Play and watch event

பின்புகலிட இலக்கிய போக்கு! - என்.சரவணன்

பின்நவீனத்துவத்துவத்தின் செல்வாக்கின் பின்னான
பின்புகலிட இலக்கிய, அரசியல் போக்கு!
(நன்றி - உயிர்நிழல் - 2000ஆம் ஆண்டு)

புகலிடச் சூழலில் இலக்கியச் சந்திப்பானது கடந்த 12 வருடங்களாகவே தமிழ்சூழலில் ஆற்றிவரும் முக்கியத்துவம் தமிழ்சூழல் அறியும்.

நடந்துமுடிந்த 26வது அமர்வில் முதற்தடவையாக பங்குபற்றியபோது கிடைத்த அனுபவங்கள் மற்றும் வரை அறியப்பட்டவை என்பன பல கேள்விகளை எம்முன் நிறுத்துகிறது.

புகலிடச் சூழலில் இன்றைய இலக்கிய ஆர்வலர்களாக படைப்பாளிகளாக ஆகியிருப்போரின், அல்லது ஆக்கப்பட்டோரின், பின்னணியியை எடுத்துக்கொண்டால் ஒன்றில் கந்த காலங்களில் ஈழத்தில் ஏதோ ஒரு அரசியல் சித்தாந்தத்தையோ அல்லது அரசியல் குழுவையோ பின்னணியாக கொண்டிருப்பவர்கள் பலர், ஏலவே இலக்கிய துறையில் பணியாற்றியவர்கள், மற்றும் இங்கு வந்து தான் இலக்கிய மற்றும் அரசியல் துறைகளோடு தங்களை இணைத்துக்கொண்டோர் என்கிற போக்கை கொண்டிருப்பதைக் காணலாம். இதில் அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவர்கள் அல்லது கொண்டிருப்பவர்கள் தங்களது ஏக்கத்தின் அல்லது தங்களது தாகத்தி
ன் வெளிப்பாடாக "எதையாவது செய்யவேண்டும்" என்கிற போக்கின் விளைவாகவும் அவர்களின் இலக்கிய கால்பதிப்பை நிகத்தியதாகக் கொள்ளலாம். இது அரசியலாகவும் வெளிப்பட்டிருக்கும். இவர்களின் தாகத்தின் நீட்சியாகவே இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளையும் தமக்கான வடிகாலாகப் பயன்படுத்த விளைந்தனர் எனலாம். அவர்களின் அரசியல் கருத்துக்களை, தமது நினைவுகளை, தமது துயரங்களை, எதிர்காலம் பற்றிய தேடல்களை வெளிப்படுத்தும் களமாக அவர்கள் இலக்கியச் சஞ்சிகைகள் தொடங்கி அரசியல் குழுக்களாக, இலக்கியச் சந்திப்புகளாக, பெண்கள் சந்திப்புகளாக அரசியல் கூட்டங்களாக, கலைஇலக்கிய நிகழ்வுகளுக்கூடாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

இந்த "எதையாவது செய்வது" என்பது தன்னியல்பாக (அல்லது குறிப்பிட்ட இலட்சிய இலக்கின்றி) கணிசமானவை தொடர்ந்த போதும் கூட அதன் விளைபொருள் தமிழ் சமூகத்திற்கு கனதியாகவே கிடைத்திருக்கிறது. இன்று புகலிட இலக்கியத்தின் வீச்சும், கனதியும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும் அக்கறை கொள்ளும் ஒரு விடயமாக வந்துவிட்டது. இதன் அரசியல் பணியானது அதன் படைப்பாளிகளே அறியாத வண்ணம் விளைவுகளை உண்டாக்கியும் விட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை எனலாம்.

இத்தகைய போக்கின் வழிநின்று பார்த்தால் இலக்கியச் சந்திப்பின் பாத்திரம் எத்தகையது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

பெரும்பாலும் இலக்கியச் சந்திப்பானது பலவிதமான கருத்துக்களையும், பலவிதமான அரசியலையும் கொண்ட பலரையும் அவர்களின் வெளிப்பாடுகளையும் மையப்படுத்திய ஒரு இடமாக இருந்திருக்கிறது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அமைப்பாகியும், அமைப்பாகாமலும் இருந்துவந்த ஒரு செயல்பாடாக இலக்கியச் சந்திப்பு இருந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் விடுதலைப்புலிகளுக்கு சார்பல்லாத பலரை ஒன்று குவித்த இடமாகவும் இருந்தது. இது தமிழ்த்தேச அரசியலின் பிற்போக்குத்தன்மையை கண்டிப்பதாக, விமர்சிப்பதாக, அதன்மறுசீரமைப்பு தொடர்பான வாதங்களை எழுப்புவதாகவும், ஏன் தேடல்களை நோக்கியதாகவும் கூட அமைந்தன.
அதுவும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டர்கள் என்பது வரலாறு. "எதையாவது செய்ய வேண்டும்" என்கிற மன நிலை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். எனவே சமூக அக்கறையுள்ள திட்டவட்டமான ஒரு இலக்கு இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்ய வேண்டும். புகழிடச் சூழலில் சுய அடையாளத்திற்கான அல்லது சுயவிளம்பரத்திற்கான போராட்டமும் கூடவே இருப்பதுவும் ஒரு காரணம். இந்த நிலைமைகள் தான் இப்படியான இலக்கியச் சந்திப்புகளை பிறப்பித்துள்ளன. நிச்சயமாக இவை நின்று போகாது. இந்த இலக்கியச் சந்திப்பு இல்லையென்றால் இன்னொன்று அல்லது இன்னொன்று தோன்றிக்கொண்டேயிருக்கும். அதன் வடிவத்திலும் வீச்சிலும் வௌ;வேறான மாற்றங்களைக்கொண்டிருப்பதே முன்னையதுக்கும், பின்னையதுக்கும் இடையிலான வித்தியாசங்களாக இருக்கும்.

அது தான் இயங்கியல். ஆனால் போராட்ட அவலங்களையும், தொடர்ச்சியான போராட்டத்தையும் எதிர்கொண்டிருக்கும் குறிப்பான தமிழ்ச் சூழலில் இந்த வகையான அரசியல் இலக்கிய சூழலை பலப்படுத்தியிருக்கிறது. முன்னால் அரசியல் செயற்பாட்டாளர்களை சும்மாயிருக்காமலிருக்கப் பண்ணியிருக்கிறது.

ஆனால் சமீப காலங்களில் புகலிடத்தில் தோன்றியிருக்கிற பிளவுகள், அரசியல் இலக்கிய வரட்சி இந்த இருப்பதும் இழக்கப்படுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்ச ஜனநாயக செயல்பாடுகளுக்காகக் கூட ஐக்கியப்பட்டு பணிபுரிவதை காண்பது அரிதாகி ஆகிவிட்டிருக்கிறது.

இன்னுமொருவகையில் இலக்கியச் சந்திப்பானது இலங்கையில் சொந்த மக்களின் விடுதலைக்காக் முன்னின்றவர்கள் பலரும் ஏனைய அல்லது சக இயக்கங்களால் பலம்கொண்ட அராஜக நசுக்குதலின் காரணமாக ஒருபுறம் சிங்கள அரசு மறுபுறம் சகதேசத்தில் இருந்த அராஜக அரசுகள் என்பனவற்றின் பிடியிலிருந்து தப்பி வேறுவழியின்றி நாட்டைவிட்டு வெளியேறி வந்தவர்கள் பலரையும் வெளித்தெரியாதவண்ணம் (virtually organize) ஒன்றுபடவைத்திருந்தது. இவர்களை சொந்த மக்களுக்காக சொந்த நாட்டில் இயங்கமுடியாமையை புகலிடச் சூழலில் ஓரளவு பாதுகாப்பாக இயங்கலாம் என்கிற ஒருவித நம்பிக்கையின் பேரில் அரசியலையோ அல்லது இலக்கியம் சார்ந்த அரசியலையோ முன்னெடுத்தார்கள். ஆனால் புகலிடச் சூழலிலும் தொடர்ந்த அராஜக நடவடிக்கைகளின் காரணமாக சிலரை இழந்தும் ,சிலரை இயக்கவிடாமல் பண்ணியுமாக ஆன சூழலில் காரணமாக பலரை ஏதோ ஒரு வகையில் மாற்று சக்திகளாக அணிதிரள வைத்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ இலக்கியச் சந்திப்பு போன்றன இதற்கு ஒரு உருத்தெரியா நிறுவனவடிவத்தைக் கொடுத்தது என்றே நம்புகிறேன். அது சில வேளை இங்கு குறிப்படும் அளவுக்கு பெரிய வடிவத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்று குறைந்தபட்சமேனும் இருந்தமையானது பலருக்கும் தைரியமளித்திருந்தமையை அறிந்திருக்கிறோம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பலரிடம் காணப்படும் விரக்தி சோர்வு, செயலின்மை, சொந்த வாழ்க்கையோடு தம்மைக் குறுக்கிக்கொள்ளும் நிலைமை (அல்லது சிலர் புலிகளோடு தங்களை மெதுமெதுவாக இணைத்துக் கொள்வதையும்) ஒரு போக்காக ஆகிக்கொண்டிருப்பதை எம்மில் பலரும் ஒப்புக்கொள்வோம். இதற்குரிய காரணம் என்ன என்பதை கண்டறிவது இன்றைய நிலையில் முக்கியமானது. தேசத்தின் மீதான அடக்குமுறைகள் வலுக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தேசப்போராட்டத்தை ஒடுக்க எதிரியுடன் கைகோர்க்கின்றன. இன்று அரைகுறை சோசலிச நாடுகளாக ஆகியிருக்கும் முன்னால் சோசலிச நாடுகளும் இதில் விதிவிலக்கில்லை. நாட்டில் பாசிசத்தின் கையோங்குகின்றன. முன்னரைவிட புகலிடத்திலுள்ள சக்திகளுக்கான பொறுப்புகள், கடமைகள் அதிகரித்திருக்கின்ற நிலையில் துரதிருஸ்டவசமாக எதிர்மாறான வரட்சிநிலையொன்று உருவாகி, ஊடுறுவி, பரந்து, விரிந்து கைப்பற்றி நிலைப்பை உறுதிசெய்து கொண்டிருக்கின்றன. இது ஆபத்தானது.

இவ்வாறான நிலைமைகளின் விளைவாகத் தோன்றுகின்ற இடைவெளியை ஆதிக்க சக்திகள் கைப்பற்றிக்கொள்கின்றன. அவை மெதுமெதுவாக தலைதூக்கி நிறுவனமாகி கோலோச்சுகின்ற போது நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். ஐரோப்பாவில் கடந்தகாலங்களில் பாசிசம் வென்ற வரலாறு பற்றி நாம் அறிவோம். இடதுசாரிகளை எவ்வாறு அது படிப்படியாக களையெடுத்தது என்பது பற்றி இன்று மீண்டும் மறுவாசிப்புதான் செய்யவேண்டுமா என்ன? அரசியலில் இலக்கியத்தின் பணியும், இலக்கியத்தில், அரசியலின் பணியும் அனைத்துப் போராட்டங்களிலும் காத்திரமான பங்காற்றியிருக்கின்றன.

ஒரு புறம் எதிரிகள் மற்றும் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் நிறுவனமாகி, தெளிவாகத் திட்டமிட்டு இயங்கி வருகின்ற போது, மறுபுறம் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பலம் குன்றி, "கட்டுடைக்கப்பட்டு" துண்டாடப்பட்டு சிதறிடிக்கப்பட்டு வருகிறது. வேடிக்கை பார்ப்பதோடு எம்மில் பலர் மட்டுப்படுத்திக்கொள்கிறோம்.

சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவச் சிந்தனைமுறையின் செல்வாக்கின் பங்களிப்பும் கணிசமானது. அமைப்பியல்வாதம் வழிவந்த சிந்தனைககளில் சில பகுதிகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு உருவாகிவிட்டிருக்கிற கருத்துக்களான அமைப்பாகக்கூடாது, மையப்படக்கூடாது, அதிகாரத்துவம் வந்துவிடும் என்கிற பார்வையும் ஜனநாயக சக்திகளின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழான ஒன்றிணைவை கூட மறுக்கின்ற போக்கு உருவாகி விட்டிருக்கிறது. அமைப்பாதலில் உள்ள பலத்தை, அவ்வாறு அமைப்பாதலின் பொறிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைக் கொண்டு மறுதலிக்கின்ற போக்கு ஆபத்தானது. இன்றைய முதலாளித்துவ சக்திகள் புரட்சிகர சக்திகளின் ஒன்றிணைவை இவ்வகையான புதிய சிந்தனைகளின் பகுதிகளைப் பரப்பித் தான் ஒன்றிணைய விடாமல் சதிசெய்கின்றன.

பின்நவீனத்துவ சிந்தனைகளின் பெறுமதிமிக்க விமர்சன முறையியலை ஒட்டுமொத்த அடக்கப்படும் மக்களின் போராட்டத்தையும் நசுக்க பயன்பட துணைபோவதை எந்த சமூக பிரக்ஞை உள்ள ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள். அடக்குமுறையாளர்கள் ஒரு புறம் பலமான அணியை ஏற்படுத்திக்கொண்டு மறுபுறம் அடக்கப்படுவோர் அணிதிரளவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளுக்கு இத்தகைய விமர்சன முறையியலை மிகக் கவனமாக கையாண்டுவருகிறது.

இதன் விளைவுகளையும் தாக்கங்கங்களையும் சமீப காலமாக இலங்கையில் இடதுசாரி இளைஞர்கள் மத்தியிலும் தோன்றி வருவதையும் கண்டுவருகிறோம். குறிப்பாக "மாதொட்ட" எனும் சஞ்சிகையை நடாத்தி வரும் "X Group" அணியைக் குறிப்பிடலாம். பெருமளவு முன்னைநாள் ஜே.வி.பி.யை சேர்ந்த சிங்கள இளைஞர்களாக இருக்கும் இவ்வணியினரின் பின்நவீனத்துவ வகுப்புகளுக்கு நானும் வார நாட்களில் சென்று வந்திருக்கிறேன். வார நாட்களில் மூன்று அணிகளாக வகுப்புகளை நடத்துமளவுக்கு இளைஞர்களிடம் இதன் மீதான தாகம் இருந்தது. எந்த அதிகாரத்துவத்தை எதிர்த்து இடதுசாரிகட்சிகளில் இருந்து விலகினோமா அதே (எதிரிகளின்) அதிகாரத்துவத்தின் அணிதிரட்சிக்கு மாற்றாக அது இருக்காததும், மாறாக அணிதிரட்சியை மறுதலிக்கும் போக்கை எதிர்த்துமாக மீண்டும் அதிலிருந்து சிலர் மீண்டும் வெளியேற வேண்டிவந்தது.

இடதுசாரி சிந்தனையையுடைய சிங்கள இளைஞர்கள் மத்தியில் இதன் பாதிப்பு வேமாகிவருவதை நாம் காண்கிறோம். இது இலங்கையில் பலமாகி வரும் ஜே.வி.பி.க்கு கூட பெரும் தலையிடியாக வந்தது. கடந்த இரு வருடங்களாக ஜே.வி.பி.க்குள் நடக்கின்ற அரசியல் வகுப்புகளில் பின்நவீனத்துவம் பற்றிய தெளிவுபடுத்தலுக்கான வகுப்பை நடத்துமளவுக்கு இந்தபோக்கு நிர்ப்பந்தித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜே.பி.வி.க்குள் இளைஞாகள் பலர் எழுப்பிய கேள்விகளானது, ஜே.வி.பி.க்குள் இது ஒரு புரட்சிகர குணாம்சங்களை மழுங்கடிக்கின்ற, அல்லது போர்க்குணாம்சங்களை இழக்கச்செய்கின்ற போக்கொன்று வந்துவிடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியதே அரசியல் வகுப்பில் இப்படியான தலைப்புகளையும் புகுத்தியதற்கான காரணமெனலாம்.

இவ்வாறாக திறனாய்வுத்துறையில் பின்நவீனத்துவ முறையியலை கைகொள்வதென்பது அவசியமானது என்கிற போக்கு குன்றி, அடக்கப்படுபவர்களின் எழுச்சிக்கு வடிவம்கொடுப்பதற்கு எதிராக பின்நவீனத்துவ முறையியல் புகலிடத்திலும் பயன்படுத்தப்பட்டுவருவதை ஆங்காங்கு காணமுடிகிறது. தனிநபர் மீதான வசைபாடல்களை தமிழ்நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, புகலிடத்திலும் சரி இந்த பின்நவீனத்துவத்தின் பேரால் நடாத்தப்படும் போக்கைக்கண்டு பின்வாங்குவதும் இவ்வாறான போக்குகள் மேலோங்கக் காரணமாவதை காண முடிகிறது. இன்று தமிழ்ச்சூழலில் எழுத்து என்பது ஒருவகை வன்முறை வடிவத்தைப் பெற்றுவருவதையும் பின் நவீனத்துவத்தின் பாதிப்பு அதில் அடங்கியுள்ளதையும் பலர் ஒப்புக்கொள்வதை அவதானித்திருக்கிறேன். எந்த ஜனநாயகவிரோதங்களுக்கு எதிராக பேனை தூக்கப்பட்டதோ அதே பேனை இன்னொரு வன்முறை ஆயுதமாக ஆக்கப்படுவதும், கருத்துக்களின் மீதான விமர்சனங்கள் என்பது போய் நபர்களின் மீதான எழுத்து வன்முறை என்கிற வடிவத்தை அடைந்திருப்பது துரதிருஸ்டமானது.

இன்று பின்நவீனத்துவம் பற்றிய சொல்லாடல்கள் ஒருவகை மோஸ்தராக ((Fasion)ஆகிவிட்டிருக்கிறது. அது பற்றி தெரியாமல் இருப்பது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆக்கிவிட்டிருக்கிறது. இலக்கிய, அரசியல் சக்திகளோ எப்பாடுபட்டாவது இது என்னவென்று அறியத்தான் வேண்டும் இல்லாவிட்டால் இதனை எதிர்கொள்ள முடியாமல் போய் விடும், தனித்துவிடுவோம் என்கிற பயத்தில் தேடித்தான் பார்க்கிறார்கள். பலருக்கும் களைப்பு மட்டும் தான் மிஞ்சுகிறது என்பதை ஒப்புக்கொண்டோர் பலர். ஒப்புக்கொள்ளாமல் தெரிந்ததை வைத்துக்கொண்டு பின்நவீனத்துவ பூசாரிகளானோர் சிலர். இந்த சிலரால், பலர் தாக்குப்பிடிக்க இயலாமல் போனதற்கு இலக்கிய உலகை கட்டுப்படுத்தும் எழுத்து வலிமையை "சிலர்" கொண்டிருந்ததும் ஒரு காரணம்.

இவ்வாறு இலக்கிய உலகில் "பெரும்போக்காகவே" தற்காக சூழலில் இப்போக்கின் தாக்கம் பாதிப்பை செலுத்துகின்ற அதே நேரம், சமூகமாற்றத்திற்கான முனைப்பின் நிகழ்ச்சி நிரலை மாற்றப்பட்டு பின்நவீனத்துக்கு பதில் சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டு விட்டுள்ளது. இப்போது புரட்சிகர சமூக மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பது எதிரிகளின் நடைமுறை அல்ல. பின்நவீனத்துவ சாராம்சங்களின் தத்துவமே.

அமைப்பாவதற்கு எதிரான கருத்தை இந்த சக்திகளிடம் காணப்பட்டாலும் அதே சக்திகள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வகையில் அமைப்பாகித்தான் இருப்பதையும் அவதானிக்கலாம். ஆனால் அது ஒரு காலமும் மிஞ்சினால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மேல் கூட நீடிக்காமல் போன வரலாறையும் காண்கின்றோம். மேலும் இருக்கின்ற "அணி"கள் கூட துண்டாடப்படல் என்பது இங்கும் அதிகமாகக் காணமுடிகிறது. பன்முகத்தன்மை, பன்முகப்பார்வை என்கிற முறையியலை நேசிக்கும் அதேவேளை பன்முகசிந்தனைகளை ஏற்க மறுக்கும், அவற்றை அடித்து நொறுக்கும் போக்கையும் இத்தகையவர்கள் மத்தியில் பொதுவாகவே காண முடிகிறது. இந்த பொதுத்தன்மைதான் இதன் ஊற்று எங்கே இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது.

இது பின்நவீனத்துவ சிந்தனையின் தவறான வழிநடத்தலா, அதாவது அது தத்துவத்தின் குறைபாடா? அல்லது தத்துவத்தின்பாலான அறிதலின் மீதுள்ள குறைபாடா? அல்லது தன்னியல்பின் தாக்கங்களோடு ஏற்பட்டிருக்கிற தனிநபர் மனமகிழ்வூட்டலோடு இயைந்த சேர்ப்பின் விளைவுகளா? இவை எதுவாக இருந்தாலும் இந்தப் போக்கு அடக்கப்படும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை மட்டும் கூறி வைக்கலாம்.

சமூக அக்கறை கொண்டு இயங்கும் எந்த சக்தியும் சமூக இயங்கியல் மீதான கேள்வியை மட்டும் எழுப்புவதன் மூலம் மட்டும் நின்றுவிடமுடியாது. அதற்கப்பால் அந்த கேள்விகளுக்கான பதிலையும் தேடுவதும் அதனை பொறுப்போடு விவாதத்துக்கு கொண்டுவருவதும் அதனடிப்படையில் இயங்குவதுமே சமூக பிரக்ஞையின் நேர்மை வடிவமாக இருக்க முடியும்.

இக்கியச்சந்திப்பை எடுத்தக்கொண்டால் அது புலிகளல்லாத சக்திகளை ஒன்று குவித்திருக்கிறது. எப்போதும் எந்தவொரு சமூக மாற்றத்தை உருவாக்கவும் நிறுவனம் முன்நிபந்தனையானது. அதிகாரத்துவம் குறித்த எச்சரிக்கைகளினூடு அந்த அதிகாரத்துவம் அகற்றக்கூடிய பொறிமுறைகளைக்கொண்ட அமைப்பு இலக்கியச்சந்திப்புக்கும் தேவைப்படுவது அவசியமானதே.

நாம் பின்னவீனத்துவ விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய இடம் இதுதான். அதிகாரம் மையப்படுவதை எதிர்ப்பது எனும் பெயரில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை மறுப்பதில் போய் நிற்பது இன்றைய சூழலில் பின்னநவீனத்தவத்தின் பெரும்போக்காக ஆகி வருவதாகவே எனக்குப் படுகிறது. அந்த வகையில் இலக்கியச் சந்திப்புக்கு ஒரு அமைப்பு வடிவம் தேவைப்படும். ஆனால் அதன் சாத்திப்பாடின்மைக்கான காரணம் பல்வேறு அரசியலைச் சார்ந்தவர்கள், பல்வேறு விதமான சக்திகள், பல கருத்துநிலைகளையும் சார்ந்தவர்கள் என பல நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ஒரு இடத்தில் அமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டால், அது அமைக்கப்படும் அதே வேகத்தில் உதிர்ந்துவிடும் என்பது மிக எளிமையாக எவருக்கும் விளங்கும். ஏனென்றல் இவர்கள் ஒரு குறிப்பிட்ட "ஒரு" அரசியலுக்காக மையப்படுத்தப்படுபவர்கள் அல்ல. இது தான் அராஜக சக்திகளுக்கு சாதகமானதும். இவர்கள் "சேர்ந்து" தமது நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றும் பிடுங்கப் போவதில்லை என்பதை புலிகள் கூட நன்றாக அறிவார்கள். வேண்டுமென்றால் உதிரிகளாக அவ்வப்போது கத்திப்போட்டுக் கிடப்பார்கள். கொஞ்சம் பிரச்சார அளவில் சங்கடத்தைத் தருவார்கள் அவ்வளவு தான் என தமக்குள் நினைத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

சமீப காலமாக புலிகளின் பிரச்சாரங்களுக்கும், வெற்றிக்களிப்புகளுக்கும் பலியாகும் போக்கு புலிகளல்லாத அரசியல் சக்திகள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருப்பதாக எனக்குப் படுகிறது. இதற்கான காரணம் வெறும் தேசிய உணர்வுக்குப் பலியாவதாகக்கொள்ளமுடியாது. மாறாக புலிகளின் பிரச்சார உத்தி எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதுவும், மாற்று சக்திகளுக்கு சரியான அரசியல் வழிகாட்டல் கிடைப்பதில் உள்ள பஞ்சத்தையும், கூடவே புகலிடத்தில் புலிகளற்ற அரசியல் நபர்களுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு இல்லமையையுமே கொள்ளமுடியும். இது ஆபத்தானது. போகிற போக்கில் இது தொடர்வதற்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகின்றன. இதன் எதிர்காலம் என்ன?

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்த போது
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு யூதன் அல்ல
பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
அதன்பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிவந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல
(பாஸ்டர் நியுமோலர்-நாசிச்சிறைகளிலிருந்து)

0 comments:

கருத்துரையிடுக