“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்” என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில் மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.
1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 27 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 44 இலக்கிய சந்திப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன.
இறுதியாக கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து முடிந்திருக்கிறது. நோர்வேயில் இதுவரை மூன்று தடவைகள் இலக்கிய சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.
புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.
அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.
ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.
ஒஸ்லோ சந்திப்பு
இரு நாட்கள் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பில் பல காத்திரமான தலைப்புகளும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
முதல் நாள் வாசுகி ஜெயபாலனின் கணீரென்ற குரலில் கவிஞர் ஜெயபாலனின் கவிதை பாடி தொடக்கப்பட்டது. அதன் பின்னர் “தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்), சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்), ஆகியோர் உரையாற்றினார்கள் அதனை நெறிப்படுத்திய ராகவன் (இங்கிலாந்து) “லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்கும் வரை அவருக்கு புரட்சி பற்றிய சிந்தனையே உதித்திருக்காது என்றார் அம்பேத்கார்.” என்கிற வாசகத்துடன் தொடக்கவுரை ஆற்றியதுடன் ஏனையோர் தலித் விடுதலை சார்ந்து செயல்படுவதில் எதிர்கொள்ளும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார்கள். இன்று தலித் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை எதிர்ப்பவர்கள் எந்த உள்நோக்கங்களுடன் அதனை மேற்கொள்கிறார்கள் என்பதை விலாவாரியாக பேசப்பட்டது.
உயர்சாதியினர் தமது சாதியை அறிவித்துக்கொண்டு வாதிப் பெருமிதத்துடன் பணிபுரிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தலித்தியம் பேசுவது ஒன்றும் அப்படி ஒன்றும் சொகுசானதல்ல. பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் எதிர்கொண்டபடித்தான் தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார் என்.சரவணன்.
“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ராஜன் செல்லையா (நோர்வே) நோர்வே அரச தொலைக்காட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றி வருபவர். ஐரோப்பா மட்டுமன்றி இலங்கையிலும் ஊடக ஆறாம் பற்றிய வரைவிலக்கணம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்வது குறித்தும் நேர்த்தியான தயாரிப்போடு உரையாற்றினார்.
“நடைப்பயணக் குறிப்புகள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய சஞ்சயன் ஸ்பெயின் நாட்டில் 750 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்ட அனுபவத்தை இலக்கிய தரத்துடன் பகிர்ந்துகொண்டார். இரண்டு வருடங்களாக இந்த பயணத்தை மேற்கொண்டுவரும் அவர் அந்த பயணம் தந்த சுகமான அனுபவம் மட்டுமன்றி அந்த பயணம் இறக்கி வைத்த சுமைகளையும் அற்புதமாக பகிர்ந்துகொண்டார்.
“மைத்திரியோடும் மாகாணசபையோடும் மௌனமாகுமா தமிழர் அரசியல்? என்கிற தலைப்பில் உரையாற்றிய எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) குறிப்பாக வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை நிறைய தகவல்களுடன் விமர்சித்தார். ஸ்டாலின் கிழக்கு மாகாண சபை உருவாக்கிய இன நல்லுறவு பணியகத்தின் பொறுப்பாளராக பிள்ளையான் காலத்தில் இயங்கியவர்.
சுவிசில் தனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விஜயன் ஒரு சிறு அரங்க நிகல்வோன்ரையும் செய்து காட்டினார். அதில் கலந்துனர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்திருந்தது சிறப்பு. விஜயன் 90களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்று அரங்க செயல்பாடுகளின் மூலம் அறியப்பட்டவர்.
இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக “புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்கிற தலைப்பில் ஒஸ்லோவில் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களான மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா ஆகியோர் ஆக்கபூர்வமான உரையாடலை ஆரம்பித்து வைத்தனர். மேலதிக நேரம் நடந்த இந்த நிகழ்வை வாசுகி ஜெயபாலன் நெறிப்படுத்தினார். கலந்துனர்களில் பெரும்பாலானோர் இந்த உரையாடலில் உற்சாகமாக பங்குகொண்டனர். சிறந்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் இந்த நிகழ்வு பலரையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.
1915 முஸ்லிம் - சிங்கள கலவரத்தின் 100 ஆண்டுகள் நினைவு குறித்து உரையாற்றிய ஸஹீர் அந்த கலவரம் குறித்து இன்னுமொரு கோணத்தில் தனது பார்வையை முன்வைத்தார். குறிப்பாக ஆங்கில அரசு சிங்களத் தலைவர்களை மட்டுறுத்துவதற்காக சிங்கள பௌத்தர்களின் மீது பலியை போட்டு முஸ்லிம் சார்பு – சிங்கள எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் கூட சிங்களவர்களே என்றும் தனது கருத்தை முன்வைத்தார். ஒரு வைத்தியராக பணியாற்றும் சஹீர் தனது அரசியல் தேடலினை உறுதியாகவே முன்வைத்தார்.
அன்றைய நாள் “இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய உமா (ஜேர்மன்) நீண்ட காலம் பெண்கள் குறித்த விடயங்களில் எழுதி, பேசி, செயற்பட்டு வருபவர். சர்வதேச பெண்கள் சந்திப்பு நிகழ்வை பல தடவைகள் ஜெர்மனில் பொறுப்பேற்று நடத்தியவர். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த வரலாற்று பூர்வமான தகவல்களை விலாவாரியாக பல செய்திகளின் மூலம் உமா முன்வைத்தார். தற்போதைய ஒதுக்கீடு குறித்த கோரிக்கை எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வை நெறிப்படுத்திய என்.சரவணன் “பெண்களின் அரசியலும், அரசியலில் பெண்களும் என்கிற விரிவான நூலை எழுதியவர்.
கடந்த வருடம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 50 வருட நினைவு குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தனின் உரை அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தது. உணர்ச்சிபூர்வமாக இருந்த அந்த உரை ஒரு கதையாக ஓடிக்கொண்டிருந்தது. தகவல்கள், தரவுகள், ஈவிரக்கமற்ற தலைவர்கள், துரோக ஒப்பந்தம் என்று விரிந்து சென்றது அது. கலந்துனர்களில் பலருக்கு புதிய தகவல்களாக இருந்ததுடன் அதிர்ச்சியைக் கொடுக்கும் தகவல்களாகவும் இருந்தன. அந்த நிகழ்வை அவரின் நண்பர் நடராஜா நெறிப்படுத்தியிருந்தார்.
“உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ஆதவன் (டென்மார்க்) சிறுவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் அரங்காற்றுவது எப்படி, அந்த உளவியலுக்கும் பெரியவர்களின் உளவியலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதற்கான சவால்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மு.நித்தியானந்தனின் “கூலித் தமிழ்” நூல் அறிமுக உரையை சத்தியதாஸ் ஆற்றினார். மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக அந்த நூலின் உள்ளடக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். ஆங்கிலேயர்கள் இந்தியக் கூலிகளை வேலை வாங்குவதற்காக அவர்களின் பேச்சுமொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அதற்காகவே அந்த காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டன என்றும், அதற்கான நூல்கள் கூட வெளியிடப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் சுசீந்திரா எனும் பெண் புகைப்பட கலைஞரின் “இயற்கையோடு பயணித்தல்” என்கிற புகைப்படத் தொகுப்பின் காணொளி காண்பிக்கப்பட்டதுடன் அதனை நெறிப்படுத்தினார் உமா.
அடுத்த இலக்கிய சந்திப்பு இலங்கையில் மட்டகளப்பு நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. அதற்கடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் நடத்தப்படவிருக்கிறது.
ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்
சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும் சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.
மார்ச் 28 ஆம் திகதி “ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்ற பத்திரிகைச் செய்தியின் மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.
ஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.
44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014
இதுவரை நடந்து முடிந்துள்ள இலக்கிய சந்திப்புகள்
1வது 24-09-1988 ஜேர்மன்
2வது 26-11-1988 ஜேர்மன்
3வது 18-03-1989 ஜேர்மன்
4வது 10-06-1989 ஜேர்மன்
5வது 23-09-1989 ஜேர்மன்
6வது 22/23/24.12.1989 ஜேர்மன்
7வது 07-04-1990 ஜேர்மன்
8வது 09-07-1990 ஜேர்மன்
9வது 29/30.09.1990
ஜேர்மன்
10வது 29-12-1990 ஜேர்மன்
11வது 20-04-1991 ஜேர்மன்
12வது 11-04-1992 ஜேர்மன்
13வது 22-08-1992 ஜேர்மன்
14வது 26/27.12.1992 பிரான்ஸ்
15வது 10/11.04.1993 ஜேர்மன்
16வது 07/08.08.1993 நெதர்லாந்து
17வது 30/31.10.1993 ஜேர்மன்
18வது 02/03.04.1994 சுவிட்சர்லாந்து
19வது 24/25.09.1994 பிரித்தானியா
20வது 09/10.09.1995 கனடா
21வது 17/18.05.1996 ஜேர்மன்
22வது 29/30.03.1997 ஜேர்மன்
23வது 13/14.09.1997 பிரான்ஸ்
24வது 30/31.05.1998 ஜேர்மன்
25வது 22/23.05.1999 ஜேர்மன்
26வது 10/11.06.2000 ஜேர்மன்
27வது 23/24.12.2000 பிரான்ஸ்
28வது 14/15.07.2001 நோர்வே
29வது 29/30.11.2002 ஜேர்மன்
30வது 19/20.04.2003 டென்மார்க்
31வது 06/07.11.2004 ஜேர்மன்
32வது 12/13.11.2005 பிரான்ஸ்
33வது 23/24.09.2006 பிரித்தானியா
34வது 09/10.06.2007 ஜேர்மன்
35வது 14/15.06.2008 ஜேர்மன்
36வது 23/25.05.2009 நோர்வே
37வது 10/11.10.2009 ஜேர்மன்
38வது 19/20.02.2011 பிரான்ஸ்
39வது 05/06.05.2012 கனடா
40வது 06/07.04.2013 பிரித்தானியா
41வது 20/21.07.2013 இலங்கை
42வது 17/18.05.2014 ஜேர்மன்
43வது ஒக். 31- நவ. 02 - 2014 சுவிட்சர்லாந்து
44வது 04/05.04.2015 நோர்வே
நன்றி - தினக்குரல்
0 comments:
கருத்துரையிடுக