19 - 20 ஏப்ரல் 2003
ஒல்போ - டென்மார்க்
ஒல்போ - டென்மார்க்
(படங்கள் தமயந்தி, பரா)
30வது இலக்கியச்சந்திப்பு டென்மார்க், ஒல்போ நகரில் 19, 20 - 04- 2003 திகதிகளில் நடைபெற்றது.
தமயந்தி, புஷ்பராஜா ஆகியோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சேரன் (கனடா) புகைப்படக் காட்சியை தமது உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து கு. பரராஜசிங்கம் (ஜேர்மனி);, 'இலக்கியச்சந்திப்பின் நோக்கும் அவசியமும்" பற்றிப் பேசினார். இலக்கியச்சந்திப்பின் வரலாற்றையும் அதன் தேவையையும் அவர் விளக்கினார்.
'புகலிடத் தமிழ் எழுத்துக்களின் இன்றைய நிலையும் வெளியும்" பற்றிப் பேசிய கலைச்செல்வன (பிரான்ஸ்);, புகலிடத்தில் பல பத்திரிகைகள் நின்று போனதிற்கான காரணங்களை ஆராய்ந்தார்.
'போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் தாக்கங்கள்" என்னும் நிகழ்வு பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியை நடத்திய உளவியலாளர் வீ. சிறிகதிர்காமநாதன் (டென்மார்க்) கேள்விகளுக்கு பல உபயோகமான பதில்களைத் தந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
சரவணனின் 'இலங்கைப் பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும்" என்னும் நூல் அறிமுகம் புஷ்பராஜா அவர்களால் செய்யப்பட்டது. இது இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு பற்றிப் பேசும் ஓரே ஒரு நூல் என்று கருதப்படுகிறது.
கவிஞர் முல்லையூரானின் 'சேலை" சிறுகதைத் தொகுப்பு கி. செல்த்துரையினால் (டென்மார்க்) விமர்சனம் செய்யப்பட்டது. தமது பேச்சில் இவர் பாவித்த ஆணாதிக்க வசனங்கள் சபையில் காரசாரமான உரையாடலை ஏற்படுத்தியது.
சுசீந்திரனின் (ஜேர்மனி) 'தேசிய இனங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கம்" என்ற உரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள், கரவைதாசனின் 'டென்மார்க்கில் இலக்கிய வெளிப்பாடுகள்" என்னும் உரையுடன் ஆரம்பமாகின.
டென்மார்க் பல்கலைக்கழக மாணவிகளால் வெளியிடப்படும் 'பாலம் அமைப்போம்" என்ற சஞ்சிகை கே. தர்சிகா, எஸ். கஜபாலினி, ஜே. ஏ. கௌசினி ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவது தலைமுறையினர் புகலிடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டன. . இதைத் தொடர்ந்து செ.சிறிகதிர்காமநாதன் 'புகலிடத்தில் இரண்டாம் தலை முறையினர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் - ஒர் உளவியல் பார்வை" எனும் விடயம் பற்றிப் பேசினார். இதைத் தொடர்ந்து மிகப் பிரயோசனமான விவாதம் நடைபெற்றது.
அசோக் கண்ணமுத்துவின் அசை-2, அடேல் பாலசிங்கத்தின 'சுதந்திர வேட்கை", 'றஸ்மியின் கவிதைகள்" ஆகிய நூல்கள் முறையே கு. பரராஜசிங்கம், சி. புஷ்பராஜா, கலைச்செல்வன் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டன.
இதன் பின்பு எஸ். மதி (டென்மார்க்) தனது உணர்ச்சி மிக்க கவிதைகளை வாசித்தார்.
புகலிடத்தில் தலித்தியம் - வெளிப்பாடு என்னும் விடயம் பற்றி சரவணன் (நோர்வே) உரையாற்றினார். புகலிடத்தில் சாதியத்த்தின் வெளிப்பாடுகள் பற்றி தெளிவாக விபரித்தார். இதைத் தொடர்ந்த விவாதத்துடன் இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அடுத்த இலக்கியச்சந்திப்பை ஒல்லாந்தில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக