நடராசா சுசீந்திரன்நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு ஆகிய தளங்களில் தொடர்ந்து பங்களிப்பை நிறுவி வருபவர். பெர்டொல்ட் பிறெஹ்ட், குந்தர் கிராஸ், ஹைன்றிஸ் பொல், எறிக் பிறீட் போன்றவர்களது படைப்புக்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அதுபோலவே பல்வேறு தமிழ்ப் படைப்பாளிகளை ஜெர்மன் மொழிக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இலங்கை அரசியலில் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கும் இவர் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் யாப்பு, சமஸ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு, மனித உரிமைமீறல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
போரற்ற இலங்கையில் அரசியல் யாப்பின் பாரிய மாற்றம், தேர்தல் தொகுதிகள், மாகாணங்களின் மறுசீரமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் கூட்டுக் குடியரசு அமைப்பு ஒன்றின் மூலமே சிறு பான்மை இனங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பதுடன் அத்தீர்வு இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினரின் நன்மைக்கும் வித்திடும் என்பதனால் அவர்களின் ஒப்புதலோடே நடைபெறவேண்டும் என வலியுறுத்தி வரும் இவர் இலங்கையின் தென்பகுதி மக்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சமாதானம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடு போன்றவற்றில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திவரும் சுசீந்திரனின், ஐரோப்பாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இலக்கியச் சந்திப்பிற்கான பங்களிப்பு, அளப்பரியது. மேலும் பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். புலம் பெயர்ந்த இலங்கையரின் சர்வதேச வலைப்பின்னல் என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் இலங்கை மக்களின் பொது நலனுக்காக உழைத்துவருபவர்.
இவரது வலைதளம் Lanka Hermes (இலங்கைத் தூதன்) பலரது கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பெற்றது. இவர் தற்போது தனது மனைவி இன்பா மற்றும் மகன் டினோவுடன் பெர்லினில் வசித்து வருகிறார்.
தற்போது இந்தியா வந்துள்ள அவரை கவிஞர்.தேவேந்திரபூபதியின் மதுரை இல்லத்தில் 21.03.09 அன்று சந்தித்து உரையாடியதிலிருந்து....
ஆதவன் தீட்சண்யா
எழுத்தாக்கம்: ந.பெரியசாமி, சம்பு
I
ஆதவன்: புகலிட இலக்கியம் என்ற வகைமை உருவானதிலும் அதை முன்னெடுத்ததிலும் உங்களுக்கு முன்னணி பங்குண்டு. அது உண்மையில் இலங்கை தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக வெளிப்படுகிறதா?
சுசீந்திரன்: தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம் அல்லாத இன்னொரு சூழலில் தமிழ்மக்கள் வாழும் போது அது பல வித்தியாசமான அனுபவங்களையும் சம்பவங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். இந்த வித்தியாசமான மொழி, கலாச்சார, புவியியல் சூழலில் பெற்றுக்கொள்கிற திசை மாற்றத்தைத் தான் நாங்கள் புகலிட இலக்கியம் என்று சொல்லி ஒரு வசதிக்காக வரைவிலக்கணம் ஒன்றை வைத்துக் கொண்டடோம் என்று சொன்னால், இந்த புகலிட இலக்கியம் ஏன் உருவாகுகிறது? இடப்பெயர்வால். இடப் பெயர்வு ஏன்? அச்சுறுத்தல் பிரச்சனைகளால். ஆகவே இந்த புகலிட இலக்கியத்தின் கடப்பாட்டில் ஒன்று அது எதிர்ப் பிலக்கியப் பண்பைக் கொண்டிருக்கும். ஆனால் தமிழ் மொழிக்குரிய பலவீனமா என்று தெரியல- ஒரு குறிப் பிட்ட காலத்துக்குப் பிறகு அது ஒரு பொருளாதார அடிப் படையைக் கொண்ட இலக்கியப் பகுப்போ என்று நாங்கள் சந்தேகப்படக்கூடிய அளவுக்கு அதன் நுகர்வும் உருவாக்க மும் அமைந்திருக்கிறது. எப்படியென்றால், அந்த காலத் தில் ஒருவர் இங்கிலாந்துக்குப் போய்விட்டு வந்து ஒரு பத்திரிகையில் பயணக்கட்டுரை எழுதினால் அது எல்லோ ராலும் விரும்பி படிக்கப்படும். நாம் போகாத இடத்துக்குப் போய்விட்டு வந்து எழுதியிருக்கிறார் என்கிற அளவில். அதேமாதிரியான ஒரு மேல்நிலையில் இருந்து இந்த அடிநிலை மக்களுக்கு சொல்வது மாதிரியான போக்கும் அது ஏதோ ஒருவகையில் உயர்ந்தது என்ற பார்வையும் அந்த புகலிட இலக்கியத்துக்கு கிடைத்தது.
ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்கு முறையை எதிர்கொண்ட விதம், மேற்குலகம் என்றால் வெள்ளை ஆதிக்க சமூகத்திற்கிடையில் தன்னை ஒரு கருப் பனாக உணர்வது, பிற புலம் பெயர்ந்த சமூகங்களோடு தன்னை பிணைத்துக்கொண்ட தன்மை- இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை. ஏன் அப்படி பேசல என்று காரணங்களைத் தேடிப் போகலாம். ஆனால் உண்மை என்னவென்றால், வெறுமனே மேல்நிலைப்பட்ட விசயங் களைப் பேசுவதாகத்தான் இருக்கு. தொடக்கம் முற்போக்கா இருந்தாலும் பிறகு மழுங்கடிக்கப்பட்டு இன்று வெறுமனே இன்னொரு நாட்டுக்கு இடம் பெயர்ந்த ஒருவர் எதை எழுதினாலும் புகலிட இலக்கியமாக பார்க்கிற தன்மையாக குறுகிவிட்டது. தமிழ் வாசகனின் தேடலும் ரசனையும் எந்தளவில் இருக்கிறதென்று யோசிக்கவேண்டியிருக்கு.
ஆனால் புகலிட இலக்கியம் நிறையவே பண்ணலாம்- இலங்கைப் பிரச்னையை முன்வைத்து பேசிய புகலிட இலக்கியங்கள் மிக சொற்பமாக இருக்கு. நல்ல நாவல்கள் புகலிடத்தில் உருவாகவில்லை. பிறமொழி இலக்கியங் களை உள்வாங்கி கற்றுக்கொண்டு பிறமொழிச் சமூகங்கள் எப்படி தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்ற வெளிப்பாட்டு உத்திகளை கைக்கொண்டதா என்றால் இல்லை, அதற்கான காரணம், புகலிட இலக்கியம் என்பதா லேயே அவர்களுக்கு பிரசுர வசதி கிடைக்குது. அதனால் தன் எழுத்தை நிலைநிறுத்துவதற்கானப் போராட்டம் தேவையில்லாமல் இருக்கு. எளிதான அங்கீகாரம் கிடைப்பதால் இந்த மந்தப்போக்கு இருக்கலாம்.
மற்றது, புகலிடத்தில் இலக்கியத்தின்பால் நாட்டம் குறைந்து கொண்டிருப்பதாகத் தான் நினைக்கிறேன். இன்று சினிமாவின் ஆதிக்கமும் நுகர்வும் கூடினதாலும் வெகுஜன ஊடகங்கள் பல்கிப் பெருகினதாலும் இவையெல்லாம் தூரம் விலகி கைநழுவிப் போகிறது.
ஆதவன்: இலங்கைத் தமிழருக்காக தீக்குளிப்பு போன்ற உணர்ச்சிமய மான சுயபலிகளையும், இலக்கியவாதிகளும் சினிமாக் கலைஞர்களும் காட்டும் கூடுதல் ஈடுபாட்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சுசீந்திரன்: இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ் கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாது காப்பாக வாழுகிறார்கள். புலிகளின் பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது உண்மை. ஆனால் அதை இன அழிப்பாக சொல்ல முடியாது. மிகைப்படுத்திச் சொல்லி- மிகைப் படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்க லாம் என்ற நப்பாசை எந்த லாபத்தையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மற்றது, மனிதாபிமான உணர் வோடு இருக்கிற கலைஞர்கள் அல்லது இலக்கியவாதிகள், நண்பர்கள் மிகவும் மேலோட்டமான தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றவுணர்வில் இலங்கை அரசாங் கத்துக்கு எதிராக செயல்படனும்கிற நிலைமைக்குத் தள்ளப் படறாங்க. இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிக் கிற அதேநேரம் புலிகள் மீதான விமர்சனத்தையும் தமிழர்கள் மீது யார் எந்தவகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக கிளர்ந்து எழணும்கிற உணர்வு இங்கு இருக்குமென்றால் அதை முற்போக்கானதாகத்தான் பார்க்க வேண்டும். புலிகள் அங்கே தமிழர்களை எவ்வாறு நடத்து கிறார்கள்- துப்பாக்கிகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை என் போன்ற ஆட்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.
ஆதவன்: ஒரு பகுதி சமூகம் போர்ச்சூழலுக்குள் இருக்கு. இன்னொரு பகுதி சமூகம் முழுக்க நவீனமயமாகி பாலினச் சமத்துவம் போன்ற அடிப்படை விசயங்களையும் வேறுபல நுண்ணரசியல்களையும் பேசக்கூடிய கலாச்சாரத்திற்குள் நுழைந்து கலந்திருக்கிறது. இந்த ரெண்டு புலங்களிலும் பெண் தனித்து உணரப்படக்கூடியவளாக, அவளது தனித்தன்மையை ஏற்கக்கூடிய மனநிலையை தமிழ்ச்சமூகம் எட்டியிருக்கிறதா? சென்சிடைஸ் ஆகியிருக்கா?
சுசீந்திரன்: இல்லை. பெண்விடுதலை பற்றிய பிரக்ஞை போன்ற விசயங்களில் உலகரீதியான தொடர்பாடல்கள் கூடி மனிதனுக்கு மனிதன் இடையிலான கொடுக்கல் வாங்கல் கள் உறவாடல்களும் கூடின சந்தர்ப்பத்தில் உங்களோட எதிர்பார்ப்பும் என் எதிர்ப்பார்ப்பும் அப்படி இருக்குது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய தமிழ்ப் பெண்களுடைய முன்னேற்றம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தாகத்தான் இருக்கு. ஏனெனில் ஒரு மரபார்ந்த தன்மையில் தொடர்ந்தும் அவர்களுக்கான வசதி வாய்ப்புகள் அப்படி தான் வழங்கப்பட்டிருக்கு. ஒருவயதுக்கு வந்த பெண் ணுக்கு மரபார்ந்த அடிப்படையில்தான் திருமணம் செய்ய வேண்டியிருக்கு. ஒரு புரட்சிகரமான, பெரியார் போன்ற சமூக எழுச்சிமிக்க ஆளுமைகளின் குரல்கள் இன்றைக்கு கேட்பதில்லை. இம்மாதிரியான விசயங்கள் தமிழ்மொழி யிலேயே கிடந்தும் கேட்காதபோது எப்படி பிற மொழி களில் கேட்பாங்க?
ஆதவன்: தமிழ்நாட்டில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் பலவும் இலங்கைக்குள்ளும் தாக்கம் செலுத்தும் நிலை இருந்திருக்கிறது. எனில் பெரியாரிய சிந்தனை இலங்கை தமிழ்ச் சமூகத்தால் எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது?
சுசீந்திரன்: எது எப்படியோ, ஈழப்போராட்டத்தின் தொடக் கத்துக்கும் பெரியாரின் வருகை, திராவிடர் கழகம் அல்லது திமுக உருவாக்கம் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கு. மொழியை முதன்மைப்படுத்தி திராவிட இனங்களை வேறு படுத்தி தமிழ்நாட்டில் அறிய முற்பட்ட அதே அடிப்படை யில் தான் இலங்கையில் 1956ல் தமிழரசு கட்சி, திமுக பாணி அரசியலை பிரதிபலித்தது. பெரியாரியம் இலங்கைத் தமிழ் மக்களுக்குள் ஊடுருவவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல் தான் சொல்லப்பட்டதே தவிர சமூக சீர்திருத்த, சுயமரி யாதை அரசியல் காட்டப்படவில்லை. அதாவது அதிகாரத்துக்கான அரசியல் தான் கைக்கொள்ளப்பட்டது.
ஆதவன்: இலங்கை தமிழ்ச்சமூகத்திற்குள் சாதியின் வகிபாகம் குறித்து இரண்டு சர்வதேச மாநாடுகளை நடத்தியுள்ளது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி. ஆனால் புலிகள் தலையெடுத்தபின், சாதிப் பிரச்னையே கட்டோடு ஒழிந்துவிட்டதாகவும், புலி எதிர்ப்பை பரப்புவதற் காகவே சாதியம் தலைதூக்கிவிட்டதாக சொல்லி தலித்தியம் பேசக் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் இதற்கு பின்புலத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே?
சுசீந்திரன்:இலங்கை தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதி யினருக்காக சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்களும் பின்பு சாதியத்திற்கு எதிரான போராட்டமாக பௌத்தத்தை முன்னிருத்தி பிக்குகளும்கூட தமிழ் மக்கள் மத்தியில் செயல்பட்ட வரலாறும் இருக்கிறது. ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த காலம் 60-70கள். அந்த காலகட்டத் தில்தான் தேசிய இனப்பிரச்னை கூர்மையடைந்தது. ஏற்க னவே எதிர்கொண்டிருந்த சாதியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமலே, அதை பூடகமாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் தொடர்ந்து இயங்க அனுமதித்துக் கொண்டே தேசியத்திற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் 80களின் தொடக்கத்தில் பெருமளவு புலம் பெயர்வு நடக்குது. புலம் பெயர்ந்த சமூகம் எதுவென்றால் யாழ்ப்பாணத்தை அப்படியே பெயர்த்துக்கொண்டும் யாழ்ப்பாணத்தையே உடுத்திக்கொண்டும் யாழ்ப்பாணத் தையே போர்த்திக்கொண்டும் வந்த சமூகம்தானே? அந்த சமூகம் தன்னகத்தே கொண்டிருந்த சகல அழுக்குகளையும் காவிக்கொண்டுதான் வந்திருக்கு. அதை போராட்டத்தின் பெயரால்- துப்பாக்கிகளின் ஓசையில் அந்த குரல்கள் கேட்காமல் போயிருக்கலாம்- அல்லது துப்பாக்கிப்பிடியின் கீழ் அது மறைந்திருக்கலாம், அதுதான் யதார்த்தமே தவிர சாதி ஒழிக்கப்படல. அதுபற்றி பேசப்படவுமில்ல. அது ஒரு tணீதீஷீஷீ - மறைமுகமானதாக காட்டப்பட்டாலும் அது மிகத் தாராளமாகவே இயங்கிக் கொண்டிருக்குது. ஒரு புற்று நோயைப் போல வளர்ந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டுவிட்டோம்- பொருளாதாரரீதியா வளம் பெற்றுவிட்ட புகலிட சமூகத்திற்குள் இதையெல் லாம் நாங்கள் பார்ப்பதில்லை என்று கொண்டாடக்கூடிய நிலையில் இல்லை.
பொருளாதாரப் பிரச்னையைப் பற்றி பேசி னால் அதை தேசதுரோகம் என்று இலங்கை அரசாங்கம் எப்படி சொல்கிறதோ அதேமாதிரிதான் இலங்கை தமிழர்களுக்குள் இருக்கும் அடக்குமுறைகளை நாம் இனங்காண வேண்டும்- அதை நிவர்த்திக்கனும்- சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கை பெரும்பான்மை சமூகத்தால் பார்க்கப்படுது. போராட்டம் பலவீனப்பட்டுவிடுமோ நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தின் அடிப்படையிலிருந்தே இந்தப் பார்வை பெரும்பான்மை சமூகத்துக்கு வந்திருக்கி றது. தலித்துகள் பிரச்னை அடிப்படையில் ஒன்றுபடுவதை யும், தலித் என்பதால் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொள்கிறோம் என்று சொல்வதையும் பெரும்பான்மை சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இருந்து பார்க்க முடியாது. ஒடுக்கப்பட்டவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அதுதான் நிஜம்.
ஆதவன்: சிங்களர்களுக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட சாதிதான் பௌத்த மத தலைமைக்கு வரமுடியுமாமே?
சுசீந்திரன்: உண்மைதான். சிங்கள மக்களுக்கு மத்தியில் சாதியமைப்பு வலுவானதாக இல்லை. அதை நாம் எற்றுக் கொள்ள வேணும். ஆனால் அவர்கள் மத்தியில் தொடர்ந்து கண்டிச் சிங்களவர், கரையோர சிங்களவர் என்ற ஒருவகை பாகுபாடு ஆரம்பத்தில் இருந்தது. 90களில் பார்க்கலாம். 1890களில் இருந்து கரையோர சிங்களவர்கள் ஒருவகை பின்தங்கியவர்களாகவும் கண்டிச் சிங்களவர்கள் மேன்மை பொருந்திய சாதியினராகவும் கருதப்பட்டனர். அது மெல்ல மெல்ல மாறினாலும் கொகிஹம, பரவ, துரவ என்ற சாதிப் பாகுபாடுகள் இருக்குது. ஆனால் குறிப்பிடக்கூடிய அள வுக்கு பாகுபாடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை தமிழ்ச் சமூகங்களுக்கு மத்தியில் இருக்கிற சாதிப் பிரிப்போடு இதை ஒப்பிட முடியாது. ஆனால் சிங்களர் களுக்குள் இருக்கிற பாகுபாட்டை ஆழமா பார்த்தால் இப்படியரு காரணியை கண்டுபிடிக்கலாம். அதேமாதிரி எந்த பிரதேசங்களில் உள்ளவங்க ஆட்சிப் பொறுப்புக்கு வர்றாங்க என்பதையெல்லாம் பிடிக்க முடியும்.
ஆதவன்- இலங்கை சமூக அமைப்புக்கு, தமிழ் வாழ்க்கைக்கு தொடர்பில்லாத வேறு சமூகங்களுக்கு புலம்பெயர்ந்து அந்த சமூகங்களுக்குள் கலந்து வாழ்வதற்கு உங்களுக்கு முடிந்திருக்கிறது. ஆனால், ஒரே இனம் என்று பேசக்கூடிய தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமை விட்டு வெளியேறி கலந்து வாழமுடியாத நிலை இருக்கிறது. அந்த முகாம்கள் வாழத்தகுதியற்றதாக இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இவர்கள்மீதான அக்கறை உண்டா?
சுசீந்திரன்:இல்லை. துரதிருஷ்டவசமாக. இந்தியாவில் இருக்கும் அகதிகள் முகாம்களில் வாழும் மக்களுடைய வாழ்நிலை எதுவும் புகலிடத் தமிழர்கள் மத்தியில் விவாதிக்கப்படறதில்லை. மேற்கு ஐரோப்பா அல்லது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் தஞ்சம் புகுந்த வர்களுக்கு ஆகக்கூடி அதிகபட்சம் 5 வருஷம்தான் முகாம் வாழ்க்கை. அதற்குப்பிறகு, மிக இயல்பான ஏனைய பிற சுதேசிகளைப்போல வாழக்கூடிய நிலைமைக்கு வந்துட் டாங்க. ஆனால், மூன்றாம் உலகநாடுகளுக்கு தஞ்சம் போயி ருந்தால் அடுத்து வந்த வாழ்நாள் பூராவும் முகாம்களிலேயே வாழ்கிற மாதிரிதான் இருக்கு. முகாம்களின் வாழ்நிலை வெளியில் இருக்கிற வாழ்நிலைக்கு சமமாகவோ அல்லது உயர்வாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அங்குள்ள அரசுகள் கவனமாக இருக்கும். அதனால் இந்த மக்களை இலங்கைக்கு வெளியே வாழ்ந்தாலும், புகலிடத் தமிழர்கள் என்ற பிரிப்புக்குள் உள்ளடக்காத தன்மையைத்தான் பார்க்கி றோம். அது புகலிட இலக்கியம் அல்லது அரசியல் அல்லது புகலிட சமூகம் என்றாலும் சரிதான், யாரைக் கருதுகிறார்கள் என்று சொன்னால் இந்த பணங்காய்க்கும் வருவாய் ஈட்டக் கூடியவர்களாக உருவெடுத்த ஐரோப்பிய அல்லது கனடா தமிழர்களைத்தான். ஆகவே இந்தியாவில் இருக்கிற அகதிகள் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தொடர்ந்து அகதிகள் முகாம்களில்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீதான சமூக அடக்குமுறை, பாலியல் ரீதியான அச்சுறுத்தல்- வன்மங்களும் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கு. இது அகதியின் பேரால் நடக்கிறதா தமிழின் பேரால் நடக்கிறதா என்று நாம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களும் தமிழர்கள்- அதுவும் இலங்கைத் தமிழர்கள்.
II
ஆதவன்: இலங்கையின் மக்கள்தொகை விகிதாச்சாரம் என்ன?
சுசீந்திரன்: மொத்த சனத்தொகை 20 மில்லியன்கள். அதில் 24% தமிழ்பேசும் மக்கள். அதாவது பூர்வீகத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லோரையும் சேர்த்து. இலங்கைக்கு வெளியே இந்தியா, கனடா, ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறவர்கள் சுமார் ஐந்து தொடக்கம் ஆறுலட்சம். புலிகளின் வன்னிப்பிரதேசப் பரப்புக்குள் கிட்டத்தட்ட ஒன்றரைலட்சம் பேர். மிகுதி மக்களெல்லாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் வாழ்கிறார்கள்.
ஆதவன்: அப்படியானால், இப்ப ஈழம் என்கிற கனவுப் பிரதேசம் அந்த ஒன்றரைலட்சம் பேருக்கானதாக சுருங்கி இருக்கிறதா?
சுசீந்திரன்: இல்லையில்லை... இந்த ஒன்றரை லட்சம் மக்கள் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்திற்குள் தற்செயலாக இருப்பதால் அப்படி கருதப் படுகிறார்கள்.
ஆதவன்: தமிழீழம் என்பதன் பரப்பு, எல்லை...?
சுசீந்திரன்: இலங்கைப்படத்தைப் பாருங்கள், மேலே கழுத்து மாதிரி இருக்கும் பகுதி ஆனையிறவு. அதன் கீழே உள்ளது தொடக்கம் வவுனியா வரையான இடைப்பட்ட பகுதிதான் வன்னிப்பிரதேசம். அப்பரப்பு 1998க்குப் பின் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மக்கள் மீதான அதிகார நிர்வாகத்தைப் புலிகள் நிறுவினார்கள். பொலிஸ் தொடக்கம் அனைத்து அதிகாரக் கட்டமைப்புகள், வரி யிறுப்பு, முழுக் கண்காணிப்புவரை அவர்களிடமிருந்தது. ஆனால், சேவைகள் யாவும் அரசால் வழங்கப்பட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள் எல்லாம் தென்பகுதியில் இருந்து வரும். பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரசசேவை நிர்வா கம் யாவும் இலங்கையரசின் வேதனத்தில் இயங்கின. இப்படி மக்களுக்கான சகல சேவைகளும் அரசாங்கத்தால் வழங்கப்பட, அதை நிர்வகிப்பதையும், அதனால் பலன் பெறுவதையும் புலிகள் எடுத்துக் கொண்டார்கள். ஆகவே, எல்லாவகை சேவைவளங்களும், எல்லா வகை நிர்வாக அங்கங்களும் புலிகளின் கைகளில் இருந்தன. இதனையே புலிகள் தமிழீழம் என்ற தனி அரசாக, உத்தேசமாக கிழக்கும் சேர்த்து 15000 ச.கி.மீ பரப்பளவுள்ள இந்தப்பகுதியில் இறுமாந்திருந்தனர்.
ஆதவன்: இலங்கை அரசு ராணுவச் செலவுக்காக ஒதுக்கும் தொகை விரைவில் நாட்டையே திவாலாக்கிவிடும் என்று உலக வங்கிகூட எச்சரித்துள்ளது. அங்கு என்னவிதமான உற்பத்தி நடக்குது? என்ன வருமானம்? எப்படி போருக்கு இவ்வளவு செலவழிக்க முடிகிறது?
சுசீந்திரன்: இலங்கையில் நிலவுவது பிறர் உதவியில் தங்கி யிருக்கிற வெளிக்களப் பொருளாதாரம்தான். அதாவது அது உதவி வழங்கும் நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. அந்த நாடுகளை திருப்திபடுத்தும் உபாயம் அதற்கு கை வரப் பெற்றிருக்கிறது. உதாரணத்துக்கு, ஜீ.எஸ்.பி.பிளஸ் என்று ஏற்றுமதி வரிச்லுகையோடு சுதந்திர வர்த்தக வளையத்தை வெளிநாட்டு முதலீட்டுக்கு இலங்கை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. அம்முதலீட்டிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்றால் சில அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்பட்டிருக்கவேண்டும்.அதில்மனித உரிமைகளும் மிக முக்கியமான அம்சம். இந்த உற்பத்தியை இறக்குமதி செய்கிற மேற்குலக நாடுகள் தொடர்ந்து இறக்கு மதி கோட்டாவை நீட்டிக்கவேண்டுமென்றால் நிபந்தனை கள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுதா என்று நாங்கள் பார்க்க வேண்டும் என்கின்றன. அப்படி பார்த்து கோட்டாவை மறுத்தால் இவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள், நிறைய பிரச்சினைகள் இருக்கிறதென இலங்கை அரசாங்கம் இரைஞ்சுகிறது. பிறகு மேற்குலக நாடுகளும் அதை ஒத்துக் கொள்கின்றன. இப்படி உதவி வழங்கும் நாடுகள் என்ன தான் அழுத்தங்களை பிரயோகிப்பதுபோல காட்டிக் கொண் டாலும், அவர்களுடைய நலனும் இந்த விசயத்தில் பொதிந் திருப்பதால் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுகின்ற போக்கே அவர்களிடம் இருக்கிறது.
செப்.11க்கு பிறகு பயங்கரவாதம் என்பதை முன்னிறுத்தி அதை ஒழிப்பதற்கான உதவிகளையும் தார்மீக ஆதரவை யும் பல்வேறு நாடுகளிடமிருந்து இலங்கை பெற்றுக் கொள் கிறது. இது ஒருபக்கம் இருக்க, ஒரு சில முரண்களைக் கொண்டுள்ள எதிரும் புதிருமான நாடுகளிடம் அதாவது இந்தியாவிடமிருந்து உதவிபெறும்போதே, பாகிஸ்தானிட மிருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவி பெறுகிறது. ராணுவத் தளவாடங்களை அங்கிருந்தும், இங்கிருந்தும் வாங்கிக் கொள்ளும். இந்த வியாபாரத்தின் நிமித்தம் இந்த நாடுகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதத்தளவாடங்களையும் அதற்குரிய நிபுணத் துவ உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின் றன. அதில் சீனா, பாகிஸ்தான், இந்தியா முன்னணியில் நிற்கின்றன. ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. துருக்கி செய்கிறது. இப்படி எங்களுக்கு தெரியாத நாடுகள், தெரிந்த நாடுகளின் தாராளமான உதவிகள் இலங்கையை நோக்கி வருகின்றன. இந்த நாடுகளுடைய உதவியால்தான் போரையும் அரசாங் கத்தையும் நடத்தக்கூடியதாக இலங்கை இருக்கிறது.
மற்றது,ஏற்றுமதி மிகமோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடியாலும் நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீடுகளுக்கு தாராளமான சந்தை வாய்ப்பை இலங்கை அரசு கொடுத் துள்ளது. மூலவளங்கள், மூலப்பொருட்கள் இருக்கும் நிலங் களை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்றிருக்கிறது. இன்றைக்கு சம்பளஉயர்வு, வாழ்க்கைப் பிரச்சனை, விலை உயர்வு, வேலையில்லா நிலை ஆகியவற்றால் எலக்ட்ரிகல் ஒர்க்கர்ஸ், ஹெல்த் ஒர்க்கர்ஸ் தொழிற்சங்கங்கள் நிறைய போராடிக் கொண்டுள்ளன. அரசாங்கமோ, பயங்கரவாதத் திற்கு எதிராக உக்கிரமான போரை நடத்திக்கொண்டிருக்கிற அரசை விமர்சிப்பதும் போராடுவதும் தேசவிரோதச் செயல் என்று முத்திரை குத்துகிறது. நான் அதனால்தான் கருதுகி றேன், போரை அரசாங்கம் விரைவில் முடிவுக்கு கொண்டு வராது என்று. அப்படி கொண்டுவரும் பட்சத்தில் ஏனைய பிரச்சினைகள் தலை தூக்கும். அரசாங்கத்திற்கு எதிராக ஏனைய பிரச்சினைகளுக்காக எழுகிற குரல்களை நசுக்குவ தற்கு இந்த போர் தேவையாயிருக்கு அரசாங்கத்திற்கு. அதனால் தொடர்ந்து நடத்திக்கிட்டு இருக்கு.
ஆதவன்: ஒட்டுமொத்த சிங்களர்களும் இனவெறியர்களா?
சுசீந்திரன்: இல்லை. தமிழீழப் போராட்டத்தை, புலிகளின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிற சிங்களர்கள் இருக் காங்க. மனிதாபிமான அடிப்படையில் சிறுபான்மை இனங் களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறவர்கள் இருக்காங்க. அரசாங்கம் சிறுபான்மை இனங்களோடு நடந்து கொள்கிற போக்கை விமர்சிக்கறவங்க இருக்காங்க. மிகச்சிறு குழுக் களாக இருந்தாலும் அவை கணக்கில் எடுக்கப்பட வேண் டும். அவ்வாறின்றி வெறுமனே இனவாதத்தை கக்குகிற ஜேவிபி போன்ற கட்சிகள் சொல்வதை மட்டும் பிரச்சார நோக்கில் பயன்படுத்துவது ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மீதான வெறுப்பை இங்கு வளர்த்தெடுக்கிறது. இதே வேலையைத்தான் அவன் அங்கு செய்வான். எல்லாத் தமிழனும் தனக்கு எதிரானவன், அவன் இந்தியத் தமிழனாக இருந்தாலும்கூட என்ற நிலையை அங்கு ஏற்படுத்தறாங்க. அது கண்டிக்கப்பட வேண்டியது. இவை யெல்லாம் மக்களிடம் உண்மையான தகவல்கள் சென்றடையாமல் தடுப்பதின் மூலம் சாத்தியமாகிக் கொண்டே இருக்கிறது.
ஆதவன்: விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருவ தாக செய்திகள் வருது. அவர்கள் மீண்டு வரும் சாத்தியமிருக்கிறதா?
சுசீந்திரன்: புலிகளால் இனி மீளமுடியாதென்றுதான் சொல்வேன். இப்பொழுது அவர்களது கைவசம் இருக்கும் பரப்பு வெறும் 28 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான். அந்த பரப்புக்குள்தான், ஒரு சிறிய குடாப்பரப்பு பொது மக்களின் பாதுகாப்புக்கான மோதல் தவிர்ப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திற்குள் பொது மக்களை வரச் சொல்கிறது அரசு. அங்கும் ஏனைய மீதி யுள்ள இடங்களுக்குள்ளும்தான் புலிகள் இருக்கிறார்கள்.
இதுவரை வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையரசும் புலிகளும் நடாத்தியப் போர்களில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும், அதற்குப் புலிகளின் பதில் தாக்குதல் நடைபெறும். இலங்கையின் இராணுவம் தென்னிலங்கை-கொழும்பு மையப்பட்டது என்பதனால் வடகிழக்கின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்கும்போது அவை புலிகளின் கைகளுக்கு வந்துசேரும். குறித்த தொகை இராணுவம் மீண்டும் முகாம்களுக்குள் முடக்கப்படும். ஆக, மிகக்குறைந்த இழப்புகளோடு கூடுதல் பிரதேசங்களை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமைதான் அண்மைக்கால வரலாறு. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. இலங்கை இராணுவம் இம்முறை திரும்பிப் போகவுமில்லை, தவிர ஒரு தளத்தில் மட்டுமே தாக்கவுமில்லை. எட்டுப் படையணிகளை வைத்து பல பக்க முனைகளிலிருந்தும் மற்றும் வான்படை, கடற்படை தாக்குதலை நடாத்தியும், தொடர்ந்து மக்கள் இடம் பெயர்ந்த அந்த வெறுமையான இடங்களை கைப்பற்றிக் கொண்டும் முன்னேறியது. அரசு துருப்புகளின், 5 படை யணி 3 விசேட படையணி இந்த 28ச.கி.மீ சுற்றுவரையில் புலிகளையும் பொதுமக்களையும் அப்படியே சுற்றி வளைத் திருக்கிறது. கடற்படையும் மூன்று வளையங்களாக வியூகம் அமைத்திருக்கின்றது. மேலே சொன்ன பிரதேசத்திலிருந்து புலிகள் கடல் மூலமாகவோ அல்லது தரை மூலமாகவோ வெளியேறாதபடிக்கு ராணுவம் இந்த வியூகத்தை வகுத்திருக்கின்றனது.
அத்தோடு புலிகளின் இராணுவ தந்திரோபாயாங்களை இராணுவம் கனகச்சிதமாகப் பயன்படுத்துகிறது. மன் னாரை அண்மித்த நாச்சிக்குடாவை இராணுவம் தாக்கிய போது புலிகள் மக்களையும் தம்முடன் கொண்டு சென்ற னர். கிளிநொச்சியை இராணுவம் பிடித்தபோது புலிகளின் பேச்சாளர் நடேசன் 'மக்களில்லாத பிரதேசத்தைத் தான் இராணுவம் பிடித்துள்ளது, மக்கள் எங்களோடுதான் இருப்பார்கள்' என்றார். யுத்தம் நடாத்த பொது மக்கள்-சிவிலியன்கள் எவ்வளவு அவசியம் என்பதை இதுபோன்ற கூற்றுக்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும். இம் முறை மக்கள் இல்லாத பிரதேசத்தை இலகுவாகக் கைப் பற்றிய இராணுவம் அந்த இடங்களில் நிலை கொண்டது. இன்று போராட்டத்தினுடைய தன்மை இது வரையறியாத முற்றிலும் மாற்றமடைந்த நிலையில் இருக்கிறது. இதிலி ருந்து சுதாரித்துக்கொள்வது புலிகளால் முடியாத காரியம்.
ஆதவன்: இப்போது ஏற்பட்டுள்ளது பின்னடைவே அல்ல, இது புலிகளின் உத்தி. பின்வாங்கி மீண்டும் முன்னேறி பழைய நிலையை மீட்டெடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது புலிகளின் மீதான பிரமையிலிருந்து சொல்லப்படுவதா? அதற்கான சாத்தியம் உண்டா?
சுசீந்திரன்: பெரிய நிலப்பரப்பை இழந்து, அவர்களது விமானப்படைகள், உற்பத்திச்சாலைகளை கண்டு பிடித்து அழித்தப் பின்னரும், புலிகள் பழைய நிலையை மீட்டெ டுப்பார்கள், மிக பலமான அடியை இலங்கை அரசாங்கம் சந்திக்க இருக்கிறது என்ற பேச்சுக்கள் திட்டமிட்டு பரப்பப் படுகிறது. இப்படி சொல்வது மக்களை மாயைக்குள் நிறுத்திவைக்க இவர்கள் திட்டமிட்டு செய்கிற பிரச்சாரம் தான். வெறும் 1500 கேடர்களை மட்டுமே-அதுவும் எப்படா தப்பி வெளியேற முடியும் என்ற மனநிலையில் இருக்கிற இளைஞர்களை - வைத்துக்கொண்டு வெளியே பரந்திருக்கிற புலிகள் மீதான அனுதாபத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அதன் பலாபலன்களை அனு பவிக்கவும் திட்டமிட்டே இப்படியான மாயைக்குள் வைத் துள்ளனர்.இலங்கைப்பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாதாரண மனிதனுக்கு, அங்கே எவ்வளவு மக்கள் அடைபட்டிருக்கிறார்கள், எவ்வளவு புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் பரப்பளவு எவ்வளவு, மக்கள் ஆதரவு எப்படியிருக்கு என்ற விசயங்கள் மிகத்துல் லியமாகத் தெரியும். புகலிடத்தில் 5லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். பெரும்தொகையாக கனடாவி லும், ஏனையர் மேற்கு ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இருக்கினம். மேற்கு ஐரோப்பிய நாடு களில் பத்தாயிரம் தொடக்கம் மக்களை ஒரு களத்துக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. ஐம்பதாயிரம் பேர் வீதி இறங்கும் நிலை டெராண்டாவில் இருக்கினம். ஆகவே இந்த தமிழர்களை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தக்க வைத்திருப்பதன் மூலமே இவைகள் சாத்தியமாகும். இவர் களின் கோரிக்கைகள் யாவும் வெறும் உட்டோப்பியன் கோரிக்கையாகத்தான் இருக்கு. 'வீ வாண்ட் தமிழீழம் அவர் லீடர் பிரபாகரன்' என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத் தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை.
ஆதவன்: புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களின் நிலை?
சுசீந்திரன்: நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது 'இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்' என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். 'உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்' என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?
ஆதவன்: ஆமி காப்பாத்தும்னு சனங்க எதிர்பார்ப்பதாக சொல்றீங் களே, ஆமி மேல இந்த நம்பிக்கை எந்த அடிப்படையில் வருது?
சுசீந்திரன்: உயிர் வாழத்தானே மக்கள் விரும்புவார்கள்? புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது. அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து களை வன்னிப்பிரதேசத்திற்கு வழங்காமல் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆக இப்படி அவர்கள் எல்லாவகை நெருக்குவாரங்களையும் நிர்ப்பந்தங் களையும் கடந்த ஐந்து, பத்து வருடங்களாகச் சுமக்கிறவர் கள்தான். மேலும் மொத்த வன்னி நிலப்பரப்பிலிருந்து பலமுறை உட்பிரதேசங்களுக்குள் ளேயே இடம்பெயர்ந்த வர்கள். அதைவிட 2007 பிப்ரவரியில் தொடங்கிய சண்டை யில் அவர்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத் திற்கு கொண்டு வரப்பட்டிருப்பார்கள். பலருக்கு கடந்த பத்து வருசமா இடப்பெயர்விலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு கீழ் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.
ஆதவன்: சரி ஆமிக்கு உண்மையிலேயே அந்த மாதிரியான நல்ல நோக்கங்களெல்லாம் உண்டா?
சுசீந்திரன்: இல்லை. இலங்கை அரசுக்கோ, இராணுவத் துக்கோ அப்படியான நோக்கம் கிடையாது. இலங்கையில் சாவது தமிழ்ப் பொதுமகனாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி இராணுவத்திற்கு எந்த அக்கறையும் இல்ல. கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய் முகாம் களில் அடைத்து வைத்து அவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது. சாவது மக்கள் என்பது பற்றி அக்கறை இல்லை என்பதை தொடர்ச்சியான தன் நடவடிக்கை மூலம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது இலங்கைச் சிங்கள இராணுவம். எவ்வாறுதான் அரசுத்தரப் பிலிருந்து பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தாலும் இலங்கை இராணுவம் மக்களின் நலனின் அடிப்படையில் செயல்படுகின்றது என்பதை நிரூபிக்க இலங்கை அரசால் முடியவில்லை.
ஆதவன்: உயிர்வாழ்வதற்கான ஏதோ குறைந்தபட்ச உத்திரவாதம் இருக்கு என்ற நம்பிக்கையில் முகாம்களுக்குப் போறாங்களா?
சுசீந்திரன்: ஆமாம்.
ஆதவன்: ராணுவமும் புலிகளும் தத்தமது நிலைகளை நியாயப் படுத்திக் கொள்ளும் அடிப்படைதான் என்னவாக இருக்கிறது?
சுசீந்திரன்: அரசில் அங்கம் வகிக்கிற மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்க 'தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் ஏனைய இனங்கள் யாவும் வந்தேறு குடிகள்; இந்த நாட்டுக் குரியவர்கள் அல்ல. இது பவுத்த சிங்கள நாடு. இவர்களுக் காக குரல் கொடுக்கிற அரசியல்வாதிகள் யாவரும் தேசத் துரோகிகள்' என்று விளக்கம் கொடுக்கிறார். இதனையே மகாவம்ச மனோநிலை என்கிறேன். இந்த மனோநிலையில் இருந்துதான் இராணுவத்திற்கு சிங்கள இளைஞர்கள் திரட்டப்படுகின்றனர். எப்படி இராணுவம் புலியை ஊக்கு வித்ததோ அவ்வாறே புலியும். இனங்களுக்கிடையிலான உறவுகள் துருவங்களாக்கப்பட்டு இலங்கையின் தென்பகுதி யில் இன்று குரூரமாக வளர்ச்சியுற்றிருக்கிற இனவாதப் போக்குக்கு புலிகளும் காரணம் என்பது மிகையல்ல. தென் பகுதியில் வளர்ந்துவரும் இனவாதம் தம் நோக்கத்துக்குச் சாதகமானதே என்று புலிகள் கருதுகின்றனர் போலும். அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்தால், தென் பகுதியில் எப்பவும் ஒரு குழப்பகரமான ஸ்திரமற்ற நிலை மையும் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தலும் அடக்குமுறை யும் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று கருதுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானது.
இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைகள்- போரைக் காரணம் காட்டி அரசத் துருப்புகள் ஏற்படுத்தும் திடீர் நடை முறைகள்- புலிகள் தம்மை மக்கள் முன் நியாயப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற மாதிரியாகவே இருக்கும். கொழும்பில் குடிகொண்டிருந்த ஐநூறு தமிழ் இளைஞர்களை அரசாங்கம் பலவந்தமாகப் பிடித்து பஸ்ஸில் ஏற்றி அவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டது. கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளைஞர்களை வவுனியாவில் கொண்டுவந்து விடுதல் என்பது, கொழும்பு உன் பிரதேசம் அல்ல என்று சொல்வதாக இருக்கலாம். அல்லது நீ வன்னிக்குப் போக வேண்டிய ஆள், போராட வேண்டிய ஆள், போராடியே என்னிடத்தில் சாகவேண்டிய ஆள் என்றும்கூட சொல்வதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆதவன்: மக்களின் வாழ்நிலை நொய்மைப் படுத்தப்பட்ட துயரத்தை இந்தப் போர்ச்சூழல் வழங்கியிருக்கிறது அல்லவா?
சுசீந்திரன்: அரச படைகளும் புலிகளும் தத்தம் பங்குக்கு ஆட்லறி குண்டுவீசிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக் கிடையில் அகப்படுவதென்னவோ பொதுமக்கள். இராணுவத்தால், வான்நிலைத் தாக்குதலால் மட்டுமல்ல புலிகளால் வீசப்படற குண்டுகளாலும் மக்கள் காயமடைகி றார்கள். காயமுற்றவர்களை நடமாடும் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றாலும் அந்த வைத்தியசாலை களில் எதுவும் இல்ல. நிறைய மரணங்கள் இரத்தப் போக் கால்தான் சம்பவிக்கின்றன. அங்கு அவசர சிகிச்சை என்பது காயத்தைச் சுற்றி கட்டுப் போடுவதுதான். திருகோணமலை துறைமுகத்திலிருந்து வடக்கு நோக்கி கப்பல் மூலம் மிகச் சிறிதளவிலான உணவுப்பொருட்கள், மருந்துகளை இடை யிடையே கொண்டு வந்து கொடுக்கின்றனர்; அதுவும்கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான். அப்படி வரு கிற கப்பலில் இந்தக் காயப்பட்ட மக்கள் 400 தொடக்கம் 500 பேர் ஒரேதடவை சிகிச்சைக்காக திருகோணமலை மருத்து வமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். சிகிச்சை வழங் கிய பின்னர் வெல்ஃபெர் சென்டர்ஸ் என்ற பெயரில் அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பல்வேறு முகாம் களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுவிடுகின்றனர். இந்த முகாம்களுக்குள் கொண்டு போய் இந்த மக்களை அடைத்து வைத்திருக்கின்றது அரசு.
ஆதவன்: முகாம்களில் அடைக்கப்படுகிற மக்களை அரசு என்ன விதமாக அணுகுகிறது?
சுசீந்திரன்: அரசாங்கக் கூற்றின்படி, முகாம்களின் முழு நிர் வாகமும் இராணுவத்தின் கையில்தான் இருக்கிறது. அடுத்த நான்கு வருஷங்களுக்கு இந்த மக்களை முகாம்களுக்குள் வைத்திருப்பதே அரசின் நோக்கம். காயப்பட்டவர்கள்- பொதுமக்கள் என்ற போர்வையில் புலிகள் ஊடுருவியிருக் கிறார்கள் என்று அந்த மக்களை தொடர்ந்து கண்காணிப்புக் கும், விசாரணைக்கும் உரியவர்களாகத்தான் வைத்திருக்கி றது. இப்பொழுது சர்வதேச சமூகமும், உதவும் நிறுவனங்க ளும் இந்த முகாம்களின் கண்காணிப்பையும் பராமரிப்பை யும் தமது கைகளில் தரும்படி கோருகின்றன. முகாம்களுக் குள்ளும் ஆட்கடத்தல், காணாமல் போதல், தற்கொலை மாதிரியான விடயங்களும் சமயங்களில் நடக்கின்றன. இவை சிலநேரங்களில் மிகைப்படுத்தப்பட்டு பயங்கரச் செய்திகளாகி வெளிநாடுகளுக்கு வந்து கொண்டுள்ளன.
ஆதவன்: ஈழத்துக்கான போராட்டம் வன்னிப்பரப்புக்குள் மையம் கொண்டது எவ்வாறு?
சுசீந்திரன்: வன்னிப்பிரதேசமென்பது காடுகள் கொண்ட, விவசாயத்தையே நம்பி வாழுகிற மக்கள் மற்றும் வடக்கின் வளமற்ற பிரதேச மக்கள் விவசாய நிலங்களைப் பெற்றுக் குடியேறிய பின்தங்கிய பிரதேசம். தனிநாட்டுக் கோரிக்கை, தமிழீழக் கோரிக்கை, அதற்கான அரசியல் போராட்டங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலும், அதைச் சூழவுள்ள வடக்குப் பகுதிகளிலும் உருவாயின. 1997-98ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் இடம்பெற்ற சண்டையில், யாழ்ப்பாண மாவட் டத்தில் அரசாங்கத்தின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர், உயர் பாதுகாப்பு வலையங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டு அந்த இடங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்தது-இப்போதும் இருக்கிறது. யாழ்ப்பாணத் தின் மீது கட்டுப்பாட்டை இழந்த புலிகளும் அவர்களது பணிப்பிலும் சுயவிருப்பத்தின் பேரிலும் மக்களும் வன்னிப் பிரதேசம் நோக்கி இடம்பெயர்ந்தனர். இந்த வன்னிப் பிர தேசத்தை தங்களுடைய நிரந்தர நிலைகொள்ளும் பிரதேச மாக புலிகள் அதன்பின்னரே ஆக்கிக் கொண்டனர். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாசம் 21ந் தேதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இதனை யடுத்து யாழ்ப்பாணத்தின் வடபகுதியிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்த அனேகம்பேர் தமதிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். வன்னியில் எஞ்சியோர் பாவப் பட்ட வன்னி மக்கள்தான்.
ஆதவன்: புலிகள் ஒரு அரசாங்கம் போல் செயல்பட்ட அந்த காலத்தை விளக்க முடியுமா?
சுசீந்திரன்: 2002ல் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட போது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சமதிறத்தவர்கள் என்ற அடிப் படையில் ஒரு அரசுக்கான அங்கீகாரம், சம அந்தஸ்து புலி களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த அங்கீகாரத்திலிருந்த சாதகமான விஷயங்களை புலிகள் நல்லவகையில் பயன் படுத்தவில்லை.மிகப்பெருமளவில் போருக்கு, படையணி களில் ஆட்களைத் திரட்டுவது முடுக்கிவிடப்பட்டிருந்தது. பாடசாலைகள் யாவும் புலிகளின் கைகளில் இருந்தன. புலிகள் அங்கு வந்து, நாங்க மீட்டிங் நடத்தப் போகிறோம் பிள்ளைகளையெல்லாம் கூப்பிடுங்கள் என்று கட்டளை யிடுவார்கள். ஆசிரியர்கள் புலிகளின் ஏவலாளர்களாயினர். ஒருவர் அரசு அதிகாரியாக அரசிடமிருந்து சம்பளம் பெறு வார். ஆனால் அவர் புலிகளுக்காகவே பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். இது கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்டது. மக்கள்மீது குற்றம் காண முடி யாது. இப்படி அங்கிங்கெனாதபடி நிர்வாகத்தின் முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர் புலிகள். ஆகவே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இந்த மக்கள் அடைக்கப்பட்டிருந்த சமாச்சாரம் அதிகம் வெளியில் தெரியவரவில்லை. சிங்கள அரச அடக்குமுறை, இரண் டாம்தரப் பிரஜைகளாகத் தமிழர்களை அரசு நடத்திய முறைமை என்பவற்றால் மக்கள் புலிகளின் அடக்குமுறை யினை மௌனமாகச் சகித்துக்கொண்டார்கள் என்று கொள் ளலாம். ஒரு கண்காணிப்பு அரசியலுக்கு உட்பட்டு வாழ்ந்த பழக்கமோ என்னவோ இதை யாரும் பேசுவதில்லை.
ஆதவன்- வன்னிக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கும் வன்னிப் பகுதிக்கும் இடையேயான தொடர்பின் உயிர்த்தன்மை எத்தகையது?
சுசீந்திரன்: போராட்டம் தொடங்கிய 80களிலிருந்து பெரும் தொகையான மக்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். வடக்கில் பின்தங்கிய மாவட்டங்களான கிளி நொச்சி, முல்லைத்தீவு, வன்னி, மன்னார், மற்றும் கிழக் கில் மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்ப்பாணம்- வட மாகாணப் பகுதியினர்தான் அதிகளவில் இடம் பெயர்ந்தனர். வன்னி என்று இழிவாகப் பேசப்பட்ட வன்னி மக்களோடு இந்தப் புலம் பெயர்ந்த மக்களின் பிணைப்பு அதிகமில்லை. இவர் களுக்கு வன்னி நிலப்பரப்பு அறியப்படாத பிரதேசமாகத் தான் இருக்கிறது. இந்த வன்னி நிலப்பரப்புக்கூடாகத்தான் ஏ.9 என்ற நெடுஞ்சாலை ஊடறுக்கிறது. இது கொழும்பை யும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற தரைவழிப் பாதை. இன்னுமொன்று, ஒருகாலத்தில் இருந்து இன்று அறுந்துபோன காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு வரைக்குமான ரயில்பாதை. சிலருக்கு ரயில் பிரயாணத்தின் போது சன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்ததுதான் வன்னி. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பஸ் பிரயா ணத்தின் போது வழிபாட்டுக்காக இறங்குமிடம் கிளி நொச்சிக்கு அடுத்து இருக்கிற முறிகண்டி. எல்லா வாகனங் களும் அவ்விடத்தில் நிறுத்தப்படும். நிறுத்தி அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு தேங்காய் உடைத்து கும்பிட்டுச் செல்வார்கள். அப்படிதான் பெரும்பாலான வெளிநாடு வாழ் மக்கள் இந்த வன்னிப்பகுதியை அறிந்துவைத்திருந்த னர். வன்னி மக்களுடனான தொடர்பாடல், உறவு, பிரதேசப் புவியியல் அறிவு இவர்களுக்கு பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்வேன். அதாவது இம்மக்களின் மீதான கவனம் குறைந்து புலிகளின் இருப்பு பற்றிய கேள்வி தான் இன்று இவர்களிடத்தில் முன்னிலை வகிக்கிறது.
ஆதவன்: புலிகள் இயக்கத்திற்குள் இளைஞர்கள் மனமுவந்து பங்கேற்கிறார்களா?
சுசீந்திரன்: சாமானிய மக்களுக்கு கட்டாயப் பயிற்சி வழங் கல், மக்கள் படை உருவாக்குதல் இவையெல்லாம் முடுக்கி விடப்பட்டு 2007வரை தொடர்ச்சியாகச் செய்யப்பட்டது. இதை இணையம் வாயிலாக வெளிநாடுகளில் வீரப் பிரச் சாரம் செய்தார்கள். வீட்டுக்கு ஒரு நபர் என்ற அளவில் எல்லோருமே வீட்டுக்கொரு போராளியைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படித் தள்ளப் பட்டதாலேயே கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பங் கள் மாவீரர் குடும்பங்களாக்கப்பட்டன. மாவீரர்களுக்கான சிலைகள், மாவீரர்கள் துயிலும் இல்லம் மற்றும் மாவீரர் வழிபாடு போன்றவற்றின் மூலம் மேலும் மேலும் மக்களை போருக்கு வென்றெடுப்பதற்கான உத்தி வகுக்கப்பட்டது. ஆண்குழந்தையையோ, பெண் குழந்தையையோ விடு தலை இயக்கத்திற்காக இழந்த குடும்பங்கள் ஏதோவொரு வகையில் புலிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் புலிகள் நிர்வாகத்தில் முன்னுரிமை பெற்றுக் கொண்ட குடும்பங்களாக்கப்பட்டனர். இக்குடும்பத்தினர் யுத்தப் பிரதேசத்தில் இருந்து தப்பி அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தால் பாதிக்கப்படலாம், கேள்விக்கு உள்ளாக்கப்படலாம், காட்டிக் கொடுக்கப்படலாம் போன்ற பயத்தின் காரணமாக தப்பிச்செல்வதைத் தவிர்த்து இறந்து கொண்டிருக்கின்றனர்.
ஆதவன்: தப்பி உயிர் வாழும் பொருட்டு மக்கள் பதுங்குக்குழிக்குள் அடைந்துகொள்வதாக செய்திகள் வருகின்றன. அறியாமையில் கேட்க சங்கடமாய்த்தான் இருக்கிறது, பதுங்குக்குழி எப்படி இருக்கும்?
சுசீந்திரன்: பதுங்குகுழி என்றால், படிகள் வெட்டப்பட்டி ருக்கும். கீழே இறங்கியதற்கப்புறம் கீழுக்கு அதைக் கொஞ்சம் விசாலமாக்குவார்கள். மேலே தரையிருக்கும். அதை மரங்களால் மூடி ஓலைகள் அல்லது இலைகளால் மறைச்சிருப்பாங்க. அங்கு வீசப்படும் குண்டுகளின் ஓசை யிலிருந்தும் திசையிலிருந்தும் இது இராணுவத்திடமிருந்து வருகிறதா புலிகளிடமிருந்து வருகிறதா என்று மக்களால் வேறு பிரித்தறிய முடிகின்றது. புலிகளிடமிருந்து வந்தால் ஒருவகை இரைச்சலோடு கூவிக்கொண்டு வருமாம். ஆமியிடமிருந்து வருவது வேறுவகை இரைச்சல். புலிகள் ஏன் இந்த குண்டை வீசுகின்றனர்? இது ஆமி மீது வீசப் பட்ட குண்டா என்றால் அப்படியுமில்லை. இராணுவம் முன்னேறி வரும்போது புலிகள் பின்வாங்குவார்கள். பின்வாங்கும்போது மக்கள் தொடர்ந்து பதுங்கு குழிக்குள் இருந்தாலும் புலிகளின் கண்காணிப்பில்தான் இருக்கி றார்கள். இவர்கள் தற்செயலாக மேலே எழுந்து வந்து எங்கே யாவது நகர்ந்தால், அசைந்தால் அங்கிருந்து வெளியேற முடியாதபடிக்கு அடிக்கிறார்கள் புலிகள்.
பதுங்கு குழியில் வாழும்போது குழந்தைகள் எப்படியாவது பதுங்கு குழியைவிட்டு வெளியே வருவதற்கான உபாயம் பண்ணுவார்கள். அழுவார்கள், அடம்பிடிப்பார்கள். தாகம் என்பார்கள், பசிக்குதென்பார்கள். என் மைத்துனரின் இரண்டுவயசுப் பையன், தண்ணீர் வேண்டும் என்றான். பிள்ளை தாகத்தில் அழுதபோது அவர் தண்ணீர் எடுக்க வெளியே வந்தார். சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தபோது, சொம்பில் வேண்டாம், தம்ளர் வேண்டும் என்றான். அவர் தம்ளர் எடுக்க வெளியில் வந்தபோது புலிகளால் வீசப்பட்ட ஷெல் அவருடைய வலது கையில் பட்டு கையில் முறிவு ஏற்பட்டது. ஷெல் படும்போது எறும்பு கடித்ததுபோல் இருந்ததாம். பின்னாடி பார்த்தால் கை எலும்பு தெரிந்ததாம். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அது கிளஸ்டர் பாமாக இருக்கலாம் என்பது என் ஊகம். சிதைந்த எலும் பின் கூறுகளை காயத்துக்குள்ளிருந்து கண்டுபிடித்தார்கள். அவர் இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்றார். ‘கையினை நான் இழந்தமையினாலேயே (காயமடைந்தமையால்) அங்கிருந்து வெளியேற முடிந்தது. உங்களை உயிருடன் பார்க்க முடிகிறது’ என்கிறார் அவர். இப்படி அந்த பதுங்கு குழிக்குள் வாழறது என்பது இலகுவான காரியமில்லை. அதனைக் கற்பனை செய்துகொள்வதே கடினம்.
ஆதவன்: சமாதான காலத்தில் உண்மையில் சமாதானம் இருந்ததா?
சுசீந்திரன்: 2002ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டுவரை சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்தது. சமாதான ஒப்பந்தம் நிலவிய அந்த வருடங்களில் அரசாங்கத்துடன் இடையிடையே முறுகல் நிலை தோன்றியது. ஆனால் மோதல் இருக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் புலிகள் பல்வேறு நாடுகளுக்கும் ஆறு சுற்று பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. பேச்சுவார்த் தையில் தங்களின் தரப்பை பலப்படுத்துவதற்கும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவு பெறுவ தற்கும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன. இலங்கையில் எப்படி ஒரு அரசியல் தீர்வு சாத்தியமாகலாம் என்பதனைச் சிந்திக்கக்கூடிய காலகட்டமாகவும்கூட இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் சமாதான ஒப்பந்த காலத் தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த மீறல்கள் புலி களால் மேற்கொள்ளப்பட்டன. களையெடுப்பு, துரோகிகள் அழிப்பு, துரோகியாக்குதல், மற்றும் தமிழ் மக்கள் மத்தியி லிருந்த புத்திஜீவிகள், மிதவாதத் தலைமைகள், அரசியலில் நடுநிலைமை வகிப்பவர்கள்,சமாதானப் பேச்சாளர்கள், எங்களது கோரிக்கைகளுக்கான ஊடகமாக இருக்கக்கூடிய வர்கள் எல்லாரையும் அழித்ததும் இந்த காலத்தில்தான்.
ஆதவன்: சமாதான ஒப்பந்தம் எப்படி அல்லது யாரால் முறிந்தது?
சுசீந்திரன்: போர் நிறுத்தக்காலத்தில், அதன் முக்கியத்து வத்தை, புலிகளோ புலிகளின் ஆதரவாளர்களோ உணரவேயில்ல. மக்களுக்கும் அதுபற்றி உணர்த்த வில்லை. 2006ம் ஆண்டு 'போரைத் தொடங்க வேண்டாம், சமாதானப் பேச்சுவார்த்தை¬யைத் தொடர்க' என்றே சர்வ தேசமெங்கும் குரல் இருந்தது. ஆனால் ஏப்றில் மாதம் இன்றைய இராணுவதளபதி சரத் பொன்சேகா மீது தற் கொலைத் தாக்குதல், அதற்கடுத்த மாதத்தில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர்- ஜனாதிபதியின் சகோதரர் கோத பாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல், பின்னர் யூன் மாதம் மாவிலாறு அணைத்தடுப்பு என்றவாறு புலிகளின் தாக்குதல்கள் அமைந்தன. போர் நிறுத்தம் என்பது ராணுவத் தந்திரோபாயம். 'எப்படியாவது இந்த போர் நிறுத்தத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டியுங்கள் என்று பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார்' என்று அன்ரன் பாலசிங்கமே சொல்லியிருக்கிறார்.
திருகோணமலையில் கட்டப்பட்டுள்ள பெரிய அணையி லிருந்து மட்டக்களப்புக்கு போகின்ற துருசை மாவிலாறில் புலிகள் சமாதான காலத்தில் அடைத்துத் தடை செய்தனர். அது தண்ணீர் போக வேண்டிய காலம். சுமார் 30,000 ஏக்கர் பரப்புக்கு அந்த தண்ணீர் வழங்கப்படவேண்டும். அது தம் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தபடியால் புலிகள் நிறுத்தி னர். கர்நாடாகாவினர் காவிரியை தடுக்கிறபோது ஏற்படும் அவலம் தமிழக மக்கள் அறிந்ததுதானே? அதுபோலதான் மாவிலாற்றின் அணையில் இருந்து நீர்ப் பாய்ச்சலைத் தடுத்து சுமார் 15,000 குடும்பங்களின் வயிற்றிலடித்தார்கள். அதுவே சண்டையின் தொடக்கமாகவும் புலிகளது தோல்வி யின் தொடக்கமாகவும் ஆனது. இந்த ஆத்திரமூட்டலை புலி களுக்கு எதிரான தன் சர்வதேசப் பிரச்சாரத்திற்குப் இலங்கை அரசு நன்றாகவே பயன்படுத்தியது. அணையைப் பார்வை யிட வந்த மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மீது புலிகள் வீசிய குண்டில் பலர் காயமடைந்தனர். அதற்குப் பின்னர் தான் கிழக்கின் மீதான யுத்தம் தொடங்கியது.
ஆதவன்: வடகிழக்கு என்பது வடக்காகவும் கிழக்காகவும் பிரிக்கப் பட்டதன் தொடக்கம் இதுதானா?
சுசீந்திரன்: அணையத் தடுத்து வன்னிப்பகுதிக்கு வாழ்வாதரப்பொருட்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரினர். ஆனால் நடந்ததென்னவோ கிழக்கு புலிகளிட மிருந்து பறிபோனதுதான். வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் ஒன்றை இனி நாம் கனவு காண முடியுமா என்பது கேள்வியாகிவிட்டது. கிழக்கு மாகாணம் தொலைத் ததில் வேறு எவரையும் குற்றம் காணுவதைவிட புலிகள் தான் அதற்கான பொறுப்பையும் எடுக்க வேண்டும். ஏனெனில் தமிழர்களுக்குள் இருக்கும் சிறுபான்மை இனங் களையோ மாற்றுக்கருத்துக்களையோ வென்றெடுப் பதற்குப் பதிலாக அவர்களை அழித்ததும் அகற்றியதும் தான் புலிகளின் வரலாறு. அந்த சாதுர்யம் அவர்களுக்கு கைகூடி வரவில்லை. முஸ்லிம்களை வெளியேற்றினார் கள், மாற்றுக் கருத்தாளர்களை அழித்தனர். சிங்களப் பேரினவாத அடக்குமுறையினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்ஈழக் கோரிக்கை. தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒப்பந்தங்களை நம்பி ஏமாற்றப்பட்ட தோல்விகளுக்குப் பின்னர்தான் ஆயுதப் போராட்டம் உருவானது. அதற்கான நியாயங்கள் எப்படி இருந்தபோதும் அதை ஒரு நியாயமான வழியில் வழிநடத்த புலிகள் தவறி விட்டனர். அதில் கிழக்கு பிரிந்தேவிட்டது.
ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தால் 13வது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அது அவசர அவசரமாக இலங்கையும் இந்தியாவும் ஒரு தீர்வுக்காக செய்து கொண்ட ஒப்பந்தம். அதன் நிமித்தமே தற்காலிகமாக வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாகச் செயற்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இணைப்பினைச் சட்ட வலுவுள்ளதாக்க ஒரு சர்வஜன வாக்கெடுப்பு அந்த மாகாணங்களில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பை சட்டச் செல்லுபடியற்றது என்றாக்கி அதை பிரித்துவிட்டார்கள்.
III
ஆதவன்: கிழக்கின் இன்றைய நிலை என்ன?
சுசீந்திரன்: 13வது திருத்தச்சட்டத்தின்படி கிழக்கில் மாகாண சபை ஏற்படுத்தி, பிள்ளையான் என்ற சந்திரசேக ரம் சந்திரகாந்தனை- முன்னாள் குழந்தைப் போராளியை அதன் முதலமைச்சர் ஆக்கியுள்ளோம் என்றெல்லாம் அரசு பிரச்சாரம் செய்கிறது. இந்தச் சட்டத்தின்படி, பாடசாலை நிர்வாகம், கல்வி, போலிஸ் நிர்வாகம் போன்ற விடயங்கள் மாகாண அரசுக்குரியது. இந்த மிகச்சிறிய அதிகாரங்களைக் கூட பரவலாக்க முன்வரவில்லை அரசு. இது எதைக் காட்டு தென்றால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்போது ஸ்ரீ மகிந்த சிந்தனை என்ற ஒன்றை செயல்படுத்தப் போகி றோம் - அதாவது இலங்கையில் தொடர்ச்சியான ஒற்றை ஆட்சி நடைபெறும் என்றனர். ஒற்றை ஆட்சிக்கு கீழ்தான் அதிகாரம் பரவலாக்கப்படும் என்பது முடிந்த முடிவாக ஸ்ரீமகிந்த சிந்தனையின் சித்தாந்தமாக இருக்கிறது. எனவே ஒரு அதிகாரப் பரவலாக்கம் சுமூகமாக நடக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்யப் போவதில்லை.
ஆதவன்: என்னதான் பிரபாகரனுக்கு எதிரான மனநிலை கருணா வுக்கோ பிள்ளையானுக்கோ இருந்தாலும், அதற்காக அதிகாரமற்ற ஒரு மொக்கையான அமைப்பை ஏத்துக்கிட்டு சவுகரியமாய் இருக்கிற மாதிரி அவர்களால் எப்படி இருக்க முடிகிறது?
சுசீந்திரன்: இந்த முப்பதாண்டு காலத்தில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று பார்ப்போம். ஒரு நூறு வருடமாக மக்கள் அனுபவித்து வந்த வசதிகள் எல்லாம் முப்பது வருடங்களில் இல்லாது போய்விட்டன. 1956 களில் தமிழரசுக் கட்சி, 80களில் தமிழ் விடுதலை கூட்டணி எவ்வாறு இலங்கை அரசிடம் பேசக்கூடிய பேசுபலம் பொருந்தியதாகவும், ஜனநாயகரீதியாகப் பெற்ற அதிகாரங் களை நடைமுறைப்படுத்துவதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் புலிகளிடம் இல்லாமல் போய்விட்டன.
இந்தப் போராட்டமே தமிழர் மத்தியில் சமூக விரோதிகளை ஒழிக்கும் செயற்திட்டத்துடன்தான் 80களில் தொடங்கி யது. மிக இலகுவாக, இவள் விபச்சாரி- ஆகவே இவள் வாழத் தகுதியற்றவள் என்று மின் கம்பத்தில் கட்டினார்கள். சுட்டார்கள். இவன் கள்ளன், இவன் களவெடுத்தான் என்று சுட்டு லைட் கம்பங்களில் கட்டினார்கள். ஆயுதம் தாங்கிய குழுக்கள் மக்கள் மத்தியில் இப்படிதான் பிரபலமாயின.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒருவகையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டமாக பார்த்தாலும் அதன் உபவிளைவாக அது எங்கெங்கிருந்து ஊற்றெடுத்தது என்பவற்றையும் பார்க்கத் தவறக்கூடாது. மிகையழுக்கம் சார்ந்த ஒரு சமூகத்தை வென்றெடுக்க லாம் என்ற மனோநிலைப்பட்டதாகத்தான் இருந்திருக்குது. ஆக,களை பிடுங்கும் கொலைகளில் இருந்துதான் இந்தப் போராட்டமே முகிழ்த்தது. பின்னர் போராடப் புறப்பட்ட ஏனைய அமைப்புகளை அழிப்பதும் போராட்ட வரலாற் றின் பகுதியாக இருக்கிறது. புலிகளின் பிரதேசத்தில் அடைபட்டுழலும் மக்கள் சொல்வது, எப்படியாவது உயிர் வாழணும்... உயிரைத் தக்கவைக்க எதுவும் பண்ணலாம் என்பதுதான். ஆகவே இன்றைக்கு கருணாவுக்கு வேறு வழி யில்லை. மாத்தையாவுக்கு வந்தது தனக்கும் நேர்ந்துவிடக் கூடாதென்பதில் கருணா அவதானமாக இருக்கின்றார் .
ஆதவன்: அதற்காக அரசாங்கத்தோடு சேரமுடியுமா?
சுசீந்திரன்: கருணா புலிக்குள்ளேயே இருந்து வந்தவர் தானே. ஆகவே அவருக்கு அரசுடன் சேர்வதைத்தவிர வேறு வழியும், வேறு பாதுகாப்புமிருக்கவில்லை. 'இவ்வளவு அட்டூழியம் செய்து- இவ்வளவு அழிவுக்கும் காரணமான இலங்கை ராணுவத்திடம் ஏன் மக்கள் தஞ்சமடைகிறார் கள்' என்று ஒரு கேள்வியை முன்பு கேட்டீர்கள்! மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதே நிலதான் கருணாவுக்கும். அதே நிலை நாளை பிரபாகரனுக்கும் கூட ஏற்படலாம். வரலாற்றை புரட்டிப் பார்க்கையில் இலங்கை அரசின் அடக்குமுறையிலிருந்து மீள இந்திரா காந்தி காலத்தில் இந்தியாவில் பயிற்சி பெற்றனர். பிறகு ராஜீவ் காந்தி இந்தியத் துருப்புகளை (ஐபிகேஎஃப்) அனுப்பிய சிறிது காலத்தில் அதனுடன் போராடுவதற்கு அன்று இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவுடன் போய் ஆயுதம் வாங்கிகொண்டார்கள். பின்னர் கருணாவை தங்கள் கைகளில் ரணில் ஒப்படைக்கவில்லை என்ற கோபத்தை வைத்து ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதி யாகாமல் தடுத்து ராஜபக்ஷவை வெற்றியுறச் செய்தார்கள்.
ஆதவன்: முழுமையாக அரசாங்கத்தை நம்பிட்டதால்தான் கருணாவும் பிள்ளையானும் ஆயுதங்களை ஒப்படைக்குமளவுக்கு போனார்களா?
சுசீந்திரன்: ஆயுத ஒப்படைப்பு எப்பவும் வெறும் கண் துடைப்புதான். ஏபிஆர்சியைக் காட்டி நாங்கள் அரசியல் தீர்வு காண்போம் என்று இலங்கை அரசு எப்படி சர்வதேசத் திடம் ஒப்பு சொல்லிக்கொண்டிருக்கிறதோ அதேபோல் தான் ஆயுத ஒப்படைப்பும். மாகாண சபையன்றுக்குத் தரவேண்டிய காணி அபிவிருத்தி, காணி பகிர்ந்தளிப்பு அதி காரங்களை கொடுக்கவில்லை- அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான சிங்களக் குடியேற் றங்களை கிழக்கில் நடத்திக் கொண்டிருக்கிறது. கிழக்கில் சிங்கள இனத்தின் குடிசனப் பரம்பலைக் கூட்டி அதன் மூலம் கிழக்கு மாகாணத்தை கையகப்படுத்த அரசு நடத்தும் இந்த சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்கு எந்தவித வல்லமையும் இல்லாததுதான் கிழக்கின் மாகாண சபை. தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையும் திட்டமிட்டே பௌத்த நாடாக்குதலும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
ஆதவன்: மட்டக்களப்பின் தென்கிழக்குப்பகுதியை பாரம்பரிய பிரதேச மாகக் கொண்ட முஸ்லிம்களுக்கும், வடக்கிலிருந்து புலிகளால் வெளி யேற்றப்பட்டு புத்தளம் போன்ற மேற்குப்பகுதியில் இருக்கிற முஸ்லிம் களுக்கும் மத, கலாச்சார ரீதியான தொடர்புகள் உள்ளதா?
சுசீந்திரன்:பெரும்பாலும் இலங்கை முஸ்லிம்களை முன்பு வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தென்பகுதி முஸ்லிம்கள் என வகைப்படுத்துவார்கள். வடக்கு கிழக்கு முஸ்லிம்களை விட தென்பகுதி முஸ்லிம்களின் ஆதிக்கம்தான் அரசியலில் கூடுதலாக இருந்தது. காலஞ்சென்ற அஸ்ரப் வருகைக்குப் பின்னர்- முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர்தான்- முஸ்லிம்களுக்கென்று தனி அரசியல் அடை யாளம் ஏற்பட்டது. அதில் கூடுதல் அங்கம் வகிப்பவர்களாக கிழக்கு முஸ்லிம்கள் உருவாகினர். வடக்கில் முஸ்லிம்கள் மிகச்சிறு பகுதியினராயிருந்தனர். அவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளோடு தான் தொடர்பு இருந்தது. முதலா வது முஸ்லிம் அரசியல் பிரசன்னம் கிழக்கில்தான். எப்படி சிங்கள தேசிய உருவாக்கம் தமிழ்த்தேசிய உருவாக்கத்தை முடுக்கிவிட்டதோ அதுபோல தமிழ்த்தேசியத்தின் போக்கு முஸ்லிம் தேசியம் உருவாகக் காரணமாக அமைந்தது. அதுவே முஸ்லிம் தீவிரவாதத்திற்கும்கூட கொண்டு சென்றி ருக்கலாம், அதிர்ஷ்டவசமாக அந்தநிலை வந்துவிட வில்லை. ஆனால் இன்று கிழக்கு மாகாணம் உருவாக்கப் பட்ட பின் முஸ்லிம்கள் தாங்கள் ஓரளவுக்கு காப்பாற்றப் பட்டுவிட்டோம் என்ற மன நிலையில் இருக்கின்றனர்.
ஆதவன்: கிழக்கில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களுக்குள் கூடி வாழ்கிற ஒரு இணக்கமான உறவு உருவாகியிருக்கா?
சுசீந்திரன்: அது இருக்கிறதென்றே சொல்வேன். 90களுக்கு முன் வடக்கிலும்கூட தமிழர்- முஸ்லிம்களுக்குள் இணக் கப்பாடும் நல்லிணக்கமும் இருந்தன. சிங்களவர் மிகக் குறைவாக இருந்தனர். கிழக்கிலும் தமிழர்களும் முஸ்லிம் களும் சிங்களவர்களும் மிக நீண்டகாலமாகவே நல்லிணக்கத்தோடு இருந்தார்கள். இன்று பிரிவினை வாதங்களால் ரணப்பட்ட பிரதேசமாக கிழக்கு இருந்தாலும் புலிகளை முற்றாக கிழக்கிலிருந்து நீக்கியதன் பின்னர் இனங் களுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது. ஆனால் இதுவரைகாலம் ஆயுதக் கலாச்சாரத்தால் பீடிக்கப் பட்ட மக்கள் சனநாயகப் பண்புகளை அனுபவிக்க முடிய வில்லை. அண்மையிலும் திருகோணமலை பகுதியில் வர்ஷா என்ற ஆறுவயசு குழந்தை கடத்தி கொல்லப்பட்டி ருக்கிறாள். இடையிடையே இவ்வாறான அதிர்ச்சியும் கொடூரமுமான சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து கிழக்கு மாகாண மக்கள் இருக்கிறார்கள் .
ஆதவன்: வடக்கில் தம் இனம் அழிக்கப்படுவதை எதிர்த்து கிழக்குப் பகுதி தமிழர்களும், இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் களும் ஏதேனும் இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களா?
சுசீந்திரன்:இல்லை.கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு ஜனநாயகப்பண்பு இருக்கிறதென்கிறது அரசு. ஆனால் வன்னி மக்களை விடுவியுங்கள் என்று அங்கு ஒரு போராட்டமும் நடக்கவில்லை. அதை இரண்டுவிதமாக பார்க்கலாம். ஒன்று அரசின் அடக்குமுறை தொடர்ந்து கிழக்கில் இருப்பதாகவும் கருதலாம். அல்லது வன்னி மக்கள் என்பதைவிட புலிகளைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை என்று மக்கள் கருதுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். கிழக்கு விடுவிக்கப்பட்டதாகவும் வன்னிப்பகுதி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வும்தான் பெரும்பாலான இலங்கை மக்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது. ஏனெனில் போர்நிறுத்தம் வேண்டும்,
சண்டையை நிறுத்து, சமாதானப்பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்து போன்ற கோரிக்கைகள் இலங்கையில் முற்று முழுதாக இல்லையென்றே சொல்லலாம். மலையகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் கொள்கை வகுப்பாளர்கள், இது தமிழ்பேசும் மக்களின் போராட்டம், தமிழீழம் ஒன்று அமையும்போது தமிழ் பேசும் மக்களான முஸ்லிம்களின் பிரச்சனையும் மலையக மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படுமென்று சொல்லியிருந்தாலும்- இது வெறும் யாழ்ப்பாண மையவாதத்திலிருந்து தொடங்கப்பட்ட போராட்டம் என்ற முடிவுக்கு வரக்கூடிய நிலைதான் இன்று இருக்கிறது.
IV
ஆதவன்: ஏதாவதொரு காலகட்டத்தில் இன்றைய போரை தவிர்த்திருப் பதற்கான வாய்ப்பு ஏதேனும் இருந்ததா?
சுசீந்திரன்: நாச்சிக்குடாவில் முதலாவது தாக்குதல், விடத்தல் தீவு, மன்னார் போன்ற இடங்களில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியபோது 'சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளலாம்; முதலில் நீங்கள் போரை நிறுத்துங்கள் நாங்களும் நிறுத்திக்கொள்கிறோம்; எங்களுக்கு மக்கள் முக்கியம்; இந்த மக்களை நீங்கள் வான் தாக்குதல் மூலம் குண்டுவீசிக் கொல்லவேண்டாம்' என்று சொல்லி நிறுத்தியிருந்தால் பெரிய அளவில் மக்களை அழிவிலிருந்து காப்பாத்தியிருக்கலாம், பெருந்தொகைப் போராளிகளையும் காப்பாத்தி இருக்கலாம். எத்தனையோ அழிவுகளிலிருந்து அந்த பூமியையும் மீட்டிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. 'கிளிநொச்சியைப் பிடித்து விடலாமென்று இலங்கை அரசாங்கம் கனவு கண்டு கொண்டிருக்கிறது' என்றுதான் பிரபாகரன் சொன்னார். புலிகள் பலமாக இருக்கிறார்கள், பல்வேறு உத்திகளில் அவர்கள் பொறுமை காத்து முன்னேறுவார்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் போர்நிறுத்தக் கோரிக்கை ஆரம்பத்தில் எழாமல் இருந்திருக்கிறது. கிளி நொச்சியும் பறிபோனதற்கு பின்னர்தான் போரை நிறுத்து என்ற கோரிக்கை. ஆனால் அதற்கு முன்னரே மக்களுடைய சாவும், மக்களின் அழிவும் மக்கள் தொடர்ந்து ஊனமுறுவ தும் காயப்படுவதும் நடந்து கொண்டுதானே இருந்தது.
ஆதவன்: காலந்தாழ்ந்தேனும் எழுந்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கை பலனளிக்கும் வாய்ப்பிருக்கிறதா?
சுசீந்திரன்: சர்வதேச அமைப்புகள், நோர்வே போன்ற நாடுகள் புலிகளையும் இலங்கை அரசையும் சமஅளவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துகையில், இரண்டுபக்கமும் ஒரு சமமாக மதிக்கப்பட வேண்டுமென்ற கோதாவில்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவ்வாறே எனக்கு தெரியக்கூடியதாக, சர்வதேச உதவும் ஸ்தாபனங்கள் புலி களையும் ஒரு சமதிறத்து அரசுக்குரிய பூரண அங்கீகாரத் தோடுதான் வன்னிப் பிரதேசங்களில் சுனாமிக்கு பிந்தைய அபிவிருத்தி மற்றும் வன்னிப் பிரதேசங்களில் நடக்கக்கூடிய பிற அபிவிருத்தி போன்றவற்றிற்கு உதவி வழங்கிக் கொண் டிருந்தார்கள். புலிகளோடு நீண்டகால அனுபவம்மிக்க இந்த சர்வதேச சமூகம் புலிகளின்பால் நம்பிக்கை இழந்து விட்டது. அமெரிக்கா உள்ளிட்ட 27க்கும் மேற்பட்ட நாடு களில் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது. இந்த நாடுகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றால் புலிகள் முன்பே தமது அணுகுமுறையை வேறுமாதிரி மாற்றியிருக்கவேண்டும். அந்த மாற்றம் இல்லாமல் வெறும் அனுதாபத்தின் அடிப்படையில் சர்வதேசம் கண் திறக்கும் என்ற நப்பாசையில் புலிகள் நடந்துகொண்டனர். வெறும் நப்பாசையில் போரை நிறுத்து என்று கேட்பது விழலுக்கி றைத்த நீர். இன்று சர்வதேசமும் புகலிடங்களும் புலிகள் அழிந்தால்தான் இன்னொரு மாற்றம் ஏதும் நடைபெறலாம் என மறைமுகமாக மகிழ்வோராகத்தான் இருக்கிறார்கள்.
ஆதவன்: தமிழ்நாட்டில் பரவலாக ஒரு ஆதரவு அலை இருக்கையில் இப்படி ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் என்று சொல்ல முடியுமா?
சுசீந்திரன்: இந்தியாவில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவு அலை மற்றும் போராட்டங்களின் போதான கோரிக்கைகளை ஒரு அரசியல் ஞானமுள்ள அல்லது இந்த இலங்கை பிரச்சினை யின்பால் ஈடுபாடுள்ள தனிநபராகினும் அல்லது ஒரு நாடாகினும் இவற்றை நகைப்பிற்கிடமாகத்தான் பார்த்தி ருப்பார்கள். ஏனெனில் இலங்கை முப்பது வருசமாக இனப் பிரச்சினையால் பீடிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு நாடு. அந்த நாட்டில் தொடர்ச்சியாக சண்டை நடக்கின்றது. எல்டிடிஇ என்ற ஆயுதம் தாங்கி அமைப்பு சில குறிப்பிட்ட பிரதேசங் களை வைத்திருந் தது. அங்கு ஒரு லட்சத்து ஐம்பதனாயிரம் தொடக்கம் இரண்டுலட்சம்வரை மக்கள் அடைபட்டிருக்கி றார்கள். அந்த மக்கள் மத்தியில் நீண்டகாலமாக வேலை செய்து சர்வதேச ஸ்தாபனங்களும் உதவும் ஸ்தாபனங்களும் பெற்றிருக்கும் அனுபவங்களையும் ஞானங்களையும் கணக்கில் எடுக்காமல் வெறுமனே ஒருதலைபட்ச சார்பு நிலைப்பட்டதாகத்தான் இவ்விடத்துக் கோரிக்கைகள் இருந் தன. இந்த கோரிக்கைகள் ஒரு தர்க்கத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் சிறிது ஆழமாக பார்த்தால் மிக இலகுவாகப் புலப்படும்.
2002ம் ஆண்டு இலங்கை அரசின் அனுசரணையின் பேரில் நோர்வே அரசு தலையிட்டு சமாதான ஒப்பந்தத்தை ஏற் படுத்தி ரணில் விக்ரமசிங்க காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மேற்குலக அரசுகளால் புலிகள் மீதான அரசியல் அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை. இலங்கை அரசு மீது ஏதோ ஒருவகையில் அரசியல் அழுத்தம் கொடுக்க யூஎன்ஓ, உதவி வழங்கும் நாடுகள், நிறைய வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ள நாடுகள் மற்றும் சார்க் நாடுகள் உள்ளன. சார்க் நாடுகளில் மிக முக்கிய அயல்நாடான இந்தியா இலங்கையோடு அரசியல்ரீதியில் கொடுக்கலும் வாங்கலும் வைத்திருக்கிறது. இந்தியா நினைத்தால் இலங்கை அரசின் இறைமைக்கு எந்தவகையிலும் குந்தகம் இல்லாமலே அதன்மீது அழுத்தத்தை பிரயோகிக்கலாம்.
ஆகவே ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசை விமர்சிக்கவும் அதன் மனித உரிமை மீறல்களை சர்வதேச நீதிமன்றம் வரையிலும் கொண்டு செல்லக்கூடிய வல்லமையும்கூட எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. போரி னால் சாவது மக்கள். அவர்கள் மீது குண்டு போடுவதை நிறுத்து, நீ பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடு, அது உன்னுடைய நாட்டு பிரச்சனை. மக்கள் உனது நாட்டு மக்கள், அவர்கள் மீது நீ கைவைக்கக்கூடாது. அந்த மக்களை புலிகளிடமிருந்து மீட்டெடுக்க வேண்டியதும் அவர்களின் இதயங்களை வெல்ல வேண்டியதும் உன் கடமை. அதை நீ செய்யாமல் இருக்கிறாய். அடைபட்டுள்ள மக்களை உடன டியாக மீட்டெடுப்பதற்கான காரியங்களைப் பார். மீட்டெ டுத்த மக்களை வெல்பேர் சென்டர்ஸ் என்ற முகாம்களில் முடக்காமல் அவர்களை நல்லபடி பராமரியுங்கள் என்று சொல்லி இலங்கை அரசிடம் கேட்கலாம். கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால் புலிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவது யார்? புலிகள் எதில் தங்கி இருக்கிறார்கள்? புலிகள் என்கின்ற டே பேக்டோ அரசாக செயல்பட்ட அமைப்பின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் சாவி யாரிடமாவது இருக்கிறதா என்றால் இல்லை.
ஆதவன்: தமிழர்கள் என்ற காரணத்தால்தானே ஈழப் பிரச்னையில் பிற சமூகங்கள் அக்கறை காட்டவில்லை?
சுசீந்திரன்: அப்படியல்ல. 1990ம் ஆண்டு ஜேவிபியின் இரண்டாம் கட்ட எழுச்சியில் சுமார் 60000 சிங்கள இளை ஞர்கள் பிரேமதாச அரசால் நரவேட்டையாடப்பட்டனர். அதற்கு தமிழ் தரப்பில் உலகளவிலேயே யார் குரல் கொடுத் தார்கள் என்றால் மிகச் சொற்பம் அல்லது இல்லை. கிளி நொச்சியை தலமையிடமாகக் கொண்டு வன்னிப்பிரதேசத் தில் தமிழீழம் என்பது சிறிது காலமேனும் இயங்கியிருக் கிறது. அந்த டெரிட்டரியில் அரசாக அல்லது அரச பண்பு களைக் கொண்டு இயங்கிய புலிகள் சர்வதேசப் போராட் டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கா? அந்த கால கட்டத்தில்தான் ஈராக் மீதான படையெடுப்பு நடந்திருக்கி றது. ஆப்கன் மீதான படையெடுப்பு நடந்திருக்கிறது. ஆப்கன் மீதான படைக்குவிப்புக்கோ அல்லது ஈரான், ஈராக் மீதான அச்சுறுத்தலுக்கோ எதிராக இந்த தமிழீழத்திலிருந்து யாராவது ஊர்வலம் சென்றிருக்கிறார்களா? இன்று நீங்கள் ஜெனிவாவிற்கு யுஎன்னுக்கு ஊர்வலம் போகையில் எந்த நாடு- எந்த போராடும் மக்கள் உங்கள் மீது கவனத்தை செலுத்தப் போகிறார்கள்? ஈழப்பிரச்னையில் சர்வதேச சமூகம் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது, பாராமுகமாக இருக்கிறது, குழந்தைக் கொலைகளை பார்க்கவில்லை, கர்ப்பிணிகளை பார்க்கவில்லை என்று சொன்னால் நீங்க என்ன பண்ணினீங்க? உங்களோட காலத்தில் ஏதாவது ஒரு நாட்டுக்காகவாது குரல் கொடுத்திருக்கிறீர்களா? இதில் மக்கள் போராட்டம் எங்கேயிருக்கு? அல்ல. மக்களுக்குப் போராட்டம் என்பதே தெரியலியே? சர்வாதிகாரமாக, மக்களுடைய எல்லாவித துணிச்சலையும் மழுங்கடிச்சி அவர்களை வெறும் காய்களாகத்தானே வைத்திருக்கீங்க. அவர்கள் எதற்காக முன்வருவார்கள்? அவர்கள் அன்றாட பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்வார்களே தவிர அவர்கள் எதற்குப் போராடியிருக்கிறார்கள்?
புலிகள் ஒரு போராடும் இயக்கம். 97ஆம் ஆண்டிலிருந்து ஒரு பலம் பொருந்திய அமைப்பாக இருக்கிறது. உலகத்தின் மிகச்சிறந்த ஒழுக்கமான அமைப்பு, மிகப்பயங்கரமான அமைப்பு என்ற பெயரையும் வாங்கியிருக்கிறது. ஒரு வன்னிபெருநிலப்பரப்பில் சிறைச்சாலைகளை அமர்த்தி யிருக்கீங்க. ஆட்சிப்பீடத்தை அமைச்சிருக்கீங்க, போலீஸ் பவர் எடுத்திருக்கீங்க. ஆயுத உற்பத்தி நடத்தியிருக்கீங்க. ஒன்றியங்களை உருவாக்கி இலங்கை அரசை நோக்கிய போராட்டங்களை நடத்தியிருக்கீங்க. ஏன் சர்வதேச அமைப்பு ஒன்றுக்கு ஆதரவான போராட்டத்தை நீங்க மக்களுக்கு கற்றுக்கொடுக்கயில்லை?
ஆதவன்: அல்லது தம்மைப்போலவே ஒடுக்கப்படும் பிற சமூகங்களை ஏன் அறிமுகப்படுத்தல? இலங்கையில் காயப்பட்டவர்களுக்கு கட்டுப் போட பேண்டேஜ் துணிகூட இல்லாமல் பழைய துணிகளையும் பெட்சீட்டையும் கிழித்து சுத்தறாங்க. மயக்க மருந்து இல்லாம கதறகதற ஆப்பரேசன் பண்றாங்க. ஆனா போருக்கும் முன்பே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈராக்கில் பத்து வருடங்களுக்கும் மேலாக மயக்க மருந்து சப்ளை இல்ல. அமெரிக்கா தடுத்து வச்சிருக்குது. அங்கு வெறும் பிளேடால் அறுத்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டியிருக்கிறது. பிளேடால் அறுக்கிற வலியையும் சேர்த்து தாங்கிக்கொண்டு முடிந்தால் உயிர்வாழப் பார் என்பதுதானே நிலை?
சுசீந்திரன்: ஈராக்கில் அமெரிக்கத்துருப்புகள் குவிக்கப்படு வதற்கு பத்து வருசத்துக்கு முன்பே பொருளாதாரத்தடை தொடங்கிவிட்டது. கால்நடைகள் தொடங்கி அவர்களின் எல்லா வளங்களையும் பயாலஜிகல் வெப்பன்களால் அழிச் சிட்டாங்க. மிகப்பெரிய துன்பங்களில் அவர்கள் இருந் தனர். எங்களுக்கு காட்டப்பட்டது உசேன் படங்கள் எவ்வளவு பெரிசா கட்அவுட் வச்சிருக்காங்க என்பதுதானே தவிர அடிநிலை மக்கள் எப்படி கஷ்டப்படறாங்க என்று காட்டப்படல. அந்த ஈராக் மக்கள் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஆதவன்: பங்களாதேஷ் விடுதலையில் தலையிட்ட மாதிரி இலங்கைத் தமிழர் விசயத்தில் ஏன் இந்தியா தலையிட மறுக்கிறது? ஷோபா சக்தி இரண்டுக்கும் வேறுபாடுள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?
சுசீந்திரன்: ஆரம்பத்தில் இந்திய ஆதரவுதான் ஈழ விடு தலைப் போராட்டங்களுக்கு மத்தியில் இருந்தது. நாங்க ளெல்லாம் அந்தக்காலத்தில் நம்பினது இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று. இந்திரா காந்திதான் எங்களின் காவல் தெய்வம் சமாதானப்புறா என்றெல்லாம் நாங்கள் யோசித்த காலம் ஒன்று இருந்தது. இந்திய சமாதானப்படை வந்து இறங்கிய உடனே (ஐபிகேஎப்) மக்களெல்லாம் விழுந் தடித்து மாலை போட்டார்கள். மக்கள் இந்தியா மீது மிகை யான எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத் தில் புளாட் என்ற அமைப்பு 'வங்கம் தந்த பாடம்' என்று ஒரு நூலை வெளியிட்டது. பங்களாதேஷில் இந்திய ராணு வம் எவ்வாறு நடந்து கொண்டது என்பது விலாவாரியாக அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது. அதை யாரும் அன்றைய காலகட்டத்தில் ஏற்கவோ படிக்கவோ தயாராயிருக்கல. பின்னாடி புலிகளுக்கும் புளாட்டுக்குமான முறுகல் நிலை முற்றி ஒருவரை ஒருவர் அழித்த நிலைக்கெல்லாம் அப்பால் இந்திய ராணுவத்தை எதிர்த்து புலிகள் போராடிய நேரத்தில் இந்த வங்கம் தந்த பாடம் புத்தகத்தை பிரச்சாரம் செய்ததும், அதைக் காவித்திரிந்துகொண்டு விற்றதும் புலிகள்.
ஆதவன் : அந்த புத்தகம் குறிப்பிடுகிற முக்கிய விசயங்கள் என்ன?
சுசீந்திரன்:எந்த ராணுவமாக இருந்தாலும் அது சில இயல் புகளை கொண்டிருக்கும்தானே? அந்த இயல்பில் காப்பாற் றும் ராணுவமாக கருதப்பட்டாலும்- பங்களாதேஷ் என்றொரு நாட்டை உருவாக்கினாலும்கூட அந்த மக்களி டம் இந்திய ராணுவம் நடந்துகொண்ட விதம் இருக்கிறது தானே? எத்தனை மக்கள், எவ்வளவு வஞ்சகத்தனமாக கொல்லப்பட்டனர், எவ்வாறு சூறையாடப்பட்டனர் எவ்வாறு மானபங்கப்படுத்தப்பட்டனர் என்பதையெல் லாம் புள்ளி விபரத்தின் அடிப்படையில் புளாட் போட்டி ருந்தது. இதேமாதிரி நிலை இலங்கையிலும் ஏற்பட்டது தான். வரலாற்றை இப்படியும் பார்க்கலாம் அப்படியும் பார்க்கலாம். இந்திய ராணுவம் இலங்கையை விட்டு தானாக வெளிக்கிளம்பிப் போனதால் வரலாற்றை எழுது வோராக புலிகள் மாறினர். புலிகள் வென்றதாகவும் இந்திய சமாதானப்படை தோற்று தானாக திரும்பியதாகவும் இலங்கை மக்களின் மனங்களில் வரலாற்றை விடுதலைப் புலிகள்தான் எழுதினர். அந்த வரலாறுதான் இந்திய சமா தானப்படையின் வரலாறாக இருக்கிறது. மாறாக, இந்திய சமாதானப்படை, இலங்கையிலிருந்து இலங்கையின் போராட்ட வரலாற்றை தன்னால் ஏற்பட்ட பெருபேறு என்ற அடிப்படையில் எழுதியிருந்தால் இந்தியா தமிழீழத்தை பெற்றுக்கொடுத்த தேவதையாகத்தான் வரலாற்றில் காட்டப்பட்டிருக்கும். ஆகவே, இந்திய நடுவ ணரசு பங்களாதேஷில் அதை சாதித்தது இதை சாதித்தது என்று சொல்லி கேட்பதில் அர்த்தமில்லை. எப்படியெப்படி எல்லாம் மனிதர்கள் புலிளையும் இந்திய ராணுவத்தையும் இலங்கை ராணுவத்தையும் கணிக்கிறார்கள் என்றால் வேறொரு மயக்க நிலையில் இருந்துதான்.
ஆதவன்: ஆசியாவின் சேகுவேரா என்றழைக்கப்படும் பிரபாகரன், சேவின் அரசியல் உள்ளடக்கங்களை உள்வாங்கிக் கொண்டவரா?
சுசீந்திரன்: தனிநபர் வழிபாட்டுக்கு பழகிப் போனது தான் தமிழ்ச்சமூகம். தனிநபர் வழிபாட்டுத்தன்மையிலிருந்து பிரபாகரன் மீது கட்டப்பட்டிருக்கும் பிம்பங்கள் இருக்கு தானே, அவை வெவ்வேறு விதமானவை. இன்றைய தமிழ்நாட்டு தமிழர்கள் நேரடியாக ஆயுதந்தாங்கினப் போராட்டத்தைக் கண்டதில்லை. வெறும் கற்பனாவாத மாயையில் இருக்கிறார்கள். அதேமாதிரி திராவிடக் கலாச் சாரம் தந்த மிகையுணர்வும் இவர்களிடம் ஜாஸ்தியா இருக்கி றதனால இந்த தமிழ் மக்களோட போராட்டம், புலிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள் தியாகங்களில் சங்ககால மறத்தமிழர், புறநானூற்றுத்தன்மைகளையெல்லாம் அதற் குள் பார்க்கிறார்கள். ஆகவே எதார்த்த ரீதியாக வரலாற்றை யும் போராட்டத்தையும் பார்த்தோமானால் சேகுவேரா போன்ற பெரும் புரட்சியாளர்களுடனான இவ்வகை ஒப்பீடுகள் மிகவும் அபத்தமாக தெரியும். சேகுவேராவின் புரட்சிக்கான போராட்டத்தை யும் தேசிய விடுதலைக்கான இந்தப் போராட்டத்தையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது.
இடதுசாரிகளை, மாற்றுக்கருத்தாளர்களை, எமக்குள்ளே இருந்த முஸ்லிம்களையும் சிறுபான்மையினங்களையும் வேட்டையாடியது, சாதிய ஒடுக்குமுறைக்கு பலமாக இருந் தது, அல்லது இவ்விதப்பட்ட சமூகச் சிக்கல்களில் பாரா முகமாக இருந்து வெறும் ராணுவமயப்பட்ட சமூகத்தை உருவாக்கிய ஒரு பாசிசத்தன்மையை சேகுவேரா அல்லது இடதுசாரித்தன்மையோடு ஒப்பிடுவது அபத்தமானது.
யவனிகா: பாசிச அடிப்படைன்னா அது மொழி அடிப்படையிலோ அல்லது இன அடிப்படையிலோ இருந்திருக்கா?
சுசீந்திரன்: ஆமாம், ஆரம்பத்திலிருந்தே நாங்கள் நிதமும் சொல்வது, யாழ்ப்பாண கலாச்சாரம், ஒரு கந்த புராண- சைவ வேளாள கலாச்சாரம். அதுதான் அங்கே கோலோச்சிய கலாச்சாரமும்கூட. அடுத்து பரம்பரை பரம்பரையா உங்க ளோடு இருக்கின்ற இன்னொரு சிறுபான்மை இனம்மீது உங்களுக்கு சந்தேகம் வருகிறது. அந்த சிறுபான்மையினர் தங்களை எப்படி அடையாளப்படுத்தி இருந்தார்கள்? நாங்கள் தமிழ்பேசும் மக்களாக இருக்கிற அதேவேளை யில், நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழர், எங்கள் மொழி தமிழ். எங்கள் மதம் இஸ்லாம். இந்த அடையாளம் புலிகளுக்கு தொந்தரவாக அமைந்தது. எப்படியென்றால், முஸ்லிம்கள் சந்தேகத்திற்குரியவர்கள், அவர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்திருக்கலாம், அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தனர் என்று சந்தேகப்பட்டார்கள். இதைத்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா என்னிடம் நேரடியாகக் கேட்டார்: இன்று முஸ்லிம்களை வெளியேற்றினீர்கள் என்றால் நாளை தலித்துகளையும் வெளியேற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரு சமூகத்திரட்சி உரு வாகி அது உங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமெனக் கண் டால் அந்த ஆபத்து தலித்துகளுக்கும் நடந்திருக்கும். இதற்கு முஸ்லிம் வெளியேற்றம் உதாரணமா அமைந்திருக்கு. அதாவது விளிம்புநிலைப்பட்ட சப்பார்டினேட் என்பதை விட சூப்பராடினேட்டில்- வெள்ளாள மேலாதிக்க அடிப் படையில்தான் அமைஞ்சிருக்கு.
யவனிகா: இடதுசாரிகள் மத்தியிலிருந்த மேல்சாதி மனோபாவம், இன ரீதியான இந்த பிரச்னையை ஒரு வர்க்கப்போராட்டமா கூர்மைப் படுத்தாமல் தேசியத்திற்குள்ளேயே முடக்கிவிட்டதா?
சுசீந்திரன்: நீங்கள் சொல்வதில் ஒருபகுதி உண்மையிருக் கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் நேரடி அடக்கு முறைகளைச் சந்தித்த லத்தீன் அமெரிக்க அல்லது மத்திய அமெரிக்க நாடுகள் போன்ற பெருமளவு தொழில்மயப் பட்டு - சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்ட, அல்லது ஒரு பெரிய நிலவுடமைச் சமூகத்துக்குள் இருந்து கஷ்டப்படு கிற விவசாயிகளைக் கொண்ட நாடல்ல இது. ஆகவே அந்த வகையான சுரண்டல், அடக்குமுறைக்கு எதிரான ஏகாதி பத்திய எதிர்ப்பு அடித்தளத்துடன் எங்களது போராட்டம் தொடங்கவில்லை. எனக்குத் தெரிய, ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்ற கோஷம் தொடக்கத்தில் இருந்தது தமிழர்களிடத்தில். ஆண்ட பரம்பரை என்றால் தமிழ்ப் பரம்பரை. மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பது என்ன குறை? இதுதான் தமிழனின் போராட்டத்தில் மனசாட்சியின் குரலாக ஒலித்தது. இந்த கோஷம் இன்று புலிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிற காசி ஆனந்தனால் முன்வைக்கப்பட்டது.
ஆதவன்: களத்திலிருந்து தப்பியோடிப் போனவர்கள்தான் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள புலிகள்மீது இப்படியான விமர்சனங்களை சொல்கிறவர்களா இருக்காங்கன்னு குற்றம்சாட்டப்படுதே?
சுசீந்திரன்: நீங்கள் எந்த சூழலில் களத்தில் இருக்கலாம்? அடக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும். போராட வெளிக்கிட்ட மாற்றுக் கருத்துள்ள- இன்னும் சொன்னால் இடதுசாரித்தன்மை கொண்ட இயக்கங்கள் யாவும் புலி களால் அழிக்கப்பட்டன. மிதவாதப்போக்குள்ள அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டார்கள். சிறு துரும்பாயினும் அதை அழித்ததுதான் வரலாறு. ஆகவே ஒரு ஜனநாயகப் பண்பில்லாத மாற்றுக்கருத்தை அனுமதிக்காத புலிகளால் துரத்தப்பட்டார்களே தவிர களத்தைவிட்டு ஓடி வந்தவர்கள் என்று யாரைச் சொல்ல முடியும்?
புலிகளின் பேச்சாளர்கள் அல்லது தொடர்பாளர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள் தானே, அவர்கள் ஏதாவது தவறு செய்தால் இலங்கைக்கு திருப்பியழைக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் பெயரை நாம் அறியமாட்டோம். அவங்க எங்கேன்னு தெரியாது. அப்படி திலகருக்கு, யோகிக்கு நடந்ததையெல்லாம் உதாரணமா காட்டலாம். புலிகளோட ராணுவ உத்திகள், துரோகிகளை அழித்தல், சிறுசந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு அழித்து துடைத்தல் என்பவை அரச பயங்கரவாதத்துக்கு இணையானவை.
ஆதவன்: ஆனாலும் பெருந்தொகையான தமிழர்கள் புலிகளுடன் தானே இருக்கிறார்கள்?
சுசீந்திரன்: மூன்றரை லட்சம் தொடக்கம் ஐந்துலட்சம் பேர் அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றி வாழ்ந்து கொண்டி ருக்கும் தமிழர்கள் மீது இலங்கை அரசு குண்டு போட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் புலிகள். வன்னிப் பகுதி யில் இருப்பவர்களைவிட அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்கள்தொகையே அதிகம், ஆகவே அரசைத் தானே அதிக மக்கள் நம்புகிறார்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அழிவு நெருங்க நெருங்க புலிகள் சொன்ன 5 லட்சம் மக்கள் அங்கிருக்கிறார்களா என்ற புள்ளிவிபரமும் உண்மைதானா என்ற சந்தேகம் வருது.
திரிகோணமலை தொடக்கம் அம்பாறை வரைக்குமான கிழக்குப்பகுதிக் கரையோரத்தில்- போருக்குப் பிந்தைய பிரச்சனைகளெல்லாம் அந்த மாகாணத்தில் இருந்தாலும்- தமிழ்மக்கள் போரற்ற சூழலில் வாழ்கிறார்கள். வடக்கில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஆனையிறவு வரையான அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ளும் தமிழர்கள் போர் இல்லாது வாழ்கிறார்கள். இவர்களும் இலங்கையின் வேறு நிலங்களில் வாழ்கின்ற தமிழர்கள்தான். ஆகவே மிகுதியில் ஒரு சிறுபகுதியினர்தான் புலிகளிடம் அடைபட்டிருக்கிறார் கள். இந்த இடங்களில் போராட்டம் மிகப் பிழையாக வழி நடத்தப்பட்டால், சே சொன்ன மாதிரி அடுத்தக்கட்டமாக இந்தப் போராட்டத்தை யாரிடம் எப்படி கையளிப்பது? அதற்கான சூழலை உருவாக்கியிருந்தால் தானே கையளிக்க முடியும்? ஆனால் அந்தச் சூழல் அழிக்கப்பட்ட நிலைதான் இன்று இலங்கையில் இருக்கு.
ஆதவன்: புலிகளுக்கு வரும் பொருளாதார ரீதியான உதவிகள் சர்வதேச அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா ?
சுசீந்திரன்: புலிகள் களத்தில் போராடிக் கொண்டிருந்தார் கள். போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதைவிட சமாதான காலத்தில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தார்கள். ஆட்சி நடத்தி னர் என்றால் இலங்கை அரசின் சகல பணத்திலும் வருவாய் ஈட்டினார்கள். வருவாயை பெற்றுக்கொள்பவர்களாகவும், சேவைகளினால் வழங்கப்படும் பலாபலனை மக்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்கான பொக்கிசமாகத்தான் பயன் படுத்தினார்கள். அடிப்படைத்தேவைக்கும் ஏனைய எல்லா வசதிக்கும் இலங்கை அரசிடம் தங்க வேண்டியிருந்தது, அதிகாரம் செலுத்த மட்டும் புலிகளுக்கு மக்கள் தேவைப் பட்டார்கள். இந்த மூலதனத்தை- வருவாயை ஆயுதம் வாங் கவும் ஆயுதத் தொழிற்சாலை நிறுவவும் மட்டுமே பயன் படுத்தியிருக்காங்க. (கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ஆயுதத் தொழிற்சாலையைத்தான் அதிகமும் நாங்கள் பார்க்கிறோம்.) எங்களுக்கு ஒன்று புலனாகிறது, ஆயுதங் களை மனிதன் சாப்பிட இயலாது என்று. ஒன்றரை லட்சம் மக்களுக்கு உணவில்லை, மருந்தில்லை என்றால் ஏன் நீ வாங்கி வைக்கல? போர் வரும்னு தெரியும்தானே? போர் வந்தால் அழிவு வரும், காயப்படுவாங்க. போராடுவதற்கு ஆயுதம் தேவைப்படும் அதே அளவு மருந்தும் உணவும் தேவைன்னு ஏன் புலிகளுக்குத் தோணல?ஆயுதத் தொழிற் சாலைகளை பெருமளவு ஏற்படுத்தியதற்கு பதிலாக உணவுப்பொருள் பதப்படுத்தும் கிடங்கு அல்லது தொழிற் சாலைகளை ஏற்படுத்தியிருக்கலாமே?
ஆதவன்: இந்த தகவல்கள் எல்லாம் கிடைக்காததால் தான் இங்கு கண்மூடித்தனமான புலி ஆதரவுநிலை உருவாகியிருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா?
சுசீந்திரன்: வேறு காரணங்கள் இருக்கு. எங்களால் முடியாத ஒன்று ஈழத் தமிழர்களால் கொண்டு நடத்தப்படுது என்ற மனநிலை இங்கு இருக்கிறது. மற்றது, அங்கு இருக்கும் மக்களுடைய பாடுகளும் அவலங்களுமல்ல இவர்களின் பிரச்சனை. இவர்கள் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் ரொம்ப முக்கியம் என்ற மனோநிலை யில் இருந்து பார்க்கிறார்கள். போராட்டத்தை நடத்துகிற அமைப்பு தொடர்ந்து இருக்கவேண்டும், எது நடந்தேனும் இந்த அமைப்பை, அமைப்பின் தலைவரை காப்பாத்த னும் என நினைக்கிறார்கள். ஏற்கனவே சொன்னமாதிரி தனி நபர் வழிபாட்டின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் தான் தமிழ்ச் சமூக அரசியல்.
ஆதவன்: வாழ்வா சாவா என்று புலிகள் போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படியான விமர்சனங்களை வைப்பது சரிதானா?
தமிழர்கள் மீதான அடக்குமுறையும் கண்மூடித்தனமான தாக்குதல்களும் அழிப்பும் இலங்கை அரசால் மேற்கொள் ளப்படுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், கட்சிகள் இதற்கு எதிராக செயல்படுகிறார்கள். சிங்கள மனிதாபமானி, சிங்கள உரிமைவாதி, மனித உரிமைக்காக போராடுபவராக இருக்கும் ஒருவர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார் என்றால் அவர் சிங்கள தேசியவாதி யாகவோ ஆதரவாளராகவோ இருப்பார் என்ற சந்தேகம் உருவாகலாம். ஆகவே தன் மீதான நியாயத்தை விளங்கப் படுத்த வேண்டுமென்றால் தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து நியாயப்படுத்தவேண்டிய தேவை அவருக்கிருக் கும். அதனால் அவர் இவ்வாறான நிலைப்பாடு எடுப்பதில் எவ்வித தப்புமில்லை. ஏனெனில் அவர் மிக இலகுவாக சந்தேகிக்கப்படலாம், மிக இலகுவாக இலங்கை அரசால் வாங்கப்படலாம். ஆகவே ஸ்ரீதுங்க ஜெயசூர்யவோ டாக்டர் விக்ரபாகு கருணரத்னாவோ புலி ஆதரவு நிலைப்பாடு எடுப்பதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். அவர் களுக்குத் தெரியும், இலங்கை அரசு என்ன நோக்கத்தை கொண்டிருக்கு, ஏன் இந்த இன அழிப்பை செய்கிறது என்று. ஆனால் தமிழனாக இருக்கிற நான் புலிகள் செய்கிற இந்த விசயத்தை வெளிக்கொணராமல் இருக்க முடியாது.
இப்படி பார்ப்போம். வன்னியில் அடைபட்டிருக்கிற தமிழ் மக்களையும் இப்ப புலிகளால் அணி திரட்டப்பட் டிருக்கிற புலிகளையும் காப்பாற்ற வேண்டுமென்ற அடிப் படையில்தான் எங்களோட சிந்தனை அமையவேண்டு மென்று நான் கருதறேன். அவர்களும் மக்கள்தான். ஆனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இவர்களை பலி கொடுப்பதற்கு புலிகளின் தலைமைப்பீடம் தயாராக இருக்கிறது என்பதுதான். இவர்களை பலி கொடுத்தேனும்- தான் அழிந்து போவோம் என்று தெரிந்தும் -தன் இருப்பை நியாயப்படுத்தவதற்கு தயாராக இருக்கிறது என்பதைதான் பாசிச குணம் என்று சொல்கிறேன்.
ஆதவன்: ஒரு தமிழ் எம்.பி காஞ்சி சங்கரனிடம் இடிக்கப்பட்ட கோயில்களின் பட்டியலைத் தருகிறார். அத்வானியைச் சந்தித்து அவரிடமும் அந்தப் பட்டியலைத் தருகிறார். அங்கிருந்து இங்கே வந்து தமிழ்த்தேசியவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள்கிறாரே?
சுசீந்திரன்: ஆரம்பத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டணி -டிஎன்ஏ எம்பிக்கள் மீது பெரிய அபிமானம் ஏதும் எனக்கு இல்லை. தமிழர்களின் பிரதிநிதியாக அவர்கள் இருந்தாலும் எங்களுக்குத் தெரியும், அவர்கள் புலிகளின் செய்திகளை கொண்டு போகிறவர்களாகதான் ஆக்கப்பட்டனர் என்பது. ஏனென்றால் நடந்த தேர்தலை எவ்வாறு புலிகள் அணுகி னார்கள் என்பது ரத்தமும் சாட்சியமுமாக இருக்கிறது. அதற்குப்பின்னர்தான் இவர்கள் தெரிவு செய்யப்பட்டார் கள். பிறகு, காலத்திற்கு காலம் தமிழ்ச்செல்வனுடைய வழி காட்டலின்பேரில் மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வெளியேயான போராட்டங்களையும் நிராகரித்த புலிகள் பின்னர் கண்டுபிடித்த ஆயுதம்தான் பாராளுமன்றத்துக்குள்ளான போராட்டம். அமிர்தலிங்கம் போன்ற புத்திஜீவிகள் ஆயுதப்போராட்டத்திற்கு வெளியே தமிழரின் உரிமைகளுக்காக போராடக் கூடியவர்களாகத் தான் இருந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் அழித்து அதன் பின்னர்தான் கண்டுபிடிக்கிறார்கள், இந்த பரப்பிலும் போராட வேண்டுமென்று. அந்த கண்டுபிடிப்புக்குப் பின் உருவான இந்த தமிழ் எம்பிக்களிடம் மக்கள்நலனைவிட புலிகளின் நலன்தான் மேலோங்கியிருக்கிறது. எவ்வகை யேனும் போரை நிறுத்தி புலிகளுக்கான அவகாசத்தை கொடுப்பதற்கான முஸ்தீபுகள் இருப்பதைப் பார்க்கலாம். எந்த கொள்கைப்பிடிப்பும் அற்று எந்த கார்டை எந்த இடத் தில் பாவிக்கமுடியுமோ அந்த கார்டை பாவிக்கிறார்கள். இலங்கை அரசையோ இந்திய அரசையோ அல்லது நேபாளில் ஒரு இந்து அரசு அமைந்திருக்குமானால் அவர் கள் நேபாளத்திற்கும் போயிருப்பார்கள். இவர்களின் கூற்று களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் டி.என்.ஏ எம்.பிக்களிடம் ஒருவகை உடைவு நேர்ந்திருக்கிறது எனக் கருதுகிறேன், நேற்று வினோதரலிங்கம் என்ற டிஎன்ஏ எம்பி சொல்லியிருக்கி றார், புலிகளின் பிரதேசங்களில் அடைபட்டுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது, இலங்கை அரசாங்கம் அதை செய்ய வேண்டும், அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நல்லவகையில் பராமரிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசின் கைகளில் இருக்கிறது என்று. புலி களோட அதிகாரப்பூர்வ தொனியிலிருந்து மாறியக் குரலாக அவர் சொல்வதை கேட்கமுடிகிறது. அதை நீங்கள் கவனத் தில் எடுத்தால் இந்த தமிழ் எம்பிக்களுடைய மாற்றம் எப்படி உருவாகப்போகிறது என்று தெரியும்.
ஆதவன்: இலங்கையின் இனப்பிரச்னைக்கு அங்குள்ள அரசியல் சட்டமும் ஒரு காரணமாக இருக்கிறதா?
சுசீந்திரன்: இலங்கை சுதந்திரம் பெற்ற 60 வருசகாலத்தில ஒருமித்த தேசியத்தை - நேஷன் பில்டிங்கை உருவாக்க தவறிட்டம். இலங்கை மக்களும் சரி இலங்கை அரசும் சரி ஒரு தேசியம் என்று ஒன்றுபடயில்ல. நாங்க மூன்று கான்ஸ்டிடியூசன் கண்டிருக்கிறோம் இலங்கையில். 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அடுத்த ஆண்டு சுதந்திர இலங்கையின் யாப்பாக கொள்ளப்பட்டது தொடக்கம், பிறகு 72ம் ஆண்டு குடியரசு யாப்பு என்பது கொண்டுவரப் பட்டு 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மூன்றாவது யாப்பில் இருக்கிறோம் இன்றைக்கு. மதச்சார்பு இனச்சார்பு மொழிச்சார்பு எது வுமற்ற முதல் யாப்பிலிருந்து இன்றைக்கு பௌத்தத்தை யும் சிங்களத்தையும் முன்னிலைப்படுத்துகிற ஒரு சர்வாதி கார யாப்புக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த யாப்பைப் பார்த்தால், சிறுபான்மை இனங்கள் மீதான அடக்குமுறை எப்படியிருந்திருக்கலாம் என்பதை சொல்லி விடலாம். யாப்பே இப்படி இருக்கென்றால், யாப்பை நடைமுறைப்படுத்தாமல் அசமந்தப்போக்கா இருக்கின்ற அரசு எப்படியெல்லாம் அடக்குமுறையை பிரயோகிச்சிருக் கலாம் என்பதையும் சிறுபான்மை மக்களை இரண்டாந் தரமாக நடத்துவதையும் ஓரளவுக்கு யூகிக்கலாம்.
1948ம் வருட போராட்டம் தொடக்கம் இன்றைக்கு புலி களால் கடைசியாக நடத்தப்படும் போராட்டம் வரைக்கும் எல்லாவகைப் போராட்டங்களும் தோல்வியைத் தழுவிய தன்மைதானே இருக்கு. 48தொடக்கம் 56வரைக்கும் பேரம் பேசுவதன்மூலம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று கருதினார்கள். அப்புறம் 56தொடக்கம் 74வரைக்கும் சாத்வீக மான முறையில் அகிம்சைப் போராட்டத்தை நடத்தி உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று கருதினார்கள். அதுவும் தோல்வியைத் தழுவியது. 75தொடக்கம் இன்று வரைக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டம். இன்றைக்கு என்ன நடந்திருக்கென்றால் தோல்விதான் மீண்டும் வந்தி ருக்கு. ஆகவே மிக இறுக்கமாக தன் சகல வளங்களையும் தனது அடக்குமுறைக்குப் பயன்படுத்தக்கூடிய அரசுக்குக் கீழ் வாழவேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு இருக்குது.
ஆதவன்: போர்நிறுத்தத்திற்கு செவிசாய்க்க இலங்கை அரசு மறுத்து விட்ட இன்றைய நிலையில் புலிகளின் அணுகுமுறை அடுத்து எவ்வாறிருக்கும்? வித்தியாசப்பட்ட போர்முறை, உத்தி... இப்படியாக?
திரிகோணமலை தொடக்கம் அம்பாறை வரைக்குமான கிழக்குப்பகுதியில் போருக்குப் பிந்தைய பிரச்சனைகள் அந்த மாகாணத்தில் இருந்தாலும் தமிழ் மக்கள் போரற்ற சூழலில் வாழ்கிறார்கள். வடக்கில் யாழ்ப்பாணம், பருத்தித் துறை, ஆனையிறவு வரைக்கும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கிற தமிழர்களும் போர் இல்லாது வாழ்கிறார்கள். இவர்களும் இலங்கையின் வேறுநிலங் களில் வாழ்கிற தமிழர்கள்தான். ஆகவே மிகுதியில் ஒரு சிறு பகுதியினர் தான் புலிகளிடம் அடைபட்டிருக்கிறார்கள். இந்த இடங்களில் போராட்டம் மிகப்பிழையாக வழி நடத்தப்பட்டால், சே சொன்ன மாதிரி அடுத்தக்கட்டமாக இந்தப் போராட்டத்தை யாரிடம் எப்படி கையளிப்பது? அதற்கான சூழலை உருவாக்கியிருந்தால்தானே கையளிக்க முடியும்? ஆனால் அந்தச் சூழல் அழிக்கப்பட்ட நிலைமை தான் இன்றைக்கு இலங்கையில் இருக்கு.
கொரில்லாப் போரிலிருந்து புலிகளின் பரிணாமம் ஒரு கன்வென்ஷனல் ஆமியாக உற்பத்திச்சது. அதை நாங்கள் கண்கொண்டோம். அடுத்த என்ன இருக்கென்று பார்க்கையில் திரும்பவும் கொரில்லாப் போருக்குத்தான் போக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு புலிகள் வந்திருக்காங்க. மிகக் குறைந்த ராணுவக் கட்டமைப்பையும் மிகப்பெரிய வெற்றியையும் ஈட்டவேண்டிய தேவை இருப்பதால் புலிகள் கொரில்லாப் போர் வடிவத்திற்கு திரும்பவும் போறாங்க. இலங்கை அரசுக்கிருக்கும் அதேயளவு ராணுவ பலம்- பவர் பேலன்ஸ் - பேரம் பேசும் வலு புலிகளுக்கும் முன்பு இருந் தது. இப்ப அது குறுகி திரும்பவும் இவர்கள் கொரில்லா போருக்கு போக வேண்டிய தேவை இருக்கிறது.
கொரில்லா போருக்கு திரும்பப் போகவேண்டிய நெருக்கடி இருக்குமெனக் கொண்டால் இன்றைக்கு செய்ய வேண்டி யது சரணடைதல். தங்களிடம் இருக்கிற கேடர்சையும் மக்களையும் காப்பாத்த வேண்டுமெனச் சொன்னால் ஏதோ ஒருவகையில் சரணடைதலைத் தவிர வேறுவழியில்லை. அல்லாது விசும்புக்கும் வீம்புக்கும் போராடுவது இந்த மக்க ளையும் கேடர்களையும் பலி கொடுப்பதாகவே அமையும்.
ஆதவன்: புலிகள் சரணடையக்கூடியவர்களா?
சுசீந்திரன்: வரலாறு எழுதப்படப்போவது எப்பவும் வெற்றி பெற்றவர்களால்தான். இதுவரை மௌனமாக இருந்து பாடுகளை அனுபவித்த மக்கள், விடுதலை அடையும்போது அவர்கள் சொல்லும் கதைகள் வரலாறாக எழுதப்படப் போகுது. ஆகவே இதுவரை சொல்லப்பட்ட புலிகளின் மாவீரர் வரலாறு அழிந்துபோய் அவர்கள் எவ்வாறு கொடூரமாக நடந்துகொண்டனர் என்ற வரலாறு தான் எழுதப்படப்போகிறது. இதன் காரணமாகவே அவர் கள் தமது இறுதிவரை மரணத்தை தழுவப் பார்ப்பார்களே தவிர சரணடைதல் சாத்தியப்படப் போவதில்லை என்று அவர்களின் மனநிலையிலிருந்து நான் யோசிக்கிறேன்.
V
ஆதவன்: ஈழம் என்ற சொல்லாமல் இலங்கை என்று கூறுகிறவர் இங்கு தமிழ்விரோதி. இதற்கு அப்பால் தனிஈழம் என்பது சாத்தியம் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டிருக்கையில் பிரச்சினைக்குரிய தீர்வாக எது இருக்க முடியும்? இந்த தீர்வுப்பொதியின் உள்ளடக்கம் என்ன?
சுசீந்திரன்: நீண்டகால அரசியல் போராட்டம், அக்கிரமம் அழிவுகளிலிருந்து தனிநாடு தற்சமயம் சாத்தியமில்லை என்பது தெரியவருகிறது. இலங்கையின் தென்பகுதி மக்களது அனுசரணையின்றி ஒரு தீர்வு சாத்தியமில்லை என்பதும் இந்தியா அயல்நாடாக இருக்கும் வரை இலங்கை யில் ஒரு தனிநாடு சாத்தியமில்லை என்பதையும் அரசியல் அவதானிப்புள்ள ஒருவர் கணக்கில் எடுக்கவேணும். இல்லையெனில் எங்களுக்கு மிஞ்சுவது அழிவு.
சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு இலங்கை மக்களை தயார்படுத்த வேண்டியக் கடமை எல்லோர் முன் னாலும் வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாயினும் சரி இலங்கை அரசாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி தமிழ் மக்களாயினும் சரி அந்த கடமை இருக்கிறது. ஆனால் சமஸ்டி என்ற சொல் அச்சம் தரக்கூடிய சொல்லாக சிங்கள மக்கள் மத்தியில் இன்றும் இருக்கிறது. அதற்கான சரித்திரப் பின்னணி இருக்கிறது. அதற்கான நியாயம் இருக்குதோ இல்லையோ சமஸ்டி என்ற சொல்மீது மிகவும் அபத்தமான புரிதலை அரசியல்வாதிகள் தென்பகுதியில் ஏற்படுத்தியி ருக்கிறார்கள். சமஸ்டி - சமன் - தனிநாடு என்ற வாய்ப்பாடு தான் அவர்களின் புரிதலில் இருக்கிறது. சமஸ்டி என்ற சொல்லை பாவிக்காமல் அதிகார பரவலாக்கல் என்றே வார்த்தையை எல்லோரும் பாவிக்கணும். வெற்றிக்களிப் பில் இருக்கிற ஆளும் கட்சியானாலும் சரி, சிங்கள இன வாத கட்சிகளாயினும் சரி, இன்றைய நிலையில் ஒரு அரசியல் தீர்வை முன்னெடுக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஜேவிபியின் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் இந்தப் போராட்டம் ஒரு பயங்கரவாதம், அது ஒழிக்கப்பட வேண்டும். தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கர வாதத்தை ஒழித்தால் தமிழ்மக்கள்-இலங்கை மக்கள் காப்பாற்றப்படுவார்கள், அதுதான் தீர்வு என்கிறது.
ராஜபக்சே இந்தப் போரில் அடைந்துவரும் வெற்றி அடுத்த தேர்தல்களில் ஜெயிப்பதற்கான சூழலை உருவாக்கி யுள்ளது. மகிந்த சிந்தனை என்ற ஒற்றை ஆட்சியின் கீழ் மாவட்ட அளவிலான அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையைத்தான் அரசாங்கம் சொல்லப் போகிறது. எதிர்பார்க்கக்கூடிய சுமூகமான அரசியல் தீர்வு அரசாங்கத் தாலோ அரசியல் கட்சிகளாலோ அல்லது தமிழ்த் தரப் பாலோ வைக்கப்படுமா என்பதும் சந்தேகம். தென்பகுதி யில் இருக்கும் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்னையின் நியாயப்பாடு தெரியப்படுத்தப்பட வேண்டும். மற்றது வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய பூமியாக இருக் கிற அதேவேளையில் வடக்கு கிழக்குக்கான விசேட அதிகா ரங்களை வழங்குவதன் மூலம் - அந்த அதிகாரங்களை எக்காரணங் கொண்டும் துஷ்பிரயோகம் செய்யாதிருக்கும் வகையில் ஒரு யாப்பை உருவாக்குவதன் மூலம் - இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
சமஸ்டி அடிப்படையில் தீர்வு என்பதற்கு பெல்ஜியம், சௌத்கரோல், இந்தியா, கனடா என்று நிறைய உதாரணங் கள் இருக்கு. இந்த அனுபவங்களிலிருந்து எங்களுக்கு உகந்த ஒரு யாப்பை உருவாக்கினால் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். தனிநாட்டு கோரிக்கைக்காக உக்கிரமாகப் போராடி சேதமடைந்து ஊனமுற்றுப்போன ஒரு சமூகத் துக்கு மத்தியில் சிறுபான்மை இனங்களுக்கான உரிமை களை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சாத்தியற்றது என்றில்லை.
ஆதவன்: வகுப்புவாதிகள் சொல்வதுபோல பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மை சமுகம் அண்டிப்பிழைக்கவேண்டும் என்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு நிலைபாட்டை முன்வைக்கிறீர்கள். ஆகவே பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை இனங்களின் நியாயங் களை புரிந்துகொண்டு அதற்காக பணியாற்றும் ஒரு அரசியல் போராட்டத்திற்கு தன்னைத்தானே உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் இந்த வேலையை முன்னெடுக்கப்போவது யார்? அதற்கான திட்டம் என்ன?
சுசீந்திரன்: சிறுபான்மை இனங்களின் நலன் என்ற அடிப் படையில் அரசியல் தீர்வை பார்க்கவேண்டிய கட்டாய மில்லை. அரசியல் தீர்வால் பெரும்பான்மைக்கு ஏற்படக் கூடிய லாபங்கள் என்ன என்ற அடிப்படையில்கூட பார்க் கலாம். வரலாற்றில் தன் பேரை நிலைநிறுத்துவதற்கும், சுபிட்சமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கும் சிறுபான்மை இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தான் சரியான பாதையென பெரும்பான்மை சமூகத்திற்கு உணர்த்தப்படவேண்டும். சமஸ்டி அடிப்படையில் இந்த நாட்டுக்கு ஒரு தீர்வு வருமானால், அந்த தீர்வினால் பெரும் பான்மை சமூகத்துக்கு என்ன நன்மை பயக்கும் என்பதை பெரும்பான்மை சமூகத்தினருக்கு எடுத்துச் செல்லணும்.
தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிற பல்வேறு இடதுசாரிக்குழுக்கள், அமைப்புகள் தென் இலங்கையில் இன்று உருவாகியிருக்கின்றன. இவை வெறுமனே தமக்கு சேவகம் செய்யவேண்டும், தங்களின் சொற்படி ஆடவேண்டும் என்று தமிழர்கள் எதிர் பார்க்கி றார்களே ஒழிய அவர்களது அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலையும் காலத்தையும் தரவில்லை. சிங்களரிடையே இருக்கும் அரசியல்வாதிகள் பலர் தமிழர் களுக்கு ஆதரவான அரசியலை சிங்களர் மத்தியில் கொண்டு செல்ல முடியாதபடி, சிங்கள பொதுமக்களைக் கொன்றும், அழித்தும், தற்கொலைத் தாக்குதல் நடத்தியும், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான முழு நட்டாமுட்டித்தனங் களை புலிகள் செய்திருக்கிறார்கள். இன்றும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள், எல்லோரும் தனிமைப்படுத்தப் பட்டும் கொல்லப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் நாட்டை விட்டு அகலப்பட்டும் இருக்கிறார்கள் என்பதே வரலாறாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்கான உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று பார்த்தால் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழீழ ஆதரவு தரக்கூடிய தமிழ்நாட்டிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி வேதனை தரக் கூடியதாகத்தான் இருக்கிறது.
ஆதவன்- சமஸ்டி என்பதில் தமிழர்களுக்கான விசேட அதிகாரம் என்னென்ன? அந்த அரசியல் தீர்வினால் பெரும்பான்மை சமூகம் அடையக் கூடிய சாதகங்கள் என்னென்ன?
சுசீந்திரன்: மொத்த சமூகமும் போர்ச் சூழலுக்குள் அகப் பட்டுக் கிடக்கிறபோது போர்நிறுத்தம், அரசியல் தீர்வு என்பதே ஒரு பெரிய சலுகை போலதான் தோன்றுகிறது. போர்க்கால மனநிலையில் இருந்து விடுபடுவதே நிம்மதி தரக்கூடியதுதான்.
உலக மக்கள்தொகையில் 40% சமஸ்டி அமைப்பின் கீழ் வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள். மாநிலங்கள் சுயாட்சி பொருந்தியவையாக இருக்கலாம். ஒரு பெரிய நிலப்பரப்பு அல்லது நாடாக இருக்கலாம். தனித்த ஒரு இனம் மட்டும் வாழும் இடமாக இருக்கலாம். பல்வேறு வகையில் இந்த சமஸ்டி அமைப்பு இருக்கிறது. புவியியல் ரீதியாகவோ அல்லது சிக்கல்பிக்கலாக ஏனைய விடயங்களில் பிரிக்க முடியாதபடி ஒரு நாடு இருக்கும் என்றால் அங்கு பொருள் அடிப்படையிலோ இன அடிப்படையிலோ, மொழி அடிப் படையிலோ அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலோ பாகுபாடு இருக்குமானால் அதற்கான தீர்வாக சுயாட்சி முறையை அறிமுகப்படுத்தலாம்.
இலங்கை, கொழும்பை நோக்கி மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது. பின்தங்கிய மாவட்டங்கள் பின் தங்கிய பிரதேசங்கள், அதிகாரத்தையோ வசதிகளையோ அடைய முடியாதபடி அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத படி மையப்படுத்தப்பட்டிருக்கிறது. மையத்தை உடைத்து பல்வேறு மையங்களை உருவாக்குவதற்கும் இந்த சமஸ்டி முறை உதவியளிக்கலாம். இது இன்றைய இலங்கைக்கு தேவையாக இருக்கிறது. ஒற்றையாட்சியின் கீழ் நகர்ப்புறங் கள் நன்மை அடைகிறதே தவிர பின்தங்கிய மாவட்டங்கள் அடையவில்லை. 1971ம் வருடம் ஜேவிபியின் புரட்சி ஏன் ஏற்பட்டது என்றால் கண்டி சிங்களவர்கயோடு ஒப்பிடும் போது கரையோர சிங்களவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதால்தான்.
தமிழர்கள் குறை சொல்லுகின்ற விசயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் ஆட்சிமொழியாக இல்லை, யாப்பு மொழியாக இருந்தாலும் நடைமுறையில் இல்லை. பௌத் தம் இலங்கையின் ஒட்டுமொத்த மதமாக இருக்கிறது. ஆகவே சைவம் புறக்கணிக்கப்படுகிறது. எங்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோகின்றன. கல்வி மறுக்கப் படுகிறது. பொதுச்சேவை மறுக்கப்படுகிறது. ராணுவத் துருப்புகளில் எங்களுக்கு இடமில்லை. தமிழ்மக்களின் இந்த குறைகளை எவ்வாறு போக்கலாம் என்றால், மாநில அரசை உருவாக்குவோம். அதில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும். நீதிமன்றங்கள் தமிழில் இயங்கும். அடிப்படைக்கல்வி தமிழில் பெறமுடியும், அங்கு பல்கலைக்கழகங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்குவோம். அதை நிர்வகிப் பது மாநில அரசின் கையில் இருக்கும். அங்கே போலீஸ், நிர்வாகத்தை உருவாக்கி இவைகளை நடைமுறைப்படுத்து வதாக இருக்கும். ஒரு சமஸ்டி அமைப் பில் மரபுரீதியாகவே நிதியும், ராணுவமும் மத்திய அரசின் கையில் இருக்கும். ஆனால் அதற்கு விசேட ஷரத்துகள் தேவையா என்பதை நிதிவலு, பராமரிப்பு அடிப்படையில் கவனித்துக்கொள்ள லாம். இதன்மூலம் இப்பிரச்சினைகளுக்கும், அடக்கு முறைக்கும் தீர்வை கண்டடையலாம். இதன் பலாபலன்கள் என்ன? அது எவ்வாறு இயங்கலாம்?
இது ஒரு தனிநாட்டுக் கோரிக்கையோ பிரிந்து செல்லும் முறையோ அல்ல, மாறாக வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்வது. உன் அடையாளத்தோடு உன்னுடைய பிரதேசத் தோடு உன் மதத்தோடு நீ இரு, ஆனால் ஒரு நாடு என்கிற அடிப்படையில் ஒன்றுபட்டிருப்போம் என்பதுதான். இது கொஞ்சம் சிக்கல்பிக்கலானதுதான், ஆனால் இதற்கு மிகவும் நியாயமான ஒரு யாப்பு உருவாக்கப்படவேண்டும். மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் அந்த யாப்புக்கு சரி நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்.
ஆதவன்: சமஸ்டியின் கீழ் தமிழர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்கிறபோது- மற்றவர்கள் வெளியேறிவிட்டனர் அல்லது துரத்தி அடிக்கப்பட்டனர், அழித்தொழிக்கப்பட்டனர் என்று எப்படியாக இருந்தாலும்- புலிகள் மட்டும்தானே களத்தில் இருக்கிறார்கள்? ஆகவே அவர்களோடு பேசி அதிகாரத்தை ஒப்படைப்பது அல்லது பகிர்ந்து கொள்வதுதானே சரியாக இருக்கும்?
சுசீந்திரன்: புலிகள் முன்வைக்கும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பது ஆபத்தானது. அது இலங்கை அரசு தீர்வுக்கான நடவடிக்கைகளை பின்தள்ளிப்போடுவதற்கும் வாய்ப் பளிப்பதாக இருக்கும். தமிழ்மக்கள் எல்லோரும் ஏகோபித்த ஒரு கருத்தாக இருக்கிறார்கள் என்ற மாயை உடைக்கப்பட வேண்டும். தீர்வு என்ற அடிப்படை வருமென்று சொன் னால் புலிகள் ஒரு கட்சியாக, ஒரு அமைப்பாக வந்து இந்த தீர்வுகளை முன்வைக்கலாம். பெண்கள் அமைப்பு வரலாம், தலித் அமைப்பு வரலாம், தொழிலாளர் அமைப்பு இருக்க லாம், பிரதேசரீதியாக பின்னடைவுகள் கொண்டிருக்கிற சமூகங்களும் இருக்கலாம். இவர்கள் எல்லோருடைய கருத்துகளையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவருவதைப் போன்ற அநியாயம் ஏதுமில்லை. இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும். எப்படி ஒரு மத்திய அரசிடம் சமஸ்டி அடிப்படையில் ஒரு மாநில அரசைக் கோருகிறோமோ அதேபோல மாநிலங் களுக்குள் அதிகார அலகுகள் உருவாக்கப்படவேண்டும். மாவட்டம், கிராமம், பஞ்சாயத்து போல. அப்பொழுது தான் சம அந்தஸ்தும், உள்ள வளங்களை சமமாக அனுபவிக் கவும் கூடிய சமூகத்தை உருவாக்க முடியும். உதாரணமாக யாழ்ப்பாணத்தையும், பூங்குடியையும் எடுத்துக்கொண் டால் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய வசதி வாய்ப்புகள், தொழில், கல்வி வளங்கள், பூங்குடியில் கிடைப்பதில்லை. ஆகவே யாழ்ப்பாணத்தையும் பூங்குடியையும் ஒரே குடைக் குள் கொண்டுவந்தால் பலன் பெறுபவர் யாழ்ப்பாணத்தவர் தான். பூங்குடியினரும் இதே வளத்தையும், வாய்ப்புகளை யும் அடையவேண்டுமென்றால் பிரத்யேக நடமுறைகளை உருவாக்க வேண்டும்.
ஆதவன்: பிரதேசரீதியாக தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடியவர்க் கான தீர்வை சொல்றீங்க, தென்புறத்தில் அல்லது பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் வாழக்கூடிய மலையகத் தமிழர்கள் அல்லது பூர்வீகத் தமிழர்களுக்கு இந்த சமஸ்டி அமைப்பில் தீர்வு என்ன?
சுசீந்திரன்: எல்லாவற்றிற்கும் முதல், இலங்கையில் உடன டியாக செய்யப்பட வேண்டியது யாப்பு மாற்றம். இந்த யாப்புதான் இவ்வகையான அவலத்துக்கு கொண்டுவந்து விட்டிருக்கு. யாப்பை மாற்றியமைக்கையில் சமூகங்கள் தங்களுடைய அதிகாரங்களையும் சேவைகளையும் பலன் களையும் அனுபவிக்க ஏதுவாக தேர்தல் தொகுதிகளை மாற்றியமைக்கவேண்டும். உதாரணத்துக்கு நுவரேலியா என்ற தொகுதியில் பெரும்தொகை மலையக மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்முடைய அங்கத்தினர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாணசபைக்கோ அனுப்புவதற்கு ஏதுவாக- அவர்களை கூறுபோடாமல், (நுவேரேலியாவை ஐந்தாக கூறுபோட்டால் அங்கிருக்கக்கூடிய ஒரு பெரும் பான்மை சமூகத்தை சிறுபான்மையாக்கிவிட முடியும். இப்படித்தான் இலங்கையின் வரலாறு இருக்கிறது.) ஒரே தொகுதிக்குள் கொண்டுவரவேண்டும். அதாவது முதலில் யாப்பு மாற்றம், அடுத்து தொகுதி நிர்ணயம். பேரினவாத அடிப்படையில் தீர்வை யோசிக்காமல் மக்கள் பிரதிநிதித்து வம் என்ற மனநிலை முதலில் உருவாக வேண்டும். உதாரணத்துக்கு, சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள், தமிழ் மக்கள் இருக்கிறார்கள் கிழக்கு மாகாணத்தில். இவர்களுக் கான அதிகார அலகுகள் நியாயமான அளவில் மாகாண ஆட்சியால் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எப்படி கிழக்கு மாகாணத்தில் இருக்கிற சிங்கள மக்களுடைய பிரதிநிதித் துவத்தை கணக்கில் எடுக்கிறோமோ அந்த மாதிரி கண்டி யில் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். சமஸ்டி அல்லது அதிகார பரவலாக்கம் என்பதில் சிறுபான்மை இனங்களுக்கான அதிகார அலகுகளை உருவாக்குவதும் அவசியம்.
ஆதவன்-: இந்தியாவில் இருக்கும் ரிசர்வேஷன் போலவா?
சுசீந்திரன்:ஆமாம். அந்த மாதிரி இலங்கையில் இப்போது இல்லை. உருவாக்கப்படனும். இது அரசியல் விஞ்ஞானி கள், யாப்பு தயாரிப்பவர்கள் வேலையாக இருந் தாலும்கூட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆதவன்: இந்த அரசியல் தீர்வை முன்வைத்து சிங்களவர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் ஏககாலத்தில் வேலை செய்யக்கூடிய அமைப்பு களும், ஆளுமைகளும் தேவை. அவற்றை எப்படி அடையாளம் காணப்போகிறோம்? அல்லது காணப்பட்டிருக்கிறதா? இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாவிட்டாலும் ரகசியமாகவேனும் செயல்படுகிறதா? போரை நடத்த ஒரு ரகசியக்குழு என்றால் சமாதானத்துக்கும் தீர்வுக்கும் ஒரு ரகசியக் குழு இருப்பதில் தவறில்லைதானே?
சுசீந்திரன்: நான் அங்கம் வகிக்கிற புலம்பெயர்ந்த தமிழர் களுக்கான சர்வதேச வலைப்பின்னல் என்பது, சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு. புகலிடத்தில் இருந்து வேலை செய்கிறது. சமஸ்டி/ மாநில சுயாட்சி அமைப்பு ஆட்சியில் இருக்கிற நாடுகளின் அனுபவங்களை பெற்றிருக்கிறோம். இந்த அனுபவங்களை இலங்கையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற அபிலாசையில் இந்த அமைப்பு உருவாக் கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி பல்வேறு அமைப்புகள் இருக்கு. இவை யாவும் தென்இலங்கை மக்களை ஒரு அரசியல் தீர்வை நோக்கி தயார்படுத்துவது என்ற அடிப் படையில் இயங்குகின்றன. இதற்கு எங்களுக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு, தாராளமாகவே இருக்கிறது. அரச கைக்கூலிகள், அல்லது புலிகளின் கைக்கூலிகள் என்ற அவதூறும் சந்தேகமும் எங்கள் மீது வராமல் இருக்கும்வரை எங்களால் இந்த அரசியல் வேலைப்பாடுகளை கொண்டு போக முடியும். ஆனால் இலங்கை அரசு இவ்வாறான விசயங்களை சகித்துக்கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஆதவன்: இன்று நடைபெறும் எந்த விசயமும் குறிப்பிட்ட ஒரு நாட்டோடு அல்லது பிரதேசத்தோடு முடியக்கூடியதாக இல்லை என்ற நிலையில், பிற உலகநாடுகளின் தலையீடு அல்லது ஈடுபாடு?
சுசீந்திரன்: இலங்கை அரசாங்கம் இந்த முயற்சியை மேற் கொள்ளப் போவதில்லை என்பது அனுபவத்திலிருந்து தெரிகிறது. பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அரசியல் கட்சிகள்கூட மிகவும் தயங்கித் தயங்கித்தான் ஒரு அரசியல் தீர்வை யோசிக்கிறாங்க. இந்த நிலையில் நாங்கள் கோருகின்ற இந்த அரசியல் தீர்வு சாத்தியாமா? சாத்தியமில்லாத ஒன்றைத்தான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறமா? என்றால் இது சாத்தியம். எப்படியென்றால் அரசாங்கம் வெறும் கண்துடைப்புக் காகவே சர்வகட்சி மாநாடு என்று ஒன்றைக் கூட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதையே பரந்த மட்டத்தில் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம். முதலில் முப்பது வருட போரும் அறுபது வருட சுதந்திரமும் எங்கெங்கெல்லாம் நிலுவைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கண்டறிந்து அதை நேர்செய்வதன் மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும். இதற்காக சர்வதேச நிலையை கணக்கிலெடுத்து செயல்படுவதற்கு பல்வேறு புதிய குழுக்களை சர்வதேச மட்டத்தில் உருவாக்க முடியும். சர்வதேச நிபுணர்களின் குழுவைக்கூட அமைக்கலாம். உதாரணத்திற்கு புலிகள் சமாதான ஒப்பந்தக் காலத்தில் ஐ.எஸ்.ஜி.ஏ என்ற வரைவை ஏற்படுத்தினார்கள். அந்த முன்வரைவில், பத்துவருடங்களுக்கு வடகிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தை எங்களிடம் தாருங்கள் என்று கேட்டிருந் தார்கள். அது சர்வதேச நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட வரைவு. அதுபோல சர்வதேச அளவிலான பல்வேறு நியாயங்கள், அனுபவங்களையும் இணைத்து இன்னும் மெருகூட்டி வரைவு ஒன்றை தயாரிக்கலாம். இங்கு எதுவும் பண்ண லாம், எவ்விதமான போராட்டத்தையும் நடத்தலாம் எம்மாதிரியான கருத்தையும் வெளிப்படுத்தலாம், ஆனால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும் ஒருவித இணக்கப்பாட்டிற்குள் வந்தால்தான் இது வெல்லாம் சாத்தியம். தங்களுடைய பிரச்சினை என்ன? தீர்வு என்ன? இத்தீர்வால் எப்படியான நிம்மதியை அடையலாம் என்று இருதரப்பும் உணராதவரை சாத்திய மில்லை. துருவங்களாக இருப்பவர்களின் மனதில், வெற்றிக் களிப் பில் இருக்கும் அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு இன்னமும் எண்ணையை ஊற்றி இன வாதத்தை கக்கினால் தீர்வுக்கான சாத்தியம் தள்ளிப் போகலாம்.
ஆதவன்: தமிழ் ஈழம் கிடைத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு திரும்பிப் போய்விடும் மனநிலையில் இருக்கிறார்களா?
சுசீந்திரன்: இனி திரும்பிவரப் போவதில்லை புலம் பெயர்ந்த தமிழர்கள். அது நாஜிகள் காலத்தில் அர்ஜெண் டினா போன ஜெர்மானியரைப்போல. அர்ஜெண்டினாவில் ஜெர்மன்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்பவும் நாஜி களாகவே இருக்கிறார்கள். ஜெர்மனி நாற்பது வருசத்துக்கு மேலாக ஜனநாயக நாடு அது இது என்று சொல்லி நாஜி இயக்கங்களை தடை பண்ணி நாஜி கட்சிகளையும் தடை செய்திருக்கிறார்கள். அவங்க மொழியும்கூட மாற்றம் அடைந்திருக்கு. ஆனா அர்ஜெண்டினாவில் இருக்கிற ஒரு நாஜி பெண்ணும், ஜெர்மனில் இருக்கிற ஒரு நாஜி ஆணும் கலந்துபேசி காதலாகி ஜெர்மனுக்கு வந்தார்கள். ஜெர்மன் பிடிக்காமல் அவள் கோவித்துக்கொண்டு அர்ஜெண்டினா விற்கு திரும்பி போய்விட்டாள். ஏன்னா அவளுக்கு இங்கி ருக்கிற ஜெர்மானிய அடையாளத்தோட ஸ்டராங் காணாது. இங்க பேசற மொழி சுத்தமான ஜெர்மன் அல்ல. எல்லாமே மாறிப்போச்சு போடன்னு கோவிச்சுக்கிட்டு போயிட்டா. அந்தமாதிரிதான் இலங்கையில் புலிகளைக் காண இயலாது. புகலிடத்தில் புலிகள் இருப்பார்கள். இது மாறிக்கொண்டே இருக்கும்.
புகலிடத்துக்கு போனவன் தன்னோட தமிழீழக் கனவுகளுடனே வாழ பழகிக்கொள்வான். 28ச.கி.மீக்குள் இருக்கிறான். ஒரு ஆயிரத்து ஐநூறு பேரை எப்படிக் காப்பாற்றுவதென தெரியாமல் தவண்டடிக்கிறான். புலம் பெயர்ந்து அங்கிருக்கிறவன் யோசிக்கிறான் முழு இலங்கையும் புடிப்பான்னு. அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் தொழிலாளர் வர்க்கம். அவர்களுக்கு செய்தி பத்திரிகைகள் வாசிக்க நேரம் இருக்காது. அவர்கள் பார்ப்பது வெறும் டெலிவிசன். அங்கு ரெண்டு டெலிவிஷன் இயங்குது. தீபம், மற்றது டிபிஎன் ஐரோப்பியாவில் கிடைக்கக் கூடிய டெலிவிஷன். கனடாவிலும் இருக்கு,. செவிவழிச் செய்திதான் அவனுக்கு கிடைக்கும். இவங்க தங்களோட பிரச்சாரத்தை அந்த மாதிரி செய்த உடனே அந்த ஒருதலைப் பட்சமான செய்தியை மட்டும் கேட்டுத்தான் ஊர்வலம் போனாலும் சரி, அவனுக்கு காசக் கொடுத்தாலும் சரி, இப்ப வும் காசையும் சேர்க்கிறாங்க, ஆகவே நம் சமூகம் சுய மரியாதையை இழந்து, முட்டாள் சமூகமா, வெங்காய சமூகமா இருக்கு. மன்னிக்க வேணும் நம்பிக்கையூட்டும் கருத்து ஒண்ணும் நம்மால சொல்ல முடியல.

0 comments:
கருத்துரையிடுக