(நன்றி-தேசம்நெட்)
நான் தேசாந்தரியாகி சுற்றியலைந்து 1990க்களின் ஆரம்பப பகுதியின் குளிர்காலம் ஒன்றில் பாரிசில் காலடி வைத்தேன். குளிர் உறைதலோடு என் புகலிட வாழ்வும் தொடங்கிற்று. என் இந்த புதியவாழ்நிலை என் “இருத்தல்” தொடர்பாக பல்தரப்பட்ட முரண்பாட்டுத் தன்மைகளை உருவாக்கிற்று. நான் வாழ்ந்த நேசித்த இலங்கை - தமிழக சுழல் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் கிராமிய நட்புக்கள் அவர்தம் மண்வாசனை பதிந்த முகங்கள் என் அரசியல் இலக்கிய உலகம் அனைத்தும் இழப்புற்ற அனாதைத்தனமாய் என் மனநிலை பரிசில் அலையுற்றுருந்த வேளையில்தான் பரிசில் நடந்த 14வது இலக்கிய சந்திப்பில் என் காலடி பதிந்தது.
இன்று 2008 ம் ஆண்டு. 16 ஆண்டுகள் உறுண்டோடிவிட்டன. ஸ்ருட்காட்டில் 35வது இலக்கிய சந்திப்பில் நண்பர்களெல்லாம் சந்திக்கிறார்கள். இந்த பதினாறு ஆண்டு காலங்களிலும் பல இலக்கிய சந்திப்புக்களை கடந்து வந்துள்ளேன். பல்வேறு காலங்களில் எமக்கு மறுக்கப்பட்ட ஐனநாயக கருத்துச் சுதந்திரங்களை இவ் இலக்கிய சந்திப்பு எமக்கு வழங்கியுள்ளது. எப்பொழுதும் அது ஒரு புடைச்சார்பற்ற பன்முகப்பட்ட சுதந்திரமான உரையாடல் வெளியொன்றை எமக்கு அளிப்பதில் இலக்கிய சந்திப்பு எப்போதும் பின் நின்றது இல்லை. அது தன் கதவுகளை அகலத் திறந்தே வைத்திருந்தது. மாற்றுக் கருத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுத்தளமாக இதனை கொண்டெடுத்துச் செல்வதில் எம்மைவிட்டு மறைந்த தோழர் பராவின் பங்களிப்பும் உழைப்பும் கணிசமானவையே என்பதை ஒவ்வொரு இலக்கிய சந்திப்பும் சாட்சியங்களாகி நின்றன. இன்றைய 35வது ஸ்ருகாட் இலக்கிய சந்திப்பானது தோழர் பராவின் வெறுமையான வெற்றிடத்தோடு நடக்கின்றது. தோழர் பராவின் மறைவுக்குப்பின் நடக்கும் சந்திப்பு இதுவாகும்.
1988ம் ஆண்டு Nஐர்மன் HERNE லிருந்து தோற்றம் கொண்ட இவ் இலக்கிய சந்திப்பானது இவ் வருடத்தோடு 20ம் ஆண்டினுள் தன் பயணக் காலடியை பதிக்கின்றது. இவ்விரு சகாப்தங்களிலும் இலக்கிய சந்திப்பு எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். மாற்று அரசியல் என்பதை தங்கள் அதிகார ஆசைகளாக அர்த்தம் கொண்ட பலர் தங்கள் கருத்து நிலைத்தளத்தை நிரந்தர அடித்தளமாக கெட்டியாக ஆக்கிட இலக்கிய சந்திப்பை பயன்படுத்த முனைந்த போதெல்லாம் தோல்வி நிலை கண்டு காணாமல் போயினர். இலக்கிய சந்திப்பை நோக்கிய வசைபாடல்கள் ஏராளம் இருந்தன. இவற்றையெல்லாம்தாண்டி இவ் இலக்கிய சந்திப்பானது ஒடுக்கப்பட்டோரின் குரலாய் மனித உரிமைகளின் வெளிப்பாடாய் தன்னை வெளிக்காட்டிக்கொண்டே வந்திருக்கிறது. எம் ஒளிவு மறைவற்ற கருத்துநிலைத் துணிவை வெளிக்காட்ட இவ் இலக்கிய சந்திப்பு ஒரு களமாக அமைந்திருக்கிறது. இவ் நிலை தொடர்ந்தும் பேணப்படவும் வளர்க்கப்படவும் வேண்டுமென்ற எண்னங்கள் நம் எல்லோரிடமும் உருவாகட்டும்.
0 comments:
கருத்துரையிடுக