-பிரகாஸ் -
(திண்ணை)
முப்பத்தியிரண்டாவது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபடி 2005 நவம்பர் 12-13 என இரண்டு நாட்களும், பாரிஸ் மாநகரில் பிரசிடென்ட் வில்ஸன் அவென்யூவில் அமைந்துள்ள ஐரோப்பியக் கட்டிடத் தொகுதி மண்டபங்களொன்றில்; நிகழ்வுற்றது. சனிக்கிழமை முதல் நாள் பகல் 11.00 மணியளவில் 100 பேர்களுடன் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு, இரண்டாம் நாள் இரவு முடிவெய்துகிற வேளையில் 250 பேர்களாக விரிவு பெற்றிருந்தது. அறிவிக்கப்;பட்ட நிகழ்வுகளில் 'அநிச்ச ' சஞ்சிகை அறிமுக நிகழ்வும் முற்றவெளியின் கவிதா நிகழ்வும் மட்டுமே திட்டமிட்டபடியில் நிகழவில்லை. உரை நிகழ்த்தவென அழைக்கப்பட்டிருந் தவர்கள் அனைவரும் முன்னதாகவே பாரிஸை வந்து அடைந்திருந்தனர். எதிர்பார்த்தபடி சஞ்சிகை பாரிஸை வந்து அடையாததால், 'அநிச்ச ' சஞ்சிகை அறிமுகத்திற்கு மாற்றாக தேவதாசன் இன்றைய சூழலில் 'அநிச்ச 'வின்; அவசியத்தை வலியுறுத்தி ஒரு அழுத்தமான உரையை முன்வைத்தார்.
மண்டபத்தின் பக்க மேசையில் விரித்த கறுப்புத் துணியின் பின்னணியில் புகைப்படக் கலைஞரும் கவிஞருமான தமயந்தியின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 'ஆதலினால் காதல் செய்வீர் ' எனும் மகுடத்துடன் அவர் படைத்திருக்கும் இசை - புகைப்படப் பிம்பம் - கவிதைக் கலப்பின் குறுந்தகட்டுக்கான ஆதாரவேர்களான புகைப்படங்களே அங்கு வைக்கபட்டிருந்தன. வரவேற்பு மேசையில் 'சுட்டுவிரல் ' பத்திரிகையின் ஆசிரியை பிரியதர்சினியும் மற்றும் அசோக் பிரகாஸ், கபிலன், தமரா, அருணா ஆகியோரும் பிரதிநிதிகளை இன்முகத்து டனும்;; தோழமையுடனும் வரவேற்றபடியிருந்தனர், புத்தக விற்பனைப் பகுதியில் நாவலாசிரியர் ஷோபாசக்தியும்;, ஊடகவியலாளர் உதயகுமாரும், விமர்சகர் நாதனும் அமர்ந்திருந்தனர்.
மண்டபத்தின் சுவர்களில் ஓவியர் வாசுகனின் 'சுதந்திரத்திற்காகக் காத்திருத்தல் ' எனும் தலைப்பிலான படைப்புகள் வண்ணங்களுடன் வசீகரமானதொரு சூழலை இலக்கியச் சந்திப்பிற்கு வழங்கிக் கொண்டிருந்தது. தமயந்தி, அசோக் யோகன், சுசீந்திரன், லக்ஷ்மி, கிருபன் போன்றவர்கள் இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர்களாக அங்குமிங்கும் நகர்ந்தபடி நிகழ்வுகளை நெறிப்படுத்தியபடியிருந்தனர்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முன்னைநாள் பின்னிரவிலும் அன்றைய தினம் அதிகாலையிலும் பாரிஸை வந்தடைந்தவர்களும், மண்டபத்தை வந்தடைய ஏற்பட்ட காலதாமதத்திற்கு ஒப்ப நிகழ்வுகள் அனைத்தும் 1 மணி நேரம் பின்னால்தான் துவங்கியது. பின்னர் துவங்கிய காரணத்தினால் முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய இயலாத திரையிடலாக ரஜனி திரணகம குறித்த 'No more cry sisters' திரைப்பட நிகழ்வு அமைந்து விட்டமை விழா ஏற்பாட்டாளர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. மற்றபடி அனைத்துப் பேச்சாளர் களும் உரையாற்றிய வகையிலும், பார்வையாளர்களாகப்; பங்கேற்றவர்களின்; கருத்துரைகளுக்கு எல்லையற்ற சுதந்திரம் வழங்கிய வகையிலும் கருத்துச் சுதந்திரத்திற்கானது இலக்கியச் சந்திப்பு எனும் மரபை இந்த இலக்கியச் சந்திப்பு முழுமையாகவே கட்டிக் காத்தது.
சந்திப்பிற்கு வந்திருந்தவர்களின் சுயஅறிமுகத்துடன் துவங்கிய கூட்டத்தின்; முதல் நிகழ்ச்சியாக புத்தக அறிமுகம் நிகழ்ந்தது. மா.கி.கிறிஸ்ரியன் எழுதிய 'புயலுக்குப் பின் ' எனும் நாவல் விமர்சனத்தை அரசியல் விமர்சகரான சி. புஷ்பராஜா நிகழ்த்தினார். மெலி;ஞ்சி முத்தனின் 'முட்களின் இடுக்கில் ' கவிதைத் தொகுப்பு தொடர்பான தனது கருத்துக்களை கவிஞை தர்மினி முன்வைத்தார். அர்விந் அப்பாதுரையின் மூன்று கவிதைத் தொகுப்புகளான 'சலம்பகம் ' எனும் இலக்கிய வடிவம் தொடர்பான தனது கருத்துக்களை திரைப்பட இயக்குநரும் கவிஞருமான அருந்ததி வழங்கினார். 'அநிச்ச ' சஞ்சிகையின் நோக்குகள் குறித்த தனது பார்வையை அதன் ஆசிரியர்களில் ஒருவரான தேவதாசன் பகிர்ந்து கொண்டார். இவ் விமர்சனங்களின்போது நூலாசிரியர்களும் கலந்து கொண்டு விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
புத்தக அறிமுகத்தைத் தொடர்ந்து மதிய உணவின் பின்பாக, மலையக மக்களின் தேசிய உருவாக்கம் குறித்த விரிவான வரலாற்றுத்; தருணங்களை முன்வைத்து இடதுசாரி அரசியலா ளரான பரராஜசிங்கம் உரையாற்றினார். சனிக்கிழமை நிகழ்வுகளின் இறுதியாக 'முஸ்லீம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் ' எனும் பொருளில் முஸ்லீம் மக்களின் அடையாளம் என்பது ஈழச்சூழலில் எவ்வாறாக உருவாகியது என்பது குறித்ததொரு வரலாற்று ரீதியிலான மதிப்பீட்டை அரசியல் விமர்சகர் எஸ்.எம்.எம். பசீர்; முன்வைத்தார். முதல் நாள் உரை விவாத நிகழ்வுகள் முடிவுக்கு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை அண்மித்திருந்தது. முதல் நாள் நடைபெற்ற நூலறிமுகம் நிகழ்வுக்கு கவிஞை ஜெயா பத்மநாதனும், மலையக மக்கள் தொடர்பான நிகழ்வுக்கு இலக்கியச்சந்திப்பின் தொடர்பங்களிப்பாளரான சிவராஜனும், முஸ்லீம் மக்கள் தொடர்பான நிகழ்வுக்கு அரசியல் விமர்சகர் யோகரட்ணமும் தலைமையேற்று முகவுரையாற்றிதோடு மிகச் சிறப்பாக விவாதங்களையும் நெறிப்படுத்தினர்.
முதல்நாள் ஒரு மணிநேரம் நிகழ்ச்சிகள் தாமதாகத் துவங்கியதால், முதல் நாள் இடம்பெறவிருந்த 'பெண்மொழி ' நிகழ்வு இரண்டாம் நாளுக்கு நகர்ந்திருந்தது. இலக்கிய விவாதங்களில் இன்று அதிகமும் பேசப்படும் 'பெண்மொழி ' குறித்த தனது படைப்புலக அனுபவங்களைத் தமிழகத்திலிருந்து வந்திருந்த கவிஞை திலகபாமா பகிர்ந்து கொண்டார். 'பெண்மொழி ' நிகழ்வுக்கு புகலிடப் பெண்கள் சந்திப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் இலக்கியச் சந்திப்பின் தொடர்ந்த பங்கேற்பாளருமாகிய இன்பா தலைமையேற்று நடத்தினார். திலகபாமாவின் உரைக்கு முன்பாக விமர்சகரும் கட்டுரையாளரும் மொழிபெயர்ப்பாளருமான யமுனா ராஜேந்திரன் 'குறுந்திரைப்படங்களின் வரலாறு, அழகியல் மற்றும் அதனது அரசியல் ' குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஐரோப்பிய சினிமாவின் மேதைகளான நான்கு இயக்குனர்களின் குறும்படங்களைத் திரையிட்டு, குறும்படத்திற்கென உள்ள அழகியல் குறித்து அவர் விளக்கினார். இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து நெறிப்படுத்திய ஓவியையும் கவிஞையுமான ரஞ்சினி (பிராங்போட்), பெண்ணியப் படைப்பாளி என்பதுடன் புகலிடப் பெண்கள் சந்திப்பின் தீவிர பங்காளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளை அடுத்து நடைபெற்ற மதிய உணவின் பின், இன்றைய அரசியலின் மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகள் குறித்த உரைகள் இடம் பெற்றன. அப்பிரச்சினைகள் தலித் பிரச்சினை மற்றும் தேசிய இனப்பிரச்சினை என்பனவாகும். தலித்; பிரச்சினை குறித்ததாக 'எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம்; ' எனும் பொருளில் தமிழகத்திலிருந்து வந்திருந்த வழக்கறிஞரும் மனித உரிமையாளருமான ரஜனி உரையாற்றினார்;. இரண்டாம் நாள் இறுதி உரையாக 'இலங்கைச் சமூக முரண்பாட்டின் இன்றைய அரசியல் ' குறித்து அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் உரையாற்றினார். உரையினை அடுத்து விழாவின் இறுதி நிகழ்வாக தமயந்தியின் 'ஆதலினால் காதல் செய்வீர் ' இசை புகைப்படத் தகடு திரையிடப்பட்டு, அதன் மீதான விமர்சன உரையாடலை ஓவியர் கிருஷ்ணராஜாவும் யமுனா ராஜேந்திரனும் மேற்கொண்டனர். புகைப்படக்கலை தொடர்பான தனது படைப்பு வேதனைகளையும் உவகைகளையும் கலைஞர் தமயந்தி பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வுகளில் தலித்தியம் பற்றிய உரைக்கு அருந்ததியும் இலங்கை சமூக முரண்பாடுகள் குறித்த அமர்வுக்கு உதயகுமாரும் தலைமையேற்று முன்னுரைகள் வழங்கியதோடு ஆழ்ந்த அக்கறையுடன் அமர்வுகளை நெறிப்படுத்தவும் செய்தனர். உரைகளினதும் மதிய உணவினதும் நேரங்களில் கிடைத்த நிமிடங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி சாம்சனும் திலகபாமாவும் தாளலயத்துடன் ஆடியமை இன்னும் நினைவில் நிழலாடுகிறது.
ஓவியம், புகைப்படம் என நவீன கலைகளின் மீதான பிரக்ஞையை, பரவலாகிவரும் குறும் படங்கள் தொடர்பான அழகியல் பிரக்ஞையை, ஊட்டியதாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.
விளிம்புநிலை மக்களான மலையக மக்கள், முஸ்லீம் மக்கள், தலித் மக்கள் போன்றவர்கள் தேசியப் போராட்டத்தின் நிகழ்முறையினால்; மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது குறித்த அறவுணர்வை இந்த இலக்கியச் சநதிப்பு விவாதித்திருக்கிறது.
தங்குதடையைற்ற கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டிற்கான வெளியாக இந்த இலக்கியச் சந்திப்பு அமைந்திருந்தது. நிகழ்;வுகளின் தொடக்கத்தின் போதும் நிகழ்ச்சி முடிந்த பின்னாலும், இந்தச் சந்திப்பைத் தொடங்கி நடத்தி, தம்மிடையே இன்று இல்லாது போன தமது நண்பர்களான 'உயிர்நிழல் ' கலைச்செல்வன் மற்றும் சபாலிங்கம்;, உமாகாந்தன் போன்றவர்களை சந்திப்பின் நண்பர்களும் தோழர்களும்; நினைவு கூர்ந்தனர்.
அரசியல் சமூகப் பிரக்ஞையுடன் கலை இலக்கிய உணர்வையும் இணைத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்த மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து அகன்ற நண்பரகள் அன்றிரவே ரயில்களையும் விமானங்களையும் பிடிக்க வேண்டுமென அவசரப்பட்டபடி, கட்டித்தழுவி முத்தமிட்டு விடைபெற்றனர். இன்முகத்துடனும் கலகலப்புடனும் தோழமையுடனும் இறுக்கமின்றியும் நடைபெற்ற முப்பத்தியிரண்டாவது இலக்கியச் சந்திப்பு ஐரோப்பிய வாழ்வின் நெருக்கடியினுள் மூச்சுமுட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மிக ஆழ்ந்ததொரு நிம்மதியையும் மனஅமைதியையும் வழங்கியிருக்கிறது என்பதுவே இந்த இலக்கியச் சந்திப்பின் வெற்றிக்குச் சாட்சியமாக அமைகிறது. முப்பத்து மூன்றாவது இலக்கியச் சந்திப்பு 2006ம் ஆண்டு முற்பகுதியில் இலண்டன் மாநகரத்தில் நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். கோடை காலத்தில் இலண்டனில் சந்திக்கவென நண்பர்களும் தோழர்களும் மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து விலகியபடியிருந்தனர்.
இந்த 32வது இலக்கியச் சந்திப்பில் (13.11.2005) ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ழு அறமிழந்த கொடிய கொலைக் கலாச்சாரச் சூழலிலும் பண்பாட்டு பாஸிசத்துக்கும் நடுவில் என்றும் இல்லாதவாறு நமது தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் சிக்கியுள்ளன. கொலையாளிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் பின்னால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் அமைப்புகளும் இயக்கங்களும் நின்று கொண்டிருக்கின்றன. அனைத்துக் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசு அல்லது புலிகள் அல்லது வேறு எவராவது வழங்கும் கொலைத்தண்டனைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
ழு யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து 'பாலியல் தொழிலாளி ' என்ற குற்றச்சாட்டின் பேரால் கொல்லப்பட்ட சகோதரி சாந்தினியின் கொலைக்கு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.
ழு யோகேஸ்வரி என்னும் சிறுமியின்மீது பாலியல்வதை புரிந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கணேசலிங்கத்தையும் மற்றும் இது போன்று பெண்கள்மீது பாலியல் வதை புரிவோரையும் நாம் கடுமையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
ழு இலங்கையின் தங்களது தாயக பூமியான வடக்கிலிருந்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுமாறு வேண்டுகிறோம். அவர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு அனைத்து ஜனநாயக, மனித உரிமைச் சக்திகளையும் கேட்டுக் கொள்வதோடு, இக் கொடிய நிகழ்வுக்காக நாம் மீண்டும் வெட்கித் தலை குனிவதோடு மன்னிப்பும் கோருகின்றோம்.
ழு தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத்தியும் குஷ்புமீது பலவழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
0 comments:
கருத்துரையிடுக