Play and watch event

36வது இலக்கியச்சந்திப்பு

ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற 36வது இலக்கியச்சந்திப்பு
- றஞ்சி
1988 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட புகலிடப் இலக்கியச்சந்திப்பு தனது 35 வது தொடரை யூன் 14, 15ம் திகதிகளில் ஜேர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகரில் நடத்தியது. இச்சந்திப்புக்கு பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

14.6.2008
இலக்கியச்சந்திப்பின் மறைந்த தோழர் பராவை நினைவு கூர்ந்த பின்னர் சிவராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. மறைந்த தோழர் பரா அவர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் திரையில் ஒளியாகியது. அதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக புலம்பெயர் சஞ்சிகைகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் ஆன உயிர்நிழல், உயிர்மெய், வடு ஆகியவற்றைப் பற்றி அதன் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். உயிர்மெய் பற்றி சரவணன் கருத்துக்களை கூறினார். முடிவில் ஏன் பல சிறுபத்திரிகைகள், சஞ்சிகைள் இடையில் நின்றுவிடுவதற்கான காரணம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது

நிதி, இணையசஞ்சிகைகளின் வருகை மற்றும் பரவலாக்கல், போன்றன காரணமாக இருந்தாலும் கூட அரசியல் காரணங்களும் உள்ளன என்றும் 1985 � 1990 காலப்பகுதிகளில் ஐரோப்பாவில் இருந்தும் கனடாலிருந்தும் பல சிறுபத்திரிகைகள் வெகுஜன, இலக்கிய பத்திரிகைகளாகவும் வெளிவந்தன என்றும் அந்தக் காலகட்டத்தில் வந்த சஞ்சிகைகளில் மிகவும் காத்திரமான அரசியல், இலக்கிய படைப்புக்கள் வெளிவந்ததாகவும் ஆராக்கியமான விவாதங்களை முன்னெடுத்துச்செல்ல வழிவகுத்திருந்தன என்றும் ஆனால் இன்று அந்நிலை மாறி சிறுபத்திரிகைகளின் தளம் வேறு திசைக்கு சென்றுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை பேராசிரியர் அனெற்ற செய்திருந்தார். அவர் அதில் முதன்மையாக patrick suskind ( Das Prfum/Sikeler) என்பவரின் நாவலை முன்வைத்து தனது கருத்துக்களை முன் வைத்தார். இக்கதை மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது. நறுமணமே இல்லாமல் பிறந்த அவர் நறுமணங்களை தேடி அலைந்தார். நறுமணத்தை பெண்கள் இடத்திலேயே கண்டறிந்து நறுமணத்திற்காக 26 பெண்களை கொலைசெய்து விடுகின்றார். இந்நாவலின் உள்ளடக்கத்தை இவ்வாறு அறிமுகப்படுத்தி அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். அவரது கருத்துக்களை சுசீந்திரன் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

முதலாவது நாளின் கடைசி நிகழ்வாக இணையசஞ்சிகைகள் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது.

இணையம் என்பதை அறிமுகப்படுத்திய சரவணன் பொதுவாக எப்படி இணையத்தை தொடங்கலாம் புளொக்ஸ்பொட், இணையம் போன்றவற்றின் நன்மைகள் அதன் பாவனைகள் வளர்ச்சிபோன்றவையும் தொழிநுட்பம் பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ் புளொக்குகளின் திரட்டியாக இருக்கும் தமிழ்மணம் போன்றவற்றை உதாரணமாக எடுத்துக் கூறினார். பின்னர் தமிழ் இணையங்கள் பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டன. புலி இணையத்தளங்கள், புலி எதிர்ப்புத் இணையத்தளங்கள், மாற்று கருத்தாளர்களின் இணையத்தளங்கள் போன்றன இன்று தனிப்பட்டவர்களின் மேல் தாக்குதல்களை தொடுப்பதிலேயே கவனம் கொள்வதாகவும் இதனால் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்தோ ஆரோக்கியமான விவாதங்களை தொடரமுடியாத நிலையே இன்று இந்த இணையங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் உதாரணமாக தேசம், தேனீ ஆகிய இணையத்தளங்களில் வரும் பின்னோட்டங்களில் தனிப்பட்டவர்கள் மேல் தொடுகக்கப்படும் காழ்ப்புணர்வுகள் பற்றியும் கூறப்பட்டது. அத்துடன் இன்றைய வானொலிகள் கூட பெண்களை கொச்சைப்படுத்துவதையே செய்து வருகின்றன என்ற விமர்சனமும் அங்கு முன்வைக்கப்பட்டது.


15.6.2008.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான உறவுகளின் இன்றைய நிலை - என்ற கலந்துரையாடலில் அசுரா, பௌசர், நிர்மலா, ராகவன், கலையரசன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறினர். கலந்துரையாடலில் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். கிழக்கு மகாணத்தின் இன்றையநிலை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனை, தற்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள், மலையகமக்களின் வாழ்வியலும் துயரங்களும், தலித் சமூகத்தின் எதிர்காலமும் இன்றைய நிலையும், நாட்டின் இன்றைய நிலைமை, சிங்கள அரசினால் தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்களின் மேல் இழைக்கப்படும் ஒடுக்குமுறைகள் போன்றவை பற்றி பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் பலரும் பங்கு கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உமா அவர்கள் ஊடறு வெளியீடான மை, இசைபிழியப்பட்ட வீணை ஆகிய கவிதைத்தொகுதிகளை விமர்சித்தார். ஆரம்பத்தில் நாம் சொல்லாத சேதிகள் என்ற கவிதைத்தொகுதியையே பார்த்தோம் அதன் பின் புகலிடப்பெண்கள் கவிதைத்தொகுதியான மறையாத மறுபாதி வெளிவந்தது தற்போது மை வெளிவந்துள்ளது என குறிப்பிட்டார். மையில் வந்த கற்பகம்யசோதரா, தர்மினி, வாசுகி, மதனி மாதுமை, குட்டிரேவதி ஆகியோரின் கவிதைகளை உதாரணமாக எடுத்துக்காட்டினார். அதே போல் சுமதியின் like myth and mother என்ற கவிதைநூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அடுத்தநிகழ்வாக அம்பையின் நிகழ்வு ஆரம்பமாகியது. அம்பையின் கருத்துக்கள் ஒரு சிந்தனை விழிப்பை முன்வைத்தன. சிந்தனை மாற்றத்தின் தெளிவான விடயங்களையும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் இலக்கியத்திலும் நிஜத்திலும் படும் அவஸ்தைகளை மிக அழகாக அம்பை எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து புஸ்பராஜாவின் படைப்புக்கள், தீண்டத்தகாவதன் தலித் சிறுகதைகள் ஆகிய தொகுப்புக்களை மேரி, மங்கை, சுகன், சுசீந்திரன் ஆகியோர் விமர்சனம் செய்தார்கள்.

19 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற இவ் இலக்கியச்சந்திப்பானது புகலிடச்சூழலில் ஓரளவுக்கேனும் ஒரு மாற்றுக்கருத்திற்கான தளமாக உள்ளது. வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை கொண்ட பல ஆர்வலர்கள் இச்சந்திப்பில் பங்கு பற்றியிருந்தார்கள். இறுதியாககிருஸ்ணா அவர்கள் நன்றியுரையாற்றினார். 37ஆவது இலக்கியச் சந்திப்பு நோர்வேயில் நடைபெற உள்ளது.

போட்டோ பிரதிகளை அனுப்பித் தந்த சரவணனுக்கும் நன்றிகள்

June 2008

0 comments:

கருத்துரையிடுக