவதாசன் பேசினார். பஞ்சமர் கதைகளின் மூலம், சாதி முறை சொல்லி பிரிக்கப்பட்டு அடக்கிவைத்திருந்த மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் வடிவில் வெளிப்படுத்தித் தலித் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டிய டானியல் இன்று 'தலித் இலக்கியத்தின்' பிதாமகனாகக் கருதப்படுவதையிட்டுக் கருத்துக்கள் பகிரப்பட்டன. அவரைத் தொடர்ந்து, பெனடிக்ட் பாலன், அகஸ்தியர் போன்றோர் தலித் மக்களின் இலக்கியத்துக்குச் செய்த பணியும் உரையாடப் பட்டது.
"கலாச்சாரத் தளத்தில் பெண்களின் போராட்டம்" என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வந்திருந்த சுல்பிகாவும் சுமதி ராஜசிங்கமும் ஆழமான பல கருத்துக்களைச் சொன்னார்கள். கலாச்சாரம் யாருடையது, எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த சமயத்தை மையமாகக் கொண்டது என்பது பிரச்சினையல்ல, பெண்களை எப்படி அடக்கி வைத்திருக்கிறது அந்தக் கலாச்சாரம்… பெண்களைப் பற்றிய கலாச்சாரக் கோட்பாடுகள் பெண்களை அடக்கும் சக்திகளாக ஆண்களால் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன… என்ற கருத்தில் சுல்பிகா பல விடயங்களைப் பேசினார். இந்தக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பெண்களின் படைப்புக்களையும் உதாரணங்களாக முன்வைத்தார். இந்துக்களாயிருந்தாலும், முஸ்லிம்களாயிருந்தாலும், கிறிஸ்தவர்களாயிருந்தாலும் பல நாடுகளில் பெண் அடக்குமுறைக்கு அவர்களின் பாதுகாப்புக்கு என்று நிர்ணயித்து வைத்திருக்கும் சமுதாயத்தின் கலாச்சாரக் கோட்பாடுகளே ஆயுதங்களாகப் பாவிக்கப்படுகின்றன என்று கூறினார்.
பெண்ணியக் கருத்தரங்கைத் தொடர்ந்து புகலிட வாழ்வில் இளம் தலைமுறையினரின் அடையாளம் என்ற தலையங்கத்தில் நோர்வேயிலிருந்து வந்த அருள்நேசன் தனது உரையைத் தொடர்ந்தார். தமிழ்த் தேசியக் கோட்பாட்டுக்கு அப்பால், புலம்பெயர்ந்த நாடுகளில் தங்கள் அடையாளங்களை இளம் தலைமுறை தேடும், தேடுகிறது என்றார்.
இவரின் கருத்துக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர்களால் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். அவர் தனது உரையில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார். அதாவது, ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தபோது, புலம்பெயர்ந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும் புதிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கையைச் சரிசெய்து கொள்ளவும் ஆங்கில மொழி அவர்களுக்கு உதவி செய்தது. ஆனால், மொழி தெரியாத நாடுகளுக்குள் குடிவந்தவர்களுக்குத் தங்களின் வாழ்க்கையைச் சீராக அமைக்க எத்தனையோ தடைகள் இருந்தன. அத்துடன், ஏககாலத்தில் பெரும் தொகையில் தமிழர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குக் குடிபெயர்ந்தது இலங்கையில் -தமிழர்களுடன்- சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைமுறையையே தொடர உந்து கருவாக இருந்தது. தமிழ்ப் பாடசாலைகள், கோயில்கள் என்பன தொடங்கப்பட்டன.
தங்களின் தமிழ்க் கலாச்சாரத்தைத் தங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நம்பினர். ஆனால் புலம்பெயெர்ந்த நாடுகளில் பிறந்த பல குழந்தைகள் பாடசாலைக்குப் போகமுன்னர் தமிழ்க் கலாச்சாரத்தையும், பாடசாலைக்குப் போகத் தொடங்கியதும் வேறு கலாச்சாரத்தையும் முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது. இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் பல கருத்துவேறுபாடுகளும் தத்துவ முரண்பாடுகளும் தோன்றுகின்றன.
தங்கள் குழந்தைகளைத் 'தமிழ்க் குழந்தைகளாக' பாதுகாப்பதற்கும், தமிழ்க் கலாச்சார அளவுகோலில் எடைபோடவும் நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். தமிழ்ப் பிள்ளைகள் மற்றவர்களைவிட கெட்டிக்காரர் என்பதைக் காட்ட குழந்தைகள் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ அல்லது சட்ட வல்லுனராகவோ படிக்கவேண்டும் என்ற மனோபாவத்துள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய படிப்பு முறைகளோ 'உனக்குப் பிடித்த படிப்பை, உனக்குச் சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைக்கத் தக்க வழியை நீயே தீர்மானிக்க வேண்டும்' என்ற ரீதியில் படிப்பு முறைகளை வழிவகுத்திருக்கிறது. இந்த அறிவுரையின் தாக்கம் தமிழ்க் குழந்தைகளுக்கும் வருகிறது. இதற்கு லங்கா ராணி புத்தகத்தை எழுதிய அருளரின் மகள் மியா என்பவர் இன்று உலகம் தெரிந்த பொப் பாடகியாயிருப்பது ஒரு உதாரணமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மக்களுக்குமுள்ள சுதந்திரம் தங்களுக்கும் தேவை என்று காட்டுகிறார்கள். இதனால் பல கலாச்சார மோதல்கள் வருகின்றன. ஒரு சில தமிழ் இளைஞர்கள், காதில் தோடும் நீண்ட தலைமுடியுமாக இருப்பதை பல பெற்றோர் அவமானகரமான விடயமாகக் கருதுகிறார்கள். இளைஞர்களின் இந்தச் செயல்கள் அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி என்று உணர்ந்து கொள்ளாமல், தங்கள் குழந்தைகள் தங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அவமானம் செய்வதாக நினைத்து பல பெற்றோர் மனவருத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால் தாங்கமுடியாதிருக்கிறது. பெற்றோருக்கு மனவருத்தம் கொடுக்க விரும்பாத காரணத்தால், தங்களுக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளாமல் பல பெண்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கிறார்கள், அல்லது தனக்கு விரும்பாத மனிதனைத் திருமணம் செய்துவிட்டுத் துன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இது விவாகரத்திலும் போய் முடிந்துவிடுகிறது. மேற்கு நாட்டுக் கலாச்சாரம் தங்கள் பெண்குழந்தைகளின் 'கற்புக்கு' பங்கம் உண்டாக்கிவிடும் என்ற பயத்தில், சில ஆபிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே அவர்களின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடவும் சில தமிழ்ப்பெற்றோர் முயற்சிப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் நாள் சிவலிங்கத்தின் வரவேற்புரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து "மனித உரிமையும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களும்“ என்ற தலைப்பில் திரு மு. நித்தியானந்தன் உரைநிகழ்த்தினார். இரண்டாம் உலகயுத்தம் நடந்தபின் மனித உரிமைகளுக்கு எதிரான பல விடயங்களைச் செய்து யூதர்களைக் கொன்று குவித்த கிற்லரின் அடிவருடிகளை நியுரம்பேர்க் நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்த செப்டம்பர் மாதத்தில் மனித உரிமை சம்பந்தமான இந்தச் சந்திப்பும் நடப்பது பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு தனது உரையை ஆரம்பித்தார்.
மலையக மக்களின் உரிமைகளுக்காகச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிய பலரை மேற்கோள் காட்டி ஆழமான பல கருத்துக்களை முன்வைத்தார். 1947 இல் மலையக மக்களின் குடியுரிமை பறிபோக "உதவிசெய்த“ தமிழ்த் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களைத் தமிழர்களில் ஒரு குழுவாகப் பார்க்காமல், தங்களிலுமிருந்து வேறுபட்ட 'அவர்களாகப்' பார்த்து வேற்றுமை காட்டிய "ஈழத்துத் தமிழ்க் காந்தி“ எஸ்,ஜே.வி செல்வநாயகம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது..
அத்துடன், இந்திய பாதுகாப்புப்படை தமிழ்ப் பகுதிகளில் ஆயுதங்களுடன் கோலோச்சியபோது, "தமிழ்ப் பகுதிகளில் தமிழர்கள் உயிர்வாழ்வது அவர்களின் (தமிழர்களின்) உரிமையல்ல, இந்தியப்படை கொடுத்த சலுகை“ என்று சொன்ன வசனங்கள் சந்திப்பில் பங்கு பற்றியவர்கள் மத்தியில் பெரிய விவாதங்களைத் தோற்றுவித்தது. தமிழ்ப் பகுதிகளில் இன்றும் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் உரிமை கிடையாது. அந்தச் சலுகை, ஆயுதம் தாங்கியோரினதும் ஆட்சியிலிருப்போரினதும் சலுகையாகத்தான் இருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் இலக்கியச் சந்திப்பின் கடைசி அமர்வாக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த, தினகரன் ஆசிரியரும், மூன்றாவது மனிதன் பத்திரிகை ஆசிரியருமான திரு மஹ்ருவ் பவுசர் தனது கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு இலங்கை முஸ்லிம்களின் லண்டன் அமைப்பைச் சேர்ந்த திரு பதுறஷமான் தலைமை வகித்தார்.
மேலும் பவுசர் தனது உரையில் இலக்கியச் சந்திப்பிற்குத் தன்னை அழைத்ததற்கும், இலக்கிய சந்திப்புக்கள் மூலம் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை முன்னெடுப்பதற்கும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் சொன்னார். அவர் தனது உரையில் பின்வரும் கருத்துக்கள் சார்ந்த விடயங்களைப் பேசினார்.
"விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை நிலை|| இலக்கியங்கள், கலைப் படைப்புக்கள் மூலம் இலங்கையில் வாழும் மூன்று இனங்களினதும் பன்முகப் பிரச்சினைகளை முன்வைக்கிறது. வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் படைப்புக்களில் அவர்கள் வெளிப்படுத்துவது என்ன? எங்கள் நாட்டில் எம் மக்கள் பலர் அடிப்படை உரிமையற்றவர் களாகத்தான் வாழ்கிறார்கள். ஊடகங்கள் உண்மையிலிருந்து நழுவி, பொய்மைகளைத் திரித்து எழுதுகின்றன. உயிர்களைப் பற்றிய அச்சம் அங்கு பெரிதாகவிருக்கிறது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்னும் மிகவும் கசப்பான, வேதனையான உணர்வுகளுடன்தான் வாழ்கிறார்கள். இந்த வரலாற்றுத் தவறைச் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வெளியேற்றலால் சமுதாயச் சிதறல்கள் நடந்திருக்கின்றன. மக்களாகிய நாங்கள் வாழத்தான் பிறந்திருக்கிறோம்.
மனித உணர்வுகளை வெளிப்படுத்த இலக்கிய வடிவங்கள் உதவி செய்கின்றன. நவீன கவிதையுலகில் பல முஸ்லிம் படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களைக் கவிதையாக்கியிருக்கிறார்கள். 80ம் ஆண்டு தொடங்கிய விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் அந்த விடுதலைக்குத் தங்களை இணைத்துக் கொண்டு போராடிய முஸ்லிம் போராளிகள் அவர்கள் இணைந்திருந்த விடுதலைக் குழுவினாகளால்; படுகொலை செய்யப்பட்டார்கள். 1991ம் ஆண்டு 24 மணித்தியாலங்களில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். விடுதலைக்குப் போராடிய 191 முஸ்லிம் போராளிகள், அவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஒட்டுமொத்தமாகக் கொலைசெய்யப் பட்டார்கள். ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. தமிழ் எங்கள் தாய்மொழி, நாங்கள் வாழும் வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம். இதில் எந்த விட்டுக்கொடுப்பும் ஒருநாளும் இருக்காது.
வடக்கில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளையும், மூதூரில் நடந்த அநியாயங்களையும் இன்று பொத்துவிலில் அரச படையினரால் செய்யப்பட்ட முஸ்லிம் படுகொலைகளையும் இலக்கியச் சந்திப்பில் கண்டிக்கிறார்கள், எதிர்க்குரல் கொடுக்கிறார்கள். இதுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். முஸ்லிம்களின் நிலை பற்றி நுஹ்மான், சோலைக்கிளி போன்ற முஸ்லிம் கவிஞர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளால் முஸ்லிம்கள் பற்றிய தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அபாயமானவர்கள், தொப்பி புரட்டுபவர்கள், நம்பத்தகாதவர்கள் என்ற பிரச்சாரம் மிகவும் பரவலாகச் செய்யப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்தப் பிரச்சாரங்கள் உதவி செய்கின்றன.
பவுசரின் கருத்துக்களையடுத்து "முஸ்லிம்கள் அரசாங்கத்தாலும், விடுதலைப் புலிகளாலும் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்த வன்முறைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய முடியாதா?" என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பவுசர் இவ்வாறு பதிலளித்தார். தமிழ் மண்ணும் முஸ்லிம் மண்ணும் காக்கப்பட வேண்டும் என்றார். அவர் மேலும் தொடர்ந்தபோது, „இன்று நடைபெறும் கெப்பற்றிக்கொலாவ, செஞ்சோலை, மூதூர், பொத்துவில் கொலைகளால் யாரோ ஒரு தரப்பினர் சந்தோசப்படுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். மக்களுக்கு உண்டாக்கப்படும் கற்பனைப் பிரக்ஞைகள் அகற்றப்பட வேண்டும். ஒற்றுமைக்கும் அமைதிக்குமான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இலக்கியச் சந்திப்பின் இறுதியில் பல கலை நிகழ்ச்;சிகளும் குறும்படக் காட்சிகளும் ஆடல் பாடல்களும் இடம்பெற்றன. ஓவியர் கிருஷ்ணராஜாவின் நன்றியுரையுடன் லண்டனில் நடைபெற்ற 33 வது இலக்கியச் சந்திப்பு முடிவுற்றது. அடுத்த இலக்கியச் சந்திப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
18 வருடங்களிற்கு மேலாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்களின் இருப்பாகவும், இருப்பின் குரலாகவும் இருக்கின்ற இலக்கியச் சந்திப்பு, 33வது முறையாக இரண்டு நாட்கள் 2006ம் ஆண்டு செப்டெம்பர் 23ம், 24.ம் திகதிகளில் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள ஸராட்போட் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. இலங்கையில் நடைபெற்று வரும் யுத்த நிறுத்த மீறல்கள் மற்றும் யுத்தத்தை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறும் இலங்கையின் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர ஜனநாயக அரசியல் தீர்வினை முன்வைக்குமாறும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இவ்விலக்கியச் சந்திப்பு கேட்டுக் கொள்கின்றது.
2. அண்மையில் நடைபெற்ற கெப்பிட்டிக்கொலாவ, மூதூர், முல்லைத்தீவு, பொத்துவில் போன்ற இடங்களில் நடைபெற்ற அப்பாவிமக்களின் மீதான படுகொலைகளை இவ்விலக்கியச் சந்திப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் இவை போன்ற படுகொலைகள் இனி ஒருபோதும் இடம்பெறாதவாறு உறுதியளிக்கும்படி இலங்கை அரசினையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கேட்டுக் கொள்கின்றது.
3. வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதியில் விசாரணையின் பேரால் கைது செய்வதையும் வெள்ளை வானில் கடத்துவது, காணாமற் போகச் செய்வது, கொல்லுவது, இனந் தெரியாதோர் மற்றும் பல்வேறுபட்ட "படைகள்" என்ற போர்வையில் நடத்தப்படும் கொலைகள் போன்றவை உடனே நிறுத்தப்பட வேண்டும்.
4. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்கள் தங்கள் இடங்களில் பாதுகாப்புடனும் இறைமையுடனும் வாழ வழி செய்ய வேண்டும்.
5. இலங்கையில் நடைபெறும் சட்டப் புறம்பான படுகொலைகள் அனைத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படவேண்டும் என்று இச்சந்திப்பு 24.09.2006 இன்று தன் தீர்மானங்களை நிறை வேற்றுகின்றது.
லண்டன்,
24.09.2006

0 comments:

கருத்துரையிடுக