கண்டிக் கலம்பகம்

100 வருட நினைவு

பெரியார்

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

Play and watch event

"சுதந்திரமாக கருத்தாடுவதற்கான களமாக அமையும் இலக்கிய சந்திப்பு" - என்.சரவணன்


“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்” என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில் மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.

1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 27 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 44 இலக்கிய சந்திப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன.

இறுதியாக கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து முடிந்திருக்கிறது. நோர்வேயில் இதுவரை மூன்று தடவைகள் இலக்கிய சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.

புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 

இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.

 அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய  சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.
ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.

ஒஸ்லோ சந்திப்பு
இரு நாட்கள் ஒஸ்லோவில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பில் பல காத்திரமான தலைப்புகளும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் நாள் வாசுகி ஜெயபாலனின் கணீரென்ற குரலில் கவிஞர் ஜெயபாலனின் கவிதை பாடி தொடக்கப்பட்டது. அதன் பின்னர் “தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்), சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்), ஆகியோர் உரையாற்றினார்கள் அதனை நெறிப்படுத்திய ராகவன் (இங்கிலாந்து) “லெனின் இந்தியாவில் பிறந்திருந்தால் சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்கும் வரை அவருக்கு புரட்சி பற்றிய சிந்தனையே உதித்திருக்காது என்றார் அம்பேத்கார்.” என்கிற வாசகத்துடன் தொடக்கவுரை ஆற்றியதுடன் ஏனையோர் தலித் விடுதலை சார்ந்து செயல்படுவதில் எதிர்கொள்ளும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார்கள். இன்று தலித் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது அதனை எதிர்ப்பவர்கள் எந்த உள்நோக்கங்களுடன் அதனை மேற்கொள்கிறார்கள் என்பதை விலாவாரியாக பேசப்பட்டது.

உயர்சாதியினர் தமது சாதியை அறிவித்துக்கொண்டு வாதிப் பெருமிதத்துடன் பணிபுரிய முடிகிறது.  ஒடுக்கப்பட்ட சாதியினர் தலித்தியம் பேசுவது ஒன்றும் அப்படி ஒன்றும் சொகுசானதல்ல. பெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் எதிர்கொண்டபடித்தான் தலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார் என்.சரவணன்.

“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ராஜன் செல்லையா (நோர்வே) நோர்வே அரச தொலைக்காட்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றி வருபவர். ஐரோப்பா மட்டுமன்றி இலங்கையிலும் ஊடக ஆறாம் பற்றிய வரைவிலக்கணம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்வது குறித்தும் நேர்த்தியான தயாரிப்போடு உரையாற்றினார்.

“நடைப்பயணக் குறிப்புகள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய சஞ்சயன் ஸ்பெயின் நாட்டில் 750 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்ட அனுபவத்தை இலக்கிய தரத்துடன் பகிர்ந்துகொண்டார். இரண்டு வருடங்களாக இந்த பயணத்தை மேற்கொண்டுவரும் அவர் அந்த பயணம் தந்த சுகமான அனுபவம் மட்டுமன்றி அந்த பயணம் இறக்கி வைத்த சுமைகளையும் அற்புதமாக பகிர்ந்துகொண்டார்.

“மைத்திரியோடும் மாகாணசபையோடும் மௌனமாகுமா தமிழர் அரசியல்? என்கிற தலைப்பில் உரையாற்றிய எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) குறிப்பாக வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை நிறைய தகவல்களுடன் விமர்சித்தார். ஸ்டாலின் கிழக்கு மாகாண சபை உருவாக்கிய  இன நல்லுறவு பணியகத்தின் பொறுப்பாளராக பிள்ளையான் காலத்தில் இயங்கியவர்.

சுவிசில் தனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விஜயன் ஒரு சிறு அரங்க நிகல்வோன்ரையும் செய்து காட்டினார். அதில் கலந்துனர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்திருந்தது சிறப்பு. விஜயன் 90களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்று அரங்க செயல்பாடுகளின் மூலம் அறியப்பட்டவர்.

இரண்டாம் நாளின் முதல் நிகழ்வாக “புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்கிற தலைப்பில் ஒஸ்லோவில் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களான மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா ஆகியோர் ஆக்கபூர்வமான உரையாடலை ஆரம்பித்து வைத்தனர். மேலதிக நேரம் நடந்த இந்த நிகழ்வை வாசுகி ஜெயபாலன் நெறிப்படுத்தினார். கலந்துனர்களில் பெரும்பாலானோர் இந்த உரையாடலில் உற்சாகமாக பங்குகொண்டனர். சிறந்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் இந்த நிகழ்வு பலரையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

1915 முஸ்லிம் - சிங்கள கலவரத்தின் 100 ஆண்டுகள் நினைவு குறித்து உரையாற்றிய ஸஹீர் அந்த கலவரம் குறித்து இன்னுமொரு கோணத்தில் தனது பார்வையை முன்வைத்தார். குறிப்பாக ஆங்கில அரசு சிங்களத் தலைவர்களை மட்டுறுத்துவதற்காக சிங்கள பௌத்தர்களின் மீது பலியை போட்டு முஸ்லிம் சார்பு – சிங்கள எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் கூட சிங்களவர்களே என்றும் தனது கருத்தை முன்வைத்தார். ஒரு வைத்தியராக பணியாற்றும் சஹீர் தனது அரசியல் தேடலினை உறுதியாகவே முன்வைத்தார்.

அன்றைய நாள் “இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றிய உமா (ஜேர்மன்) நீண்ட காலம் பெண்கள் குறித்த விடயங்களில் எழுதி, பேசி, செயற்பட்டு வருபவர். சர்வதேச பெண்கள் சந்திப்பு நிகழ்வை பல தடவைகள் ஜெர்மனில் பொறுப்பேற்று நடத்தியவர். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த வரலாற்று பூர்வமான தகவல்களை விலாவாரியாக பல செய்திகளின் மூலம் உமா முன்வைத்தார். தற்போதைய ஒதுக்கீடு குறித்த கோரிக்கை எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வை நெறிப்படுத்திய என்.சரவணன் “பெண்களின் அரசியலும், அரசியலில் பெண்களும் என்கிற விரிவான நூலை எழுதியவர்.

கடந்த வருடம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 50 வருட நினைவு குறித்து உரையாற்றிய மு.நித்தியானந்தனின் உரை அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தது. உணர்ச்சிபூர்வமாக இருந்த அந்த உரை ஒரு கதையாக ஓடிக்கொண்டிருந்தது. தகவல்கள், தரவுகள், ஈவிரக்கமற்ற தலைவர்கள், துரோக ஒப்பந்தம் என்று விரிந்து சென்றது அது. கலந்துனர்களில் பலருக்கு புதிய தகவல்களாக இருந்ததுடன் அதிர்ச்சியைக் கொடுக்கும் தகவல்களாகவும் இருந்தன. அந்த நிகழ்வை அவரின் நண்பர் நடராஜா நெறிப்படுத்தியிருந்தார்.

“உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்” என்கிற தலைப்பில் உரையாற்றிய ஆதவன் (டென்மார்க்) சிறுவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுடன் அரங்காற்றுவது எப்படி, அந்த உளவியலுக்கும் பெரியவர்களின் உளவியலுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதற்கான சவால்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார். 

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மு.நித்தியானந்தனின் “கூலித் தமிழ்” நூல் அறிமுக உரையை சத்தியதாஸ் ஆற்றினார். மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக அந்த நூலின் உள்ளடக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். ஆங்கிலேயர்கள் இந்தியக் கூலிகளை வேலை வாங்குவதற்காக அவர்களின் பேச்சுமொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அதற்காகவே அந்த காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டன என்றும், அதற்கான நூல்கள் கூட வெளியிடப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் சுசீந்திரா எனும் பெண் புகைப்பட கலைஞரின் “இயற்கையோடு பயணித்தல்” என்கிற புகைப்படத் தொகுப்பின் காணொளி காண்பிக்கப்பட்டதுடன் அதனை நெறிப்படுத்தினார் உமா.

அடுத்த இலக்கிய சந்திப்பு இலங்கையில் மட்டகளப்பு நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. அதற்கடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் நடத்தப்படவிருக்கிறது.

ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்

சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும்  சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக  குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில்  சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்  தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.

மார்ச் 28 ஆம் திகதி “ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்ற பத்திரிகைச் செய்தியின்  மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.

ஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.
44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014


இதுவரை நடந்து முடிந்துள்ள இலக்கிய சந்திப்புகள்

1வது 24-09-1988 ஜேர்மன்  
2வது   26-11-1988 ஜேர்மன்  
3வது   18-03-1989   ஜேர்மன்  
4வது   10-06-1989   ஜேர்மன்  
5வது   23-09-1989   ஜேர்மன்  
6வது   22/23/24.12.1989   ஜேர்மன்  
7வது   07-04-1990 ஜேர்மன்  
8வது 09-07-1990 ஜேர்மன்  
9வது   29/30.09.1990  
ஜேர்மன்
10வது   29-12-1990 ஜேர்மன்  
11வது   20-04-1991 ஜேர்மன்  
12வது 11-04-1992 ஜேர்மன்  
13வது 22-08-1992 ஜேர்மன்  
14வது 26/27.12.1992   பிரான்ஸ்  
15வது   10/11.04.1993   ஜேர்மன்  
16வது   07/08.08.1993   நெதர்லாந்து
17வது   30/31.10.1993   ஜேர்மன்  
18வது   02/03.04.1994   சுவிட்சர்லாந்து  
19வது   24/25.09.1994   பிரித்தானியா
20வது   09/10.09.1995   கனடா 
21வது   17/18.05.1996   ஜேர்மன்  
22வது   29/30.03.1997   ஜேர்மன்  
23வது   13/14.09.1997   பிரான்ஸ்  
24வது   30/31.05.1998   ஜேர்மன்  
25வது   22/23.05.1999   ஜேர்மன்  
26வது   10/11.06.2000   ஜேர்மன்  
27வது   23/24.12.2000   பிரான்ஸ் 
28வது   14/15.07.2001   நோர்வே 
29வது   29/30.11.2002   ஜேர்மன்
30வது   19/20.04.2003   டென்மார்க்
31வது   06/07.11.2004   ஜேர்மன்
32வது   12/13.11.2005   பிரான்ஸ் 
33வது   23/24.09.2006   பிரித்தானியா
34வது   09/10.06.2007   ஜேர்மன்
35வது   14/15.06.2008   ஜேர்மன்  
36வது   23/25.05.2009   நோர்வே 
37வது 10/11.10.2009 ஜேர்மன் 
38வது 19/20.02.2011 பிரான்ஸ்
39வது 05/06.05.2012 கனடா
40வது 06/07.04.2013 பிரித்தானியா
41வது 20/21.07.2013 இலங்கை
42வது 17/18.05.2014 ஜேர்மன்  
43வது ஒக். 31- நவ. 02 - 2014 சுவிட்சர்லாந்து
44வது 04/05.04.2015 நோர்வே

நன்றி - தினக்குரல்

ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்


ஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து பகிரங்கக் கண்டனம்

சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா போன்ற நூல்களின் ஆசிரியையும் பெண்ணியவாதியும்  சமூகப்போராளியுமான ஷர்மிளா செயித், நிலவும் ஆணாதிக்க சமூகக் கட்டுமானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசார, மத, பால் ரீதியான வன்முறைகளுக்கெதிராக  குரல் கொடுத்து வருபவர். பாலியல் தொழில்  சட்டபூர்வமாக்கப்பாடல் வேண்டுமென்று பி.பி.சிக்கு அளித்த பேட்டியின் பிற்பாடு இவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்  தொடர்ச்சியான கண்டனங்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகிறார். இவரது துணிச்சல்மிக்க கருத்துக்களை வன்முறையால் அடக்கிவிடலாம் என்ற நோக்கத்துடன் இணையத்தளங்களிலும் சமூக வலைப்பின்னல்களிலும் அவர் மீதான தனிப்பட்ட அவதூறுகளையும் பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.

மார்ச் 28 ஆம் திகதி ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான ஷர்மிளா செயித் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற பத்திரிகைச் செய்தியின்  மூலம் இந்த பயமுறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளன.

ஒரு பெண்ணின் சுயமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த ஆணாதிக்க கருத்தியளுடனான வன்முறைச் செயல்பாடுகளை இவ் இலக்கியச் சந்திப்பு கண்டிக்கிறது.

44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2014

ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு 2015 - நிகழ்ச்சிகள்

04.04.2014
“21ஆம் நூற்றாண்டில் அம்பேத்கர் சிந்தனையின் பங்கு”
- சாக்கியமோகன்
தேநீர் இடைவேளை
“தலித் விடுதலையை முன்னெடுப்பதில் சமகால சவால்கள்”
கரவைதாசன் (டென்மார்க்), தேவதாசன் (பிரான்ஸ்)
சரவணன் (நோர்வே), முரளி (ஜெர்மன்)
தலைமை - ராகவன் (இங்கிலாந்து)
“நடைப்பயணக் குறிப்புகள்”
சஞ்சயன்
பகல் உணவு
“புலம்பெயர் தமிழ்ச் சூழலில் ஊடக அறம்”
- ராஜன் செல்லையா (நோர்வே)
தேநீர் இடைவேளை
மைத்திரியோடும் மாகாணசபையோடும்
மௌனமாகுமா தமிழர் அரசியல்?
- எம்.ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்)
லங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்நோக்கும் சமகால சவால்கள்
- உமா (ஜேர்மன்)
“எனது மாற்று பரீட்சார்த்த அரங்க முயற்சிகள்”
-விஜயன்

05.04.2014
“புகலிட நாட்டியத்துறையில் மாற்று முயற்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்”
மாலதி, மேரி சூசை, கவிதா, மைதிலி, துஷா
தேநீர் இடைவேளை
“சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் - 50 வருட நினைவு”
-மு.நித்தியானந்தன்
“கூலித் தமிழ்” நூல் அறிமுகம்
-சத்தியதாஸ்
பகலுணவு இடைவேளை
1915 முஸ்லிம் - சிங்கள கலவரம் : 100 ஆண்டுகள் நினைவு 
- ஸஹீர்
“சம்பூருக்குத் திரும்புதல்”
-பாலசுகுமார்
தேநீர் இடைவேளை
புகைப்படத் தொகுப்பு காணொளி
சுசீந்திரா
உலகமயமாக்கலும் சிறுவர் அரங்கும்
-ஆதவன்

இதுவரை நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்புகள்

1988 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜெர்மனில் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பு 27வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட 43 இலக்கிய சந்திப்புகள் பற்றிய குறிப்புகளைத் தேடி இங்கு பட்டியலாக தொகுத்திருக்கிறோம். ஒரு பதிவுக்காக.

44வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2015


இது 44வது இலக்கியச் சந்திப்பு வலைத்தளம். ஒஸ்லோவில் 2009இல் நடந்த 36 வது இலக்கிய சந்திப்புக்காக அன்று உருவாக்கப்பட்ட அதே இணையத்தளத்தை இந்த தடவைக்காக மாற்றியமைத்திருக்கிறோம். ஒஸ்லோ இலக்கியச் சந்திப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம். ஏற்பாட்டு ஒழுங்குகள் காரணமாக வருகையை மார்ச் மாதத்திற்கு முன்னர் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்பவர்களுக்கு மேலதிக விபரங்கள் அறிவிக்கப்படும். தமது பெயர், தொடர்பு முகவரி, தொலைபேசி, மின்னஞ்சலினை nsarawanan@gmail.comக்கு அனுப்பி பதிவினை உறுதிசெய்யவும். இத்தளத்தில் முன்னைய இலக்கியச் சந்திப்பு குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், ஒளி, ஒலிப்பதிவுகள், புகைப்படங்களை பதிவுசெய்திருந்தோம். அடுத்தடுத்த இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இந்தப் பதிவுகள் பேருதவியாக இருக்கும். இவற்றை எமக்கு கிடைக்கச் செய்து உங்கள் பங்களிப்பினை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். முகநூல் குளுமமொன்றை தகவல்/கருத்து பகிர்வுக்காக ஆரம்பித்திருக்கிறோம் FACEBOOK அங்கும் உரையாடலாம்.

இலக்கிய சந்திப்பு ஒஸ்லோ 2009

இடம்
Kalbakken fritidsenter, Gårdsveien 6, 0952, oslo

26 யூன் 2009
பிற்பகல் 17.30 - 22.00


புலம்பெயர் குறுந்திரைப்பட, திரைப்பட முயற்சிகளின் போக்கு
கே.கே.ராஜா (லண்டன்)-

"தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்?"
திறந்த கலந்துரையாடல்
-நெறிப்படுத்தல் -நிர்மலா (லண்டன்)-

27 யூன் 2009
காலை 9.00 தொடக்கம் - 20.00 வரை

சிறகு நுனி பதிப்பகத்தின்
மூன்று நூல்கள் அறிமுகம்

  1. ஏவிவிடப்பட்ட கொலையாளி - திசேரா
  2. இது நதியின் நாள் - பெண்ணியா கவிதைகள்
  3. புதிய இலைகளால் ஆதல் - மலரா கவிதைகள்
நிகழ்த்துகை - பெளசர் (லண்டன்)


புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு மதிப்பீடு
-சுசீந்திரன்(ஜேர்மன்), சிவராஜன் (ஜேர்மன்)-
தலைமை -பெளசர் (லண்டன்)

சின்னத்திரை, பெரியத்திரை :
புகலிட சமூக பண்பாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்.
-சுமதி ரூபன் - (கனடா)-
கலை, இலக்கிய, ஊடக, அரசியல், சமூகவியலின், இலத்திரனியல் பரிமாணம்
-ஆத்மா (இலங்கை)-
தலைமை - றஸ்மி (லண்டன்)
தலித்திய முன்னணி மதிப்பீடு
-தேவதாஸ் (பிரான்ஸ்)-
-தலைமை - விஜி-
(பிரான்ஸ்)
புகலிடத்தில் பெண்கள் - அமைப்பாதல், அனுபவங்கள், சிக்கல்கள்/
போரும் பெண்களும்
-ரஞ்சி (சுவிஸ்), உமா (ஜேர்மன்)-
தலைமை - மல்லிகா (ஜேர்மன்)-
நோர்வே :
புகலிட தமிழ் சமூக இயக்கங்களின் வரலாறு

-உமைபாலன் (நோர்வே)-
தலைமை - சித்தி விநாயகநாதன் (நோர்வே)

28 யூன் 2009
காலை 9.00 தொடக்கம் - 20.00 வரை

கிழக்கிலங்கை அரசியல் ஒரு மாற்றா?
-ஸ்டாலின் (பிரான்ஸ்)-
தலைமை - ரவிக்குமார் (நோர்வே)
மலையகத்தின் மீதான அரசியல் கவனக்குவிப்பு
-நித்தியானந்தன் (லண்டன்)-
தலைமை என்.சரவணன்- (நோர்வே)

தலித்தியத்தின் இன்றைய சவால்கள்
-என்.சரவணன் (நோர்வே), ஜீவமுரளி (ஜேர்மன்)-
தலைமை - நித்தியானந்தன் (லண்டன்)
இலங்கைப் பிரச்சினையில் - அரசியல் பொருளாதாரம்
-ராகவன் (லண்டன்)-
தலைமை - இராமமூர்த்தி (லண்டன்)
நூலகத் திட்டம்:
சிறுபான்மைத் தமிழ்ச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல்.
-கூட்டுக்கட்டுரை-
-கலையரசன் (நெதர்லாந்து),
தலைமை - சரவணன் (நோர்வே)-
இலங்கை முஸ்லிம்கள்:
அரசியல் சமூக நிலைமைகள்
-ஆத்மா (இலங்கை)-
தலைமை - ரவுப் காசிம்
(நோர்வே)-
அடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

37வது இலக்கியச் சந்திப்பில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையானஅதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.

3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதனுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன், அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.



இறுதியாக கவிஞர் முருகையன் அவர்களுக்கான அஞ்சலியுடன்; இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் முடிவடைந்தது.

36வது இலக்கியச்சந்திப்பு

ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற 36வது இலக்கியச்சந்திப்பு
- றஞ்சி
1988 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட புகலிடப் இலக்கியச்சந்திப்பு தனது 35 வது தொடரை யூன் 14, 15ம் திகதிகளில் ஜேர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகரில் நடத்தியது. இச்சந்திப்புக்கு பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

14.6.2008
இலக்கியச்சந்திப்பின் மறைந்த தோழர் பராவை நினைவு கூர்ந்த பின்னர் சிவராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. மறைந்த தோழர் பரா அவர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் திரையில் ஒளியாகியது. அதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக புலம்பெயர் சஞ்சிகைகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் ஆன உயிர்நிழல், உயிர்மெய், வடு ஆகியவற்றைப் பற்றி அதன் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். உயிர்மெய் பற்றி சரவணன் கருத்துக்களை கூறினார். முடிவில் ஏன் பல சிறுபத்திரிகைகள், சஞ்சிகைள் இடையில் நின்றுவிடுவதற்கான காரணம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது

நிதி, இணையசஞ்சிகைகளின் வருகை மற்றும் பரவலாக்கல், போன்றன காரணமாக இருந்தாலும் கூட அரசியல் காரணங்களும் உள்ளன என்றும் 1985 � 1990 காலப்பகுதிகளில் ஐரோப்பாவில் இருந்தும் கனடாலிருந்தும் பல சிறுபத்திரிகைகள் வெகுஜன, இலக்கிய பத்திரிகைகளாகவும் வெளிவந்தன என்றும் அந்தக் காலகட்டத்தில் வந்த சஞ்சிகைகளில் மிகவும் காத்திரமான அரசியல், இலக்கிய படைப்புக்கள் வெளிவந்ததாகவும் ஆராக்கியமான விவாதங்களை முன்னெடுத்துச்செல்ல வழிவகுத்திருந்தன என்றும் ஆனால் இன்று அந்நிலை மாறி சிறுபத்திரிகைகளின் தளம் வேறு திசைக்கு சென்றுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை பேராசிரியர் அனெற்ற செய்திருந்தார். அவர் அதில் முதன்மையாக patrick suskind ( Das Prfum/Sikeler) என்பவரின் நாவலை முன்வைத்து தனது கருத்துக்களை முன் வைத்தார். இக்கதை மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது. நறுமணமே இல்லாமல் பிறந்த அவர் நறுமணங்களை தேடி அலைந்தார். நறுமணத்தை பெண்கள் இடத்திலேயே கண்டறிந்து நறுமணத்திற்காக 26 பெண்களை கொலைசெய்து விடுகின்றார். இந்நாவலின் உள்ளடக்கத்தை இவ்வாறு அறிமுகப்படுத்தி அது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். அவரது கருத்துக்களை சுசீந்திரன் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

முதலாவது நாளின் கடைசி நிகழ்வாக இணையசஞ்சிகைகள் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது.

இணையம் என்பதை அறிமுகப்படுத்திய சரவணன் பொதுவாக எப்படி இணையத்தை தொடங்கலாம் புளொக்ஸ்பொட், இணையம் போன்றவற்றின் நன்மைகள் அதன் பாவனைகள் வளர்ச்சிபோன்றவையும் தொழிநுட்பம் பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ் புளொக்குகளின் திரட்டியாக இருக்கும் தமிழ்மணம் போன்றவற்றை உதாரணமாக எடுத்துக் கூறினார். பின்னர் தமிழ் இணையங்கள் பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டன. புலி இணையத்தளங்கள், புலி எதிர்ப்புத் இணையத்தளங்கள், மாற்று கருத்தாளர்களின் இணையத்தளங்கள் போன்றன இன்று தனிப்பட்டவர்களின் மேல் தாக்குதல்களை தொடுப்பதிலேயே கவனம் கொள்வதாகவும் இதனால் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்தோ ஆரோக்கியமான விவாதங்களை தொடரமுடியாத நிலையே இன்று இந்த இணையங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் உதாரணமாக தேசம், தேனீ ஆகிய இணையத்தளங்களில் வரும் பின்னோட்டங்களில் தனிப்பட்டவர்கள் மேல் தொடுகக்கப்படும் காழ்ப்புணர்வுகள் பற்றியும் கூறப்பட்டது. அத்துடன் இன்றைய வானொலிகள் கூட பெண்களை கொச்சைப்படுத்துவதையே செய்து வருகின்றன என்ற விமர்சனமும் அங்கு முன்வைக்கப்பட்டது.


15.6.2008.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான உறவுகளின் இன்றைய நிலை - என்ற கலந்துரையாடலில் அசுரா, பௌசர், நிர்மலா, ராகவன், கலையரசன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறினர். கலந்துரையாடலில் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். கிழக்கு மகாணத்தின் இன்றையநிலை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனை, தற்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள், மலையகமக்களின் வாழ்வியலும் துயரங்களும், தலித் சமூகத்தின் எதிர்காலமும் இன்றைய நிலையும், நாட்டின் இன்றைய நிலைமை, சிங்கள அரசினால் தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்களின் மேல் இழைக்கப்படும் ஒடுக்குமுறைகள் போன்றவை பற்றி பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் பலரும் பங்கு கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உமா அவர்கள் ஊடறு வெளியீடான மை, இசைபிழியப்பட்ட வீணை ஆகிய கவிதைத்தொகுதிகளை விமர்சித்தார். ஆரம்பத்தில் நாம் சொல்லாத சேதிகள் என்ற கவிதைத்தொகுதியையே பார்த்தோம் அதன் பின் புகலிடப்பெண்கள் கவிதைத்தொகுதியான மறையாத மறுபாதி வெளிவந்தது தற்போது மை வெளிவந்துள்ளது என குறிப்பிட்டார். மையில் வந்த கற்பகம்யசோதரா, தர்மினி, வாசுகி, மதனி மாதுமை, குட்டிரேவதி ஆகியோரின் கவிதைகளை உதாரணமாக எடுத்துக்காட்டினார். அதே போல் சுமதியின் like myth and mother என்ற கவிதைநூலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அடுத்தநிகழ்வாக அம்பையின் நிகழ்வு ஆரம்பமாகியது. அம்பையின் கருத்துக்கள் ஒரு சிந்தனை விழிப்பை முன்வைத்தன. சிந்தனை மாற்றத்தின் தெளிவான விடயங்களையும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் இலக்கியத்திலும் நிஜத்திலும் படும் அவஸ்தைகளை மிக அழகாக அம்பை எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து புஸ்பராஜாவின் படைப்புக்கள், தீண்டத்தகாவதன் தலித் சிறுகதைகள் ஆகிய தொகுப்புக்களை மேரி, மங்கை, சுகன், சுசீந்திரன் ஆகியோர் விமர்சனம் செய்தார்கள்.

19 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற இவ் இலக்கியச்சந்திப்பானது புகலிடச்சூழலில் ஓரளவுக்கேனும் ஒரு மாற்றுக்கருத்திற்கான தளமாக உள்ளது. வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை கொண்ட பல ஆர்வலர்கள் இச்சந்திப்பில் பங்கு பற்றியிருந்தார்கள். இறுதியாககிருஸ்ணா அவர்கள் நன்றியுரையாற்றினார். 37ஆவது இலக்கியச் சந்திப்பு நோர்வேயில் நடைபெற உள்ளது.

போட்டோ பிரதிகளை அனுப்பித் தந்த சரவணனுக்கும் நன்றிகள்

June 2008

33வது இலக்கியச்சந்திப்பு

ராஜேஸ் பாலா (லண்டன்)
(நன்றி -ஊடறு)
மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் சேர்ந்து நடத்தும் இலக்கியச்சந்திப்பின் 33வது தொடர் செப்டம்பர் 23,24ம் திகதிகளில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள், ஓவியர்கள், பெண்ணியவாதிகள் என்று பலதரப்பட்ட படைப்பாளிகள் எட்டு நாடுகளிலிருந்து வந்து பங்குபற்றினார்கள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தலைமையில் இச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் நடக்கும் வன்முறைகளால் இறந்த மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது.

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேசிய செல்வி ஜாஸ்பிர் பனசார், பொது ஸ்தாபனங்களின் சேவைகளுக்கு உதவி செய்யத் தாங்கள் எப்போதும் தயாராயிருப்பதாகச் சொன்னார். நியுஹாம் கவுன்சிலின் அங்கத்தவரான இலங்கைத் தமிழர் பால் சத்தியநேசன் தனது வாழ்த்துரையை வழங்கினார்.
கடந்த வருடம் பிரான்சில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றிய மறைந்த சி.புஸ்பராஜா பற்றி லக்ஷ்மியும், டென்மார்க்கைச் சேர்ந்த முல்லையூரான் பற்றி தாஸ் உம் நினைவுகூர்ந்து படைப்பாளிகளான அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கையின் இன்றைய சூழ்நிலையில், விளிம்பு நிலை மக்கள் என்று அடையாளம் காணப்படுவோரில் பெண்கள், குழந்தைகள், அகதிகள், இன ஒடுக்கலுக்கு உள்ளாகும் முஸ்லிம் மக்கள், சாதியின் பெயரால் அடக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் (தலித்), இன்னும் சரியாகச் சம உரிமையற்று வாழும் மலையகத் தமிழர் என்று பலர் அடங்குவர்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் தளமாக இந்த இலக்கியச்சந்திப்பு இருந்து வருகிறது கடந்த 32 சந்திப்புக்களிலும், உலகின் பல பாகங்களிலுமிருந்து பல ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பெண்ணியவாதிகள், மனித உரிமைவாதிகள் என பலர் பங்குபற்றியிருக்கிறார்கள். தற்போது நடந்து முடிந்த 33வது சந்திப்பில் "ஈழத்துப் படைப்புக்களும் மனித உரிமையும்“ என்ற விடயம் மையக் கருத்தாக இருந்தது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் மனித உரிமைக் குரலுக்கு வித்திட்ட இச் சந்திப்பின் ஆரம்பமும் இன்றைய வளர்ச்சியும் பற்றி ஜேர்மனியிலிருந்து வந்த சந்தூஸ்குமார் பேசினார். அடக்கப்படும் சக்திகளுக்கெதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் தளமாக இலக்கியச் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் ஆயுதம் ஏந்தாதவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை 85ம் ஆண்டுக்குப் பின் வந்த புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள் முன்வைத்தன.
அப்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் புகலிட இலக்கியமும் பற்றி சர்ச்சை நடந்தது.. இன்று இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் தொடரும் வன்முறைகளால் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் பல தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து 1991ம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டுப் புத்தளப் பகுதியில் அகதிகளாய் வாழும் முஸ்லிம் மக்களினதும் முஸ்லிம் மக்களைப் பற்றியதுமான படைப்புக்களும் புலம்பெயர்ந்த படைப்புக்கள்தான். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து இருப்போரின் துயரும் புத்தளத்தில் புலம்பெயர்ந்து இருப்போரின் துயரும் அடிப்படையில் ஒன்றுதான். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புதிய நாட்டு மொழிக்கும் கலாச்சாரத்திற்கும், இனவாதத்திற்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.
தங்கள் படைப்புக்களில் தங்களின் பழைய வாழ்க்கையை எண்ணி ஏங்கும் துயரத்தை பல புலம்பெயர்ந்தோர் படைப்புக்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும்; தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தையும் புரிந்து கொண்டு, இணைந்துகொண்டு படைக்கப்படும் புகலிட இலக்கியம் பற்றியும் உதாரணங்களுடன் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன
புகலிடத்தில் தலித் இலக்கியம் பற்றிப் பாரிசிலிருந்து வந்த தேவதாசன் பேசினார். பஞ்சமர் கதைகளின் மூலம், சாதி முறை சொல்லி பிரிக்கப்பட்டு அடக்கிவைத்திருந்த மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் வடிவில் வெளிப்படுத்தித் தலித் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டிய டானியல் இன்று 'தலித் இலக்கியத்தின்' பிதாமகனாகக் கருதப்படுவதையிட்டுக் கருத்துக்கள் பகிரப்பட்டன. அவரைத் தொடர்ந்து, பெனடிக்ட் பாலன், அகஸ்தியர் போன்றோர் தலித் மக்களின் இலக்கியத்துக்குச் செய்த பணியும் உரையாடப் பட்டது.
"கலாச்சாரத் தளத்தில் பெண்களின் போராட்டம்" என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வந்திருந்த சுல்பிகாவும் சுமதி ராஜசிங்கமும் ஆழமான பல கருத்துக்களைச் சொன்னார்கள். கலாச்சாரம் யாருடையது, எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த சமயத்தை மையமாகக் கொண்டது என்பது பிரச்சினையல்ல, பெண்களை எப்படி அடக்கி வைத்திருக்கிறது அந்தக் கலாச்சாரம்… பெண்களைப் பற்றிய கலாச்சாரக் கோட்பாடுகள் பெண்களை அடக்கும் சக்திகளாக ஆண்களால் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன… என்ற கருத்தில் சுல்பிகா பல விடயங்களைப் பேசினார். இந்தக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பெண்களின் படைப்புக்களையும் உதாரணங்களாக முன்வைத்தார். இந்துக்களாயிருந்தாலும், முஸ்லிம்களாயிருந்தாலும், கிறிஸ்தவர்களாயிருந்தாலும் பல நாடுகளில் பெண் அடக்குமுறைக்கு அவர்களின் பாதுகாப்புக்கு என்று நிர்ணயித்து வைத்திருக்கும் சமுதாயத்தின் கலாச்சாரக் கோட்பாடுகளே ஆயுதங்களாகப் பாவிக்கப்படுகின்றன என்று கூறினார்.
பெண்ணியக் கருத்தரங்கைத் தொடர்ந்து புகலிட வாழ்வில் இளம் தலைமுறையினரின் அடையாளம் என்ற தலையங்கத்தில் நோர்வேயிலிருந்து வந்த அருள்நேசன் தனது உரையைத் தொடர்ந்தார். தமிழ்த் தேசியக் கோட்பாட்டுக்கு அப்பால், புலம்பெயர்ந்த நாடுகளில் தங்கள் அடையாளங்களை இளம் தலைமுறை தேடும், தேடுகிறது என்றார்.
இவரின் கருத்துக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர்களால் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். அவர் தனது உரையில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார். அதாவது, ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தபோது, புலம்பெயர்ந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும் புதிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கையைச் சரிசெய்து கொள்ளவும் ஆங்கில மொழி அவர்களுக்கு உதவி செய்தது. ஆனால், மொழி தெரியாத நாடுகளுக்குள் குடிவந்தவர்களுக்குத் தங்களின் வாழ்க்கையைச் சீராக அமைக்க எத்தனையோ தடைகள் இருந்தன. அத்துடன், ஏககாலத்தில் பெரும் தொகையில் தமிழர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குக் குடிபெயர்ந்தது இலங்கையில் -தமிழர்களுடன்- சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைமுறையையே தொடர உந்து கருவாக இருந்தது. தமிழ்ப் பாடசாலைகள், கோயில்கள் என்பன தொடங்கப்பட்டன.
தங்களின் தமிழ்க் கலாச்சாரத்தைத் தங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நம்பினர். ஆனால் புலம்பெயெர்ந்த நாடுகளில் பிறந்த பல குழந்தைகள் பாடசாலைக்குப் போகமுன்னர் தமிழ்க் கலாச்சாரத்தையும், பாடசாலைக்குப் போகத் தொடங்கியதும் வேறு கலாச்சாரத்தையும் முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது. இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் பல கருத்துவேறுபாடுகளும் தத்துவ முரண்பாடுகளும் தோன்றுகின்றன.
தங்கள் குழந்தைகளைத் 'தமிழ்க் குழந்தைகளாக' பாதுகாப்பதற்கும், தமிழ்க் கலாச்சார அளவுகோலில் எடைபோடவும் நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். தமிழ்ப் பிள்ளைகள் மற்றவர்களைவிட கெட்டிக்காரர் என்பதைக் காட்ட குழந்தைகள் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ அல்லது சட்ட வல்லுனராகவோ படிக்கவேண்டும் என்ற மனோபாவத்துள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய படிப்பு முறைகளோ 'உனக்குப் பிடித்த படிப்பை, உனக்குச் சந்தோசம் தரும் வாழ்க்கையை அமைக்கத் தக்க வழியை நீயே தீர்மானிக்க வேண்டும்' என்ற ரீதியில் படிப்பு முறைகளை வழிவகுத்திருக்கிறது. இந்த அறிவுரையின் தாக்கம் தமிழ்க் குழந்தைகளுக்கும் வருகிறது. இதற்கு லங்கா ராணி புத்தகத்தை எழுதிய அருளரின் மகள் மியா என்பவர் இன்று உலகம் தெரிந்த பொப் பாடகியாயிருப்பது ஒரு உதாரணமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மக்களுக்குமுள்ள சுதந்திரம் தங்களுக்கும் தேவை என்று காட்டுகிறார்கள். இதனால் பல கலாச்சார மோதல்கள் வருகின்றன. ஒரு சில தமிழ் இளைஞர்கள், காதில் தோடும் நீண்ட தலைமுடியுமாக இருப்பதை பல பெற்றோர் அவமானகரமான விடயமாகக் கருதுகிறார்கள். இளைஞர்களின் இந்தச் செயல்கள் அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி என்று உணர்ந்து கொள்ளாமல், தங்கள் குழந்தைகள் தங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அவமானம் செய்வதாக நினைத்து பல பெற்றோர் மனவருத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால் தாங்கமுடியாதிருக்கிறது. பெற்றோருக்கு மனவருத்தம் கொடுக்க விரும்பாத காரணத்தால், தங்களுக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளாமல் பல பெண்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கிறார்கள், அல்லது தனக்கு விரும்பாத மனிதனைத் திருமணம் செய்துவிட்டுத் துன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இது விவாகரத்திலும் போய் முடிந்துவிடுகிறது. மேற்கு நாட்டுக் கலாச்சாரம் தங்கள் பெண்குழந்தைகளின் 'கற்புக்கு' பங்கம் உண்டாக்கிவிடும் என்ற பயத்தில், சில ஆபிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே அவர்களின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடவும் சில தமிழ்ப்பெற்றோர் முயற்சிப்பதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் நாள் சிவலிங்கத்தின் வரவேற்புரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து "மனித உரிமையும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களும்“ என்ற தலைப்பில் திரு மு. நித்தியானந்தன் உரைநிகழ்த்தினார். இரண்டாம் உலகயுத்தம் நடந்தபின் மனித உரிமைகளுக்கு எதிரான பல விடயங்களைச் செய்து யூதர்களைக் கொன்று குவித்த கிற்லரின் அடிவருடிகளை நியுரம்பேர்க் நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்த செப்டம்பர் மாதத்தில் மனித உரிமை சம்பந்தமான இந்தச் சந்திப்பும் நடப்பது பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு தனது உரையை ஆரம்பித்தார்.
மலையக மக்களின் உரிமைகளுக்காகச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிய பலரை மேற்கோள் காட்டி ஆழமான பல கருத்துக்களை முன்வைத்தார். 1947 இல் மலையக மக்களின் குடியுரிமை பறிபோக "உதவிசெய்த“ தமிழ்த் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களைத் தமிழர்களில் ஒரு குழுவாகப் பார்க்காமல், தங்களிலுமிருந்து வேறுபட்ட 'அவர்களாகப்' பார்த்து வேற்றுமை காட்டிய "ஈழத்துத் தமிழ்க் காந்தி“ எஸ்,ஜே.வி செல்வநாயகம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது..
அத்துடன், இந்திய பாதுகாப்புப்படை தமிழ்ப் பகுதிகளில் ஆயுதங்களுடன் கோலோச்சியபோது, "தமிழ்ப் பகுதிகளில் தமிழர்கள் உயிர்வாழ்வது அவர்களின் (தமிழர்களின்) உரிமையல்ல, இந்தியப்படை கொடுத்த சலுகை“ என்று சொன்ன வசனங்கள் சந்திப்பில் பங்கு பற்றியவர்கள் மத்தியில் பெரிய விவாதங்களைத் தோற்றுவித்தது. தமிழ்ப் பகுதிகளில் இன்றும் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் உரிமை கிடையாது. அந்தச் சலுகை, ஆயுதம் தாங்கியோரினதும் ஆட்சியிலிருப்போரினதும் சலுகையாகத்தான் இருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் இலக்கியச் சந்திப்பின் கடைசி அமர்வாக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த, தினகரன் ஆசிரியரும், மூன்றாவது மனிதன் பத்திரிகை ஆசிரியருமான திரு மஹ்ருவ் பவுசர் தனது கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு இலங்கை முஸ்லிம்களின் லண்டன் அமைப்பைச் சேர்ந்த திரு பதுறஷமான் தலைமை வகித்தார்.
மேலும் பவுசர் தனது உரையில் இலக்கியச் சந்திப்பிற்குத் தன்னை அழைத்ததற்கும், இலக்கிய சந்திப்புக்கள் மூலம் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை முன்னெடுப்பதற்கும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் சொன்னார். அவர் தனது உரையில் பின்வரும் கருத்துக்கள் சார்ந்த விடயங்களைப் பேசினார்.
"விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை நிலை|| இலக்கியங்கள், கலைப் படைப்புக்கள் மூலம் இலங்கையில் வாழும் மூன்று இனங்களினதும் பன்முகப் பிரச்சினைகளை முன்வைக்கிறது. வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் படைப்புக்களில் அவர்கள் வெளிப்படுத்துவது என்ன? எங்கள் நாட்டில் எம் மக்கள் பலர் அடிப்படை உரிமையற்றவர் களாகத்தான் வாழ்கிறார்கள். ஊடகங்கள் உண்மையிலிருந்து நழுவி, பொய்மைகளைத் திரித்து எழுதுகின்றன. உயிர்களைப் பற்றிய அச்சம் அங்கு பெரிதாகவிருக்கிறது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்னும் மிகவும் கசப்பான, வேதனையான உணர்வுகளுடன்தான் வாழ்கிறார்கள். இந்த வரலாற்றுத் தவறைச் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வெளியேற்றலால் சமுதாயச் சிதறல்கள் நடந்திருக்கின்றன. மக்களாகிய நாங்கள் வாழத்தான் பிறந்திருக்கிறோம்.
மனித உணர்வுகளை வெளிப்படுத்த இலக்கிய வடிவங்கள் உதவி செய்கின்றன. நவீன கவிதையுலகில் பல முஸ்லிம் படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களைக் கவிதையாக்கியிருக்கிறார்கள். 80ம் ஆண்டு தொடங்கிய விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் அந்த விடுதலைக்குத் தங்களை இணைத்துக் கொண்டு போராடிய முஸ்லிம் போராளிகள் அவர்கள் இணைந்திருந்த விடுதலைக் குழுவினாகளால்; படுகொலை செய்யப்பட்டார்கள். 1991ம் ஆண்டு 24 மணித்தியாலங்களில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். விடுதலைக்குப் போராடிய 191 முஸ்லிம் போராளிகள், அவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஒட்டுமொத்தமாகக் கொலைசெய்யப் பட்டார்கள். ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. தமிழ் எங்கள் தாய்மொழி, நாங்கள் வாழும் வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம். இதில் எந்த விட்டுக்கொடுப்பும் ஒருநாளும் இருக்காது.
வடக்கில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளையும், மூதூரில் நடந்த அநியாயங்களையும் இன்று பொத்துவிலில் அரச படையினரால் செய்யப்பட்ட முஸ்லிம் படுகொலைகளையும் இலக்கியச் சந்திப்பில் கண்டிக்கிறார்கள், எதிர்க்குரல் கொடுக்கிறார்கள். இதுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். முஸ்லிம்களின் நிலை பற்றி நுஹ்மான், சோலைக்கிளி போன்ற முஸ்லிம் கவிஞர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளால் முஸ்லிம்கள் பற்றிய தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அபாயமானவர்கள், தொப்பி புரட்டுபவர்கள், நம்பத்தகாதவர்கள் என்ற பிரச்சாரம் மிகவும் பரவலாகச் செய்யப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்தப் பிரச்சாரங்கள் உதவி செய்கின்றன.
பவுசரின் கருத்துக்களையடுத்து "முஸ்லிம்கள் அரசாங்கத்தாலும், விடுதலைப் புலிகளாலும் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்த வன்முறைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய முடியாதா?" என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பவுசர் இவ்வாறு பதிலளித்தார். தமிழ் மண்ணும் முஸ்லிம் மண்ணும் காக்கப்பட வேண்டும் என்றார். அவர் மேலும் தொடர்ந்தபோது, „இன்று நடைபெறும் கெப்பற்றிக்கொலாவ, செஞ்சோலை, மூதூர், பொத்துவில் கொலைகளால் யாரோ ஒரு தரப்பினர் சந்தோசப்படுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். மக்களுக்கு உண்டாக்கப்படும் கற்பனைப் பிரக்ஞைகள் அகற்றப்பட வேண்டும். ஒற்றுமைக்கும் அமைதிக்குமான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இலக்கியச் சந்திப்பின் இறுதியில் பல கலை நிகழ்ச்;சிகளும் குறும்படக் காட்சிகளும் ஆடல் பாடல்களும் இடம்பெற்றன. ஓவியர் கிருஷ்ணராஜாவின் நன்றியுரையுடன் லண்டனில் நடைபெற்ற 33 வது இலக்கியச் சந்திப்பு முடிவுற்றது. அடுத்த இலக்கியச் சந்திப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
18 வருடங்களிற்கு மேலாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்களின் இருப்பாகவும், இருப்பின் குரலாகவும் இருக்கின்ற இலக்கியச் சந்திப்பு, 33வது முறையாக இரண்டு நாட்கள் 2006ம் ஆண்டு செப்டெம்பர் 23ம், 24.ம் திகதிகளில் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள ஸராட்போட் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. இலங்கையில் நடைபெற்று வரும் யுத்த நிறுத்த மீறல்கள் மற்றும் யுத்தத்தை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறும் இலங்கையின் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர ஜனநாயக அரசியல் தீர்வினை முன்வைக்குமாறும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இவ்விலக்கியச் சந்திப்பு கேட்டுக் கொள்கின்றது.
2. அண்மையில் நடைபெற்ற கெப்பிட்டிக்கொலாவ, மூதூர், முல்லைத்தீவு, பொத்துவில் போன்ற இடங்களில் நடைபெற்ற அப்பாவிமக்களின் மீதான படுகொலைகளை இவ்விலக்கியச் சந்திப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் இவை போன்ற படுகொலைகள் இனி ஒருபோதும் இடம்பெறாதவாறு உறுதியளிக்கும்படி இலங்கை அரசினையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கேட்டுக் கொள்கின்றது.
3. வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதியில் விசாரணையின் பேரால் கைது செய்வதையும் வெள்ளை வானில் கடத்துவது, காணாமற் போகச் செய்வது, கொல்லுவது, இனந் தெரியாதோர் மற்றும் பல்வேறுபட்ட "படைகள்" என்ற போர்வையில் நடத்தப்படும் கொலைகள் போன்றவை உடனே நிறுத்தப்பட வேண்டும்.
4. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்கள் தங்கள் இடங்களில் பாதுகாப்புடனும் இறைமையுடனும் வாழ வழி செய்ய வேண்டும்.
5. இலங்கையில் நடைபெறும் சட்டப் புறம்பான படுகொலைகள் அனைத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படவேண்டும் என்று இச்சந்திப்பு 24.09.2006 இன்று தன் தீர்மானங்களை நிறை வேற்றுகின்றது.
லண்டன்,
24.09.2006

32வது இலக்கியச்சந்திப்பு

-பிரகாஸ் -

(திண்ணை)

முப்பத்தியிரண்டாவது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபடி 2005 நவம்பர் 12-13 என இரண்டு நாட்களும், பாரிஸ் மாநகரில் பிரசிடென்ட் வில்ஸன் அவென்யூவில் அமைந்துள்ள ஐரோப்பியக் கட்டிடத் தொகுதி மண்டபங்களொன்றில்; நிகழ்வுற்றது. சனிக்கிழமை முதல் நாள் பகல் 11.00 மணியளவில் 100 பேர்களுடன் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு, இரண்டாம் நாள் இரவு முடிவெய்துகிற வேளையில் 250 பேர்களாக விரிவு பெற்றிருந்தது. அறிவிக்கப்;பட்ட நிகழ்வுகளில் 'அநிச்ச ' சஞ்சிகை அறிமுக நிகழ்வும் முற்றவெளியின் கவிதா நிகழ்வும் மட்டுமே திட்டமிட்டபடியில் நிகழவில்லை. உரை நிகழ்த்தவென அழைக்கப்பட்டிருந் தவர்கள் அனைவரும் முன்னதாகவே பாரிஸை வந்து அடைந்திருந்தனர். எதிர்பார்த்தபடி சஞ்சிகை பாரிஸை வந்து அடையாததால், 'அநிச்ச ' சஞ்சிகை அறிமுகத்திற்கு மாற்றாக தேவதாசன் இன்றைய சூழலில் 'அநிச்ச 'வின்; அவசியத்தை வலியுறுத்தி ஒரு அழுத்தமான உரையை முன்வைத்தார்.

மண்டபத்தின் பக்க மேசையில் விரித்த கறுப்புத் துணியின் பின்னணியில் புகைப்படக் கலைஞரும் கவிஞருமான தமயந்தியின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 'ஆதலினால் காதல் செய்வீர் ' எனும் மகுடத்துடன் அவர் படைத்திருக்கும் இசை - புகைப்படப் பிம்பம் - கவிதைக் கலப்பின் குறுந்தகட்டுக்கான ஆதாரவேர்களான புகைப்படங்களே அங்கு வைக்கபட்டிருந்தன. வரவேற்பு மேசையில் 'சுட்டுவிரல் ' பத்திரிகையின் ஆசிரியை பிரியதர்சினியும் மற்றும் அசோக் பிரகாஸ், கபிலன், தமரா, அருணா ஆகியோரும் பிரதிநிதிகளை இன்முகத்து டனும்;; தோழமையுடனும் வரவேற்றபடியிருந்தனர், புத்தக விற்பனைப் பகுதியில் நாவலாசிரியர் ஷோபாசக்தியும்;, ஊடகவியலாளர் உதயகுமாரும், விமர்சகர் நாதனும் அமர்ந்திருந்தனர்.

மண்டபத்தின் சுவர்களில் ஓவியர் வாசுகனின் 'சுதந்திரத்திற்காகக் காத்திருத்தல் ' எனும் தலைப்பிலான படைப்புகள் வண்ணங்களுடன் வசீகரமானதொரு சூழலை இலக்கியச் சந்திப்பிற்கு வழங்கிக் கொண்டிருந்தது. தமயந்தி, அசோக் யோகன், சுசீந்திரன், லக்ஷ்மி, கிருபன் போன்றவர்கள் இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர்களாக அங்குமிங்கும் நகர்ந்தபடி நிகழ்வுகளை நெறிப்படுத்தியபடியிருந்தனர்.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முன்னைநாள் பின்னிரவிலும் அன்றைய தினம் அதிகாலையிலும் பாரிஸை வந்தடைந்தவர்களும், மண்டபத்தை வந்தடைய ஏற்பட்ட காலதாமதத்திற்கு ஒப்ப நிகழ்வுகள் அனைத்தும் 1 மணி நேரம் பின்னால்தான் துவங்கியது. பின்னர் துவங்கிய காரணத்தினால் முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய இயலாத திரையிடலாக ரஜனி திரணகம குறித்த 'No more cry sisters' திரைப்பட நிகழ்வு அமைந்து விட்டமை விழா ஏற்பாட்டாளர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. மற்றபடி அனைத்துப் பேச்சாளர் களும் உரையாற்றிய வகையிலும், பார்வையாளர்களாகப்; பங்கேற்றவர்களின்; கருத்துரைகளுக்கு எல்லையற்ற சுதந்திரம் வழங்கிய வகையிலும் கருத்துச் சுதந்திரத்திற்கானது இலக்கியச் சந்திப்பு எனும் மரபை இந்த இலக்கியச் சந்திப்பு முழுமையாகவே கட்டிக் காத்தது.

சந்திப்பிற்கு வந்திருந்தவர்களின் சுயஅறிமுகத்துடன் துவங்கிய கூட்டத்தின்; முதல் நிகழ்ச்சியாக புத்தக அறிமுகம் நிகழ்ந்தது. மா.கி.கிறிஸ்ரியன் எழுதிய 'புயலுக்குப் பின் ' எனும் நாவல் விமர்சனத்தை அரசியல் விமர்சகரான சி. புஷ்பராஜா நிகழ்த்தினார். மெலி;ஞ்சி முத்தனின் 'முட்களின் இடுக்கில் ' கவிதைத் தொகுப்பு தொடர்பான தனது கருத்துக்களை கவிஞை தர்மினி முன்வைத்தார். அர்விந் அப்பாதுரையின் மூன்று கவிதைத் தொகுப்புகளான 'சலம்பகம் ' எனும் இலக்கிய வடிவம் தொடர்பான தனது கருத்துக்களை திரைப்பட இயக்குநரும் கவிஞருமான அருந்ததி வழங்கினார். 'அநிச்ச ' சஞ்சிகையின் நோக்குகள் குறித்த தனது பார்வையை அதன் ஆசிரியர்களில் ஒருவரான தேவதாசன் பகிர்ந்து கொண்டார். இவ் விமர்சனங்களின்போது நூலாசிரியர்களும் கலந்து கொண்டு விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

புத்தக அறிமுகத்தைத் தொடர்ந்து மதிய உணவின் பின்பாக, மலையக மக்களின் தேசிய உருவாக்கம் குறித்த விரிவான வரலாற்றுத்; தருணங்களை முன்வைத்து இடதுசாரி அரசியலா ளரான பரராஜசிங்கம் உரையாற்றினார். சனிக்கிழமை நிகழ்வுகளின் இறுதியாக 'முஸ்லீம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் ' எனும் பொருளில் முஸ்லீம் மக்களின் அடையாளம் என்பது ஈழச்சூழலில் எவ்வாறாக உருவாகியது என்பது குறித்ததொரு வரலாற்று ரீதியிலான மதிப்பீட்டை அரசியல் விமர்சகர் எஸ்.எம்.எம். பசீர்; முன்வைத்தார். முதல் நாள் உரை விவாத நிகழ்வுகள் முடிவுக்கு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை அண்மித்திருந்தது. முதல் நாள் நடைபெற்ற நூலறிமுகம் நிகழ்வுக்கு கவிஞை ஜெயா பத்மநாதனும், மலையக மக்கள் தொடர்பான நிகழ்வுக்கு இலக்கியச்சந்திப்பின் தொடர்பங்களிப்பாளரான சிவராஜனும், முஸ்லீம் மக்கள் தொடர்பான நிகழ்வுக்கு அரசியல் விமர்சகர் யோகரட்ணமும் தலைமையேற்று முகவுரையாற்றிதோடு மிகச் சிறப்பாக விவாதங்களையும் நெறிப்படுத்தினர்.

முதல்நாள் ஒரு மணிநேரம் நிகழ்ச்சிகள் தாமதாகத் துவங்கியதால், முதல் நாள் இடம்பெறவிருந்த 'பெண்மொழி ' நிகழ்வு இரண்டாம் நாளுக்கு நகர்ந்திருந்தது. இலக்கிய விவாதங்களில் இன்று அதிகமும் பேசப்படும் 'பெண்மொழி ' குறித்த தனது படைப்புலக அனுபவங்களைத் தமிழகத்திலிருந்து வந்திருந்த கவிஞை திலகபாமா பகிர்ந்து கொண்டார். 'பெண்மொழி ' நிகழ்வுக்கு புகலிடப் பெண்கள் சந்திப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் இலக்கியச் சந்திப்பின் தொடர்ந்த பங்கேற்பாளருமாகிய இன்பா தலைமையேற்று நடத்தினார். திலகபாமாவின் உரைக்கு முன்பாக விமர்சகரும் கட்டுரையாளரும் மொழிபெயர்ப்பாளருமான யமுனா ராஜேந்திரன் 'குறுந்திரைப்படங்களின் வரலாறு, அழகியல் மற்றும் அதனது அரசியல் ' குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஐரோப்பிய சினிமாவின் மேதைகளான நான்கு இயக்குனர்களின் குறும்படங்களைத் திரையிட்டு, குறும்படத்திற்கென உள்ள அழகியல் குறித்து அவர் விளக்கினார். இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து நெறிப்படுத்திய ஓவியையும் கவிஞையுமான ரஞ்சினி (பிராங்போட்), பெண்ணியப் படைப்பாளி என்பதுடன் புகலிடப் பெண்கள் சந்திப்பின் தீவிர பங்காளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளை அடுத்து நடைபெற்ற மதிய உணவின் பின், இன்றைய அரசியலின் மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகள் குறித்த உரைகள் இடம் பெற்றன. அப்பிரச்சினைகள் தலித் பிரச்சினை மற்றும் தேசிய இனப்பிரச்சினை என்பனவாகும். தலித்; பிரச்சினை குறித்ததாக 'எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம்; ' எனும் பொருளில் தமிழகத்திலிருந்து வந்திருந்த வழக்கறிஞரும் மனித உரிமையாளருமான ரஜனி உரையாற்றினார்;. இரண்டாம் நாள் இறுதி உரையாக 'இலங்கைச் சமூக முரண்பாட்டின் இன்றைய அரசியல் ' குறித்து அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் உரையாற்றினார். உரையினை அடுத்து விழாவின் இறுதி நிகழ்வாக தமயந்தியின் 'ஆதலினால் காதல் செய்வீர் ' இசை புகைப்படத் தகடு திரையிடப்பட்டு, அதன் மீதான விமர்சன உரையாடலை ஓவியர் கிருஷ்ணராஜாவும் யமுனா ராஜேந்திரனும் மேற்கொண்டனர். புகைப்படக்கலை தொடர்பான தனது படைப்பு வேதனைகளையும் உவகைகளையும் கலைஞர் தமயந்தி பகிர்ந்து கொண்டார்.

இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வுகளில் தலித்தியம் பற்றிய உரைக்கு அருந்ததியும் இலங்கை சமூக முரண்பாடுகள் குறித்த அமர்வுக்கு உதயகுமாரும் தலைமையேற்று முன்னுரைகள் வழங்கியதோடு ஆழ்ந்த அக்கறையுடன் அமர்வுகளை நெறிப்படுத்தவும் செய்தனர். உரைகளினதும் மதிய உணவினதும் நேரங்களில் கிடைத்த நிமிடங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி சாம்சனும் திலகபாமாவும் தாளலயத்துடன் ஆடியமை இன்னும் நினைவில் நிழலாடுகிறது.

ஓவியம், புகைப்படம் என நவீன கலைகளின் மீதான பிரக்ஞையை, பரவலாகிவரும் குறும் படங்கள் தொடர்பான அழகியல் பிரக்ஞையை, ஊட்டியதாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.

விளிம்புநிலை மக்களான மலையக மக்கள், முஸ்லீம் மக்கள், தலித் மக்கள் போன்றவர்கள் தேசியப் போராட்டத்தின் நிகழ்முறையினால்; மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது குறித்த அறவுணர்வை இந்த இலக்கியச் சநதிப்பு விவாதித்திருக்கிறது.

தங்குதடையைற்ற கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டிற்கான வெளியாக இந்த இலக்கியச் சந்திப்பு அமைந்திருந்தது. நிகழ்;வுகளின் தொடக்கத்தின் போதும் நிகழ்ச்சி முடிந்த பின்னாலும், இந்தச் சந்திப்பைத் தொடங்கி நடத்தி, தம்மிடையே இன்று இல்லாது போன தமது நண்பர்களான 'உயிர்நிழல் ' கலைச்செல்வன் மற்றும் சபாலிங்கம்;, உமாகாந்தன் போன்றவர்களை சந்திப்பின் நண்பர்களும் தோழர்களும்; நினைவு கூர்ந்தனர்.

அரசியல் சமூகப் பிரக்ஞையுடன் கலை இலக்கிய உணர்வையும் இணைத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்த மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து அகன்ற நண்பரகள் அன்றிரவே ரயில்களையும் விமானங்களையும் பிடிக்க வேண்டுமென அவசரப்பட்டபடி, கட்டித்தழுவி முத்தமிட்டு விடைபெற்றனர். இன்முகத்துடனும் கலகலப்புடனும் தோழமையுடனும் இறுக்கமின்றியும் நடைபெற்ற முப்பத்தியிரண்டாவது இலக்கியச் சந்திப்பு ஐரோப்பிய வாழ்வின் நெருக்கடியினுள் மூச்சுமுட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மிக ஆழ்ந்ததொரு நிம்மதியையும் மனஅமைதியையும் வழங்கியிருக்கிறது என்பதுவே இந்த இலக்கியச் சந்திப்பின் வெற்றிக்குச் சாட்சியமாக அமைகிறது. முப்பத்து மூன்றாவது இலக்கியச் சந்திப்பு 2006ம் ஆண்டு முற்பகுதியில் இலண்டன் மாநகரத்தில் நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். கோடை காலத்தில் இலண்டனில் சந்திக்கவென நண்பர்களும் தோழர்களும் மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து விலகியபடியிருந்தனர்.

இந்த 32வது இலக்கியச் சந்திப்பில் (13.11.2005) ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ழு அறமிழந்த கொடிய கொலைக் கலாச்சாரச் சூழலிலும் பண்பாட்டு பாஸிசத்துக்கும் நடுவில் என்றும் இல்லாதவாறு நமது தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் சிக்கியுள்ளன. கொலையாளிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் பின்னால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் அமைப்புகளும் இயக்கங்களும் நின்று கொண்டிருக்கின்றன. அனைத்துக் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசு அல்லது புலிகள் அல்லது வேறு எவராவது வழங்கும் கொலைத்தண்டனைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

ழு யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து 'பாலியல் தொழிலாளி ' என்ற குற்றச்சாட்டின் பேரால் கொல்லப்பட்ட சகோதரி சாந்தினியின் கொலைக்கு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.

ழு யோகேஸ்வரி என்னும் சிறுமியின்மீது பாலியல்வதை புரிந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கணேசலிங்கத்தையும் மற்றும் இது போன்று பெண்கள்மீது பாலியல் வதை புரிவோரையும் நாம் கடுமையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

ழு இலங்கையின் தங்களது தாயக பூமியான வடக்கிலிருந்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுமாறு வேண்டுகிறோம். அவர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு அனைத்து ஜனநாயக, மனித உரிமைச் சக்திகளையும் கேட்டுக் கொள்வதோடு, இக் கொடிய நிகழ்வுக்காக நாம் மீண்டும் வெட்கித் தலை குனிவதோடு மன்னிப்பும் கோருகின்றோம்.

ழு தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத்தியும் குஷ்புமீது பலவழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

31வது இலக்கியச்சந்திப்பு

31 வது இலக்கியச்சந்திப்பு.

புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்களினால் 1988 செப்ட்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச்சந்திப்பின் 31வது தொடர் 2004 நவம்பர் மாதம் 6-7 திகதிகளில் Berger Church Hall Karl-Schurz-Str. 39, 70190 Stuttgart, Germany இல்; நடைபெற்றது. வழக்கம் பொல ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

31 வது இலக்கியச்சந்திப்பில் பின்வரும் விடயங்கள் பற்றி உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

புலம்பெயர்நாடுகளில் தமிழ் அகதிகள் மீதான புதிய நெருக்கடிகள் (யோகநாதன் புத்ரா - ஸ்ருட்கார்ட்.ஜெர்மனி), தமிழ் ஊடகங்களும் அவை மீதான ஜனநாயகவிரோதப்போக்குகளும் (பரராஜசிங்கம் - பெர்லின். ஜெர்மனி) ; நூல்; அறிமுகம் , இலங்கை அரசியல் சமகால நிலவரம் (விஸ்வலிங்கம் சிவலிங்கம் லண்டன்), தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அதன் தாக்கங்களும் (பத்மபிரபா சுவிஸ்), உலகமயமாக்கலும் மூன்றாம் உலக நாடுகள் மீதான அதன் தாக்கமும் (அழகலிங்கம் கெரன்பேர்க், ஜெர்மனி) ஈ-புக் -ஒரு அறிமுகம். (கிரிதரன் - ஸ்ருட்காட்)

நூல் அறிமுகத்தின் போது சி.புஷ்பராஜா எழுதிய 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்", ஷோபாசக்தி எழுதிய 'ம்", மற்றும் பெண்கள் சந்திப்பு மலர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கெதிரான ஜனநாயகவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அடுத்த இலக்கியச்சந்திப்பு நோர்வேயில் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டது.

06.-07.11.04 ஆகிய தினங்களில் ஸ்ருட்கார்ட் நகரில் இடம்பெற்ற 31வது இலக்கியச் சந்திப்பின்போது கலந்து கொண்ட இலக்கிய ஆர்வலர்களினால் ஊடகங்களுக்கு அளிக்கப்படும் அறிக்கை

தமிழ்பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான சமாதானச் சூழல் திரண்டு வரும் இவ்வேளையில் இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பான சாதக, பாதக அம்சங்களை வெளிக்கொணரும் பணி ஊடகங்களைச் சார்ந்தது. கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடும் அடிப்படை உரிமைகளை இவ் ஊடகங்கள் கொண்டுள்ளன.

இந்த அடிப்படை உரிமைகளின் தார்ப்பரியத்தைக் கவனத்திற் கொண்டு இவ் ஊடகங்கள் சமூகப் பொறுப்புடனும், நேர்மையுடனும் இயங்க வேண்டும். ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் சுதந்திரமான, ஜனநாயகப+ர்வமான செயற்பாட்டை வலியுறுத்தும் அதேவேளை இவ் ஊடகங்கள் தமக்குரிய சுதந்திரத்தைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான வகையில் தனிமனித குரோதங்களையும், வன்முறைச் சொல்லாடல்களையும் மறைமுகமாகப் பயன்படுத்துவதோடு அவற்றை உற்சாகப்படுத்துபவனவாகவும் அமைந்து வருவது கவலைக்குரிய அம்சமாகும்.

மாற்றுக்கருத்துடையோர் மீது திட்டமிட்டு நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை இவ் ஊடகங்கள் உதாசீனப்படுத்தி இதற்குக் காரணமான வன்முறைச் சக்திகளை நியாயப்படுத்தியும், வன்முறைக்குள்ளானவர்கள் மீது கொச்சைத்தனமான புனைவுகளை உருவகப்படுத்தியும் செயற்படும் செயற்பாடானது ஊடகங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வியை எழுப்புகிறது.

எனவே ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளும், ஊடகங்களால் தூண்டப்படும் வன்முறைப் பிரச்சாரங்களும் சமாதானத்திற்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் பாதகமானது என்பதால் இப்போக்கை இலக்கியச் சந்திப்பு வன்மையாகக்; கண்டிக்கிறது.

இவ்வாறான சமூக விரோதப்போக்குகள் தமிழ்பேசும் மக்களின் ஒட்டு மொத்த ஜனநாயக விழுமியங்களையும் சமூக மாற்றத்தையும் பாதிக்கும் என்பதனையும் இத்தருணத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

நன்றி

இலக்கியச்சந்திப்பு
ஸ்ருட்கார்ட்
07.11.2004
(இலக்கியச் சந்திப்பு இணையத்தளத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது.)

30வது இலக்கியச்சந்திப்பு

19 - 20 ஏப்ரல் 2003
ஒல்போ - டென்மார்க்


(படங்கள் தமயந்தி, பரா)
30வது இலக்கியச்சந்திப்பு டென்மார்க், ஒல்போ நகரில் 19, 20 - 04- 2003 திகதிகளில் நடைபெற்றது.


தமயந்தி, புஷ்பராஜா ஆகியோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சேரன் (கனடா) புகைப்படக் காட்சியை தமது உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கு. பரராஜசிங்கம் (ஜேர்மனி);, 'இலக்கியச்சந்திப்பின் நோக்கும் அவசியமும்" பற்றிப் பேசினார். இலக்கியச்சந்திப்பின் வரலாற்றையும் அதன் தேவையையும் அவர் விளக்கினார்.

'புகலிடத் தமிழ் எழுத்துக்களின் இன்றைய நிலையும் வெளியும்" பற்றிப் பேசிய கலைச்செல்வன (பிரான்ஸ்);, புகலிடத்தில் பல பத்திரிகைகள் நின்று போனதிற்கான காரணங்களை ஆராய்ந்தார்.

'போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் தாக்கங்கள்" என்னும் நிகழ்வு பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியை நடத்திய உளவியலாளர் வீ. சிறிகதிர்காமநாதன் (டென்மார்க்) கேள்விகளுக்கு பல உபயோகமான பதில்களைத் தந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

சரவணனின் 'இலங்கைப் பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும்" என்னும் நூல் அறிமுகம் புஷ்பராஜா அவர்களால் செய்யப்பட்டது. இது இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு பற்றிப் பேசும் ஓரே ஒரு நூல் என்று கருதப்படுகிறது.

கவிஞர் முல்லையூரானின் 'சேலை" சிறுகதைத் தொகுப்பு கி. செல்த்துரையினால் (டென்மார்க்) விமர்சனம் செய்யப்பட்டது. தமது பேச்சில் இவர் பாவித்த ஆணாதிக்க வசனங்கள் சபையில் காரசாரமான உரையாடலை ஏற்படுத்தியது.

சுசீந்திரனின் (ஜேர்மனி) 'தேசிய இனங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கம்" என்ற உரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள், கரவைதாசனின் 'டென்மார்க்கில் இலக்கிய வெளிப்பாடுகள்" என்னும் உரையுடன் ஆரம்பமாகின.

டென்மார்க் பல்கலைக்கழக மாணவிகளால் வெளியிடப்படும் 'பாலம் அமைப்போம்" என்ற சஞ்சிகை கே. தர்சிகா, எஸ். கஜபாலினி, ஜே. ஏ. கௌசினி ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவது தலைமுறையினர் புகலிடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டன. . இதைத் தொடர்ந்து செ.சிறிகதிர்காமநாதன் 'புகலிடத்தில் இரண்டாம் தலை முறையினர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் - ஒர் உளவியல் பார்வை" எனும் விடயம் பற்றிப் பேசினார். இதைத் தொடர்ந்து மிகப் பிரயோசனமான விவாதம் நடைபெற்றது.

அசோக் கண்ணமுத்துவின் அசை-2, அடேல் பாலசிங்கத்தின 'சுதந்திர வேட்கை", 'றஸ்மியின் கவிதைகள்" ஆகிய நூல்கள் முறையே கு. பரராஜசிங்கம், சி. புஷ்பராஜா, கலைச்செல்வன் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டன.

இதன் பின்பு எஸ். மதி (டென்மார்க்) தனது உணர்ச்சி மிக்க கவிதைகளை வாசித்தார்.

புகலிடத்தில் தலித்தியம் - வெளிப்பாடு என்னும் விடயம் பற்றி சரவணன் (நோர்வே) உரையாற்றினார். புகலிடத்தில் சாதியத்த்தின் வெளிப்பாடுகள் பற்றி தெளிவாக விபரித்தார். இதைத் தொடர்ந்த விவாதத்துடன் இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

அடுத்த இலக்கியச்சந்திப்பை ஒல்லாந்தில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

27வது இலக்கியச்சந்திப்பு

27வது இலக்கியச்சந்திப்பு, மல்லிகை ஆசிரியர் தோழர் டொமினிக் ஜீவாவை சிறப்பு விருந்தினராக அழைத்ததின் மூலம் தனிக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது.

பிரான்ஸ், கார்ஜ் லே கொனஸில், 23-24.12.2001 அன்று நடைபெற்றது.

முதலாவது நிகழ்ச்சியாக சிறுசஞ்சிகைகள் விமர்சனம் இடம் பெற்றது. 'அம்மா", 'எக்ஸில்", 'உயிர் நிழல்", 'குளிர்" ஆகிய சஞ்சிகைகளை சந்துஸ் (ஜேர்மனி), அரவின்த் அப்பாத்துரை (பிரான்ஸ்), சுசீந்திரன் (ஜேர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோர் விமர்சனம் செய்தனர்.

'உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும்" - என். சண்முகசுந்தரம்,

'எதிர் இலக்கியம்" - சாரு நிவேதா,

'போரும் சமாதானமும்" - கே. பரராஜசிங்கம்

ஆகிய நிகழ்ச்சிகள் 23.12.2001 அன்று மாலை இடம் பெற்றன.

நீட்சே பற்றிய நிகழ்ச்சியுடன் 24.12.2001 நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நீட்சேயின் மூலங்கள் - ஒரு மார்க்சிய விசாரணை - தமிழரசன்

நீட்சேயும் நீட்சேயும் - வாசுதோவன் ஆகியேரது உரைகள் இடம்பெற்றன.

கலைச்செல்வன், டொமினிக் ஜீவாவின் பிரதிகள் மீதான ஒரு வாசிப்பு என்ற நிகழ்வை நடத்தி ஜீவாவையும் அறிமுகப்பமுத்தினார்!!!

மல்லிகை ஆசிரிர் டொமினிக் ஜீவாவின் சிறப்புரை பின் இடம் பெற்றது.

தன்னை எழுத ஊக்குவித்தது என்ன? தான் பட்ட இடர்கள்,

அனுபவங்கள், சாதி ஒடுக்கு முறை, தலித்தியம், மார்க்சியம் ....... இப்படியாக அவரின் பேச்சு விரிந்து கொண்டு சென்றது. உணர்ச்சிப் பெருக்கில் பலர் கண்ணீர் விட்டனர். இரண்டு மணி நேரம் நிகழ்ந்த பேச்சின் இறுதியில் சபையோர் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது மரியாதையையும் அன்புகலந்த நன்றியையும் தெரிவித்தனர்.

மூன்றாம் உலகநாடுகளும் அவற்றின் மீதான ஏகாதிபத்தியத் தலையீடும் என்ற விடயம் பற்றி ரி.உமாகாந்தன் உரைநிகழ்த்தினார்.

நூல் அறிமுகத்துடன் 27வது இலக்கியச்சந்திப்பு நிறைவு பெற்றது. அடுத்த இலக்கிச்சந்திப்பை நோர்வேயில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
(இலக்கியச் சந்திப்பு இணையத்தளத்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டது)